ஆண்ட்ராய்டு போன் ஆசை

ஆண்ட்ராய்டு போன் ஆசை

அரங்கம்-1
இடம்: வீடு.
மாந்தர்கள்: கணவன் மோகன், மனைவி நளினி, பிள்ளைகள் அருண், கவின், யாழினி.
(ஞாயிற்றுக்கிழமை.  மோகன், மனைவி நளினி, பிள்ளைகள் அருண், கவின் மகள் யாழினி எல்லோரும் மதிய உணவை ஆறஅமர உண்டு முடித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது) 

கவின்: அப்பா! ரெண்டு வருசமா ஒரு ஸ்மார்ட் போன் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஏம்ப்பா வாங்கித் தர மாட்டேங்கிறீங்க...?
மோகன்: அருண்! ஆண்ட்ராய்டு போன் மினிமம் 7,000 ரூபாய். திடீர்னு எங்கே போறது? சரி ! கூடிய சீக்கிரம் வாங்கித் தர்றேன்.
அருண்: (கவினைவிட இரண்டு வயது மூத்தவன்) அப்பா! எனக்கு ஏழாயிரம் ரூபாய்ல வேணாம். பதினோராயிரத்துக்கு வேணும். நல்ல கம்பெனியா, சூப்பர் மாடல் இருக்கு. அதுதாம்பா வேணும்.
மோகன்:  சரி ! சரி ! அதையே வாங்கிடுவோம். 
யாழினி:  அப்பா! எனக்கும் ஒரு ஸ்மார்ட் போன் வேணும். ஏழாயிரம் ரூபாய்ல... அது போதும் எனக்கு.
மோகன்: யாழினி! நீ இப்ப ஒன்பதாவதுதான் படிக்கிற... நீ ஆசைப்படலாமா? தேவையா ஒனக்கு...?
யாழினி: அப்பா... நெட்ல என்னோட ப்ரண்ட்ஸ் எல்லா சப்ஜெக்ட் லெஸனும் படிக்கிறாங்கப்பா... ஸ்மார்ட் போன் கையில இருந்தா மார்க்கூட நிறைய வாங்கலாம்பா... ப்ளீஸ்ப்பா...
மோகன்:  சரி சரி! பார்க்கிறேன். அருணுக்கும் கவினுக்கும் வாங்கும்போது முடிஞ்சா வாங்கலாம்...
நளினி: என்னங்க... நம்ம காலனி லேடீஸ் எல்லார்கிட்டேயும் ஆண்டிராய்டு போன் இருக்கு... எனக்கிட்ட மட்டும்தான் இல்லே. அவங்கள்லாம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூட்யூப்னு ஒவ்வொன்னையும் பற்றிப் பேசறதைப் பார்த்தா எனக்கும் ஆசை வருது.. அவங்களுக்கு வாங்கும்போது எனக்கும் வாங்கணுங்க. 
மோகன்: அதுதானே பார்த்தேன். என்ன இவ மட்டும் சும்மா இருக்காளேன்னு. ஆனா எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. நான் பதினைஞ்சு வருசமா வேலை பார்த்தும் இருபதாயிரம்தான் மாச சம்பளம் வாங்கறேன். ஆனாலும் உங்களுக்குப் போன் வாங்கித் தருவேன்.  ஒரு சீட்டு போட்டிருக்கேன். அது வரட்டும் பார்போம். 
நளினி: (ஆவலுடன்) சீட்டு எப்ப முடியும்? பணம் எப்ப வரும்?
மோகன்: அடுத்த மாசம் ஏலம் கேட்கணும். நாம எடுத்தா மூணு நாள்ல கிடச்சிடும்.  (எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது)

அரங்கம் -2
இடம்: வீடு
மாந்தர்கள்: மோகன், நளினி, பிரேம், அருண், கவின், யாழினி.

 
 (இரண்டு மாதங்களாக "சீட்டுப் பணம் வரட்டும்  வாங்குவோம்' என்றே மோகன் சொல்லி வந்தார். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் வெளியேயிருந்து சித்தப்பா... சித்தப்பா... என்று குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார் மோகன்.)
மோகன்: அட... பிரபு... வா... வா... நளினி பிரபு வந்திருக்கான். அருண் உன்னோட அண்ணன் வந்திருக்கான்.. யாழினி வந்து பாரு. பிரபு உள்ளே வா...
பிரபு:  சித்தப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
மோகன்:   ம்ம்...ம். மொதல்ல உள்ளே வா. என்ன திடீர்னு வந்து நிக்கிறே.. ஒரு போன்கூட இல்லே...
பிரபு: அவசரமான உதவி சித்தப்பா.. அதனாலதான் வந்தேன்.
மோகன்: என்ன உதவி?  என்னால முடிஞ்சதை அண்ணனுக்காக நான் செய்ய மாட்டேனா... சொல்லுப்பா. 
பிரபு: அது வந்து...  சித்தப்பா நான் பிளஸ்டூல 456 மார்க் எடுத்திருக்கேன். எங்க ஊர் பாலிடெக்னிக்கிலேயே சேரலாம்னு பார்க்கிறேன்.
மோகன்: வெரிகுட். நல்ல மார்க்.. நல்ல யோசனை... உங்கப்பா அதாவது என் அண்ணன் என்ன சொல்றார்?
பிரபு: அப்பா வேற என்ன சொல்லப்போறார்? போன வருஷம் வந்த  புயல்லே வீட்டை சுத்தி இருந்த தென்னை, பலா, வாழை, கரும்புன்னு எல்லாமே போயிடுச்சி. குடியிருந்த வீடும்தாண். நான் அப்பா, அம்மா, மாடுகள்தான் மிச்சம். "பாலிடெக்னிக்ல சேர இருபதாயிரத்துக்கு நாம எங்கேடா போறது... வேணும்னா என் தம்பிக்கிட்டப் போயி நிலமையைச் சொல்லுன்னு' என் கையிலே நூறு ரூபாயைக் கொடுத்து அனுப்பி வச்சாரு சித்தப்பா...! திடீர்னு வந்து உதவி கேட்கிறதுக்கு என்னை மன்னிச்சுடுங்க...
மோகன்:  பரவாயில்ல...பரவாயில்ல... கேட்க உனக்கு எல்லா உரிமை இருக்கு. அண்ணன்தானே என்னைப் படிக்க வச்சாரு. நளினி! நான் எதிர்பார்த்தது வந்துடுச்சி... நீங்க மூணு பேரும் உள்ளே போய் கலந்து பேசிட்டு வாங்க... ஆண்ட்ராய்டு போனா? எஜுகேசனுக்கு உதவுறதான்னு? 
நளினி: மூனு பேரும் உள்ளே வாங்க... உங்க விருப்பத்தை  சொல்லுங்க... பிரபு நீ சித்தப்பாவோட பேசிக்கிட்டிரு. இதோ வந்துடறோம்... 
(முன் அறையில் பிரபு அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டிருக்க, நளினி மூன்று பிள்ளைகளுடன் திரும்பி வருகிறாள்)
மோகன்:  நளினி!  மூனு பேரும் என்ன சொல்றாங்க? 
நளினி: அதை நான் சொல்றதைவிட அருண், யாழினியே சொல்லட்டும். 
யாழினி: அப்பாக்கிட்ட நீயே சொல்லு அருண்!
அருண்: அப்பா! ஆன்ட்ராய்டு போன் மீது எனக்கும் தங்கச்சிக்கும் அபார ஆசைதான். ஆனா அதைவிட பிரபு அண்ணா மேல படிக்கிறது ரொம்ப முக்கியமில்லையா...?
யாழினி:ஆமாம்பா... உங்களை படிக்கவச்ச பெரியப்பா குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணுங்க. அந்த அண்ணனைப் படிக்க வைங்க. 
நளினி:  ஆமாங்க... பிரபு படிச்சு முன்னேறி ஒரு நல்ல வேலைக்குப் போனா அவனே தம்பி தங்கச்சிக்கு வாங்கித் தந்துட்டுப் போறான்.
மோகன்:  வெரிகுட். நல்ல முடிவு. பிரபு... அட்மிஷனுக்குள்ள புல் அமெüண்டும் நான் தர்றேன். மாசா மாசம் மற்ற செலவுகள் இருக்குமேப்பா... அதுக்கு வழி?
பிரபு: சித்தப்பா!  வாழை போட்டிருக்கோம். எல்லாம் தார் விட்டிருக்கு... தர்பூசணியும் போட்டிருக்கோம். அப்பப்ப ஆடு, கோழிங்களை வித்து அம்மாவும் பணம் தர்றேன்னாங்க. விடியக்கால கொஞ்ச நேரம் வீடுகளுக்கு நியூஸ் பேப்பர் போடலாம்னு இருக்கேன் சித்தப்பா. இனிமே அடிக்கடி  இங்கே வந்து உங்கக்கிட்டே பணம் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன்.
மோகன்:  ஏம்பா அப்படி சொல்றே? எப்பவேணா வா!  இது உன்னோடு வீடு. அடிக்கடி வந்து போயிக்கிட்டிரு.
யாழினி:ஆமாண்ணா! நீங்க நல்லா படிச்சு முன்னேறி பெரியப்பாவையும், பெரியம்மாவையும் கவனிச்சுக்கோங்க... எங்களுக்கு அது போதும்.
அருண்:  அண்ணா... வேலைக்குப் போனதும் உங்க முதல் சம்பளத்துல எங்களுக்கு மறக்காம ஆன்ட்ராய்டு போன் வாங்கித் தந்துடுங்க... சரியா...?
 

(ஓகே என பிரபு தலையாட்ட, எல்லோரும் அவனை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார்கள்)
 

-திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com