மீனுவின் உற்சாகம்!

மீனுவின் உற்சாகம்!

காட்சி - 1
(இடம்: மீனுவின் வீடு)
(மாந்தர்கள்: மூன்றாம் வகுப்பு படிக்கும் மீனு, மீனுவின் அம்மா சசிகலா)

(காலை ஏழு மணி. மீனுவின் படுக்கையறைக்குள் அம்மா நுழைகிறார். மீனு தூங்கிக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்குக் கோபம் வருகிறது)
சசிகலா: மீனு! மணி ஏழு ஆச்சு. பரிட்சைக்குக் காலைல எழுந்து படிக்கிறேன்னு சொன்னே. எப்படிப் படிக்கப் போற?
மீனு:  மணி ஏழாயிடுச்சா? இன்னிக்கு வேன் வேற சீக்கிரமா வந்துடுமே! லேட்டாயிடுச்சே! படிக்கிறதுக்கு டைம் இல்லையேம்மா... என்ன பண்றது?
சசிகலா: நைட் படிக்கச் சொன்னாலும் கேட்க மாட்டங்கிறே. காலைல சீக்கிரம் எழுந்து படிக்கச் சொன்னாலும் சீக்கிரம் எழுந்திருக்கிறதில்ல...  அப்பாவோட செல்ஃபோனை வச்சு விளையாடிட்டு இருக்கே. உனக்கு என்ன தெரியுமோ அதை எழுதிட்டு வா. 
(மீனு அவசர எழுந்து தயாரானாள். சாப்பிடக்கூட நேரமில்லை. வாசலில் வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் அரக்கப் பரக்க ஓடிச் சென்று வேனில் ஏறிக் கொள்கிறாள்)


காட்சி - 2
(இடம்: வீடு. மீனு பள்ளியிலிருந்து திரும்பி வருகிறாள்)
அம்மா: என்ன மீனு, முகம் எல்லாம் வாடிப் போயிருக்கு... பரீட்சை சரியா எழுதலயா?
மீனு: ஆமாம்மா! நாற்பது மார்க்தான் கிடைச்சுது.
அம்மா:  நீதான் ஒழுங்கா உட்கார்ந்து படிக்கவே மாட்டேங்கிறியே. சரி சரி! அடுத்தமுறை நிறைய மார்க் வாங்கணும் சரியா?
மீனு: சரிம்மா. 
(மீனாவை எப்படித் திருத்துவது என்று அவளது அம்மா யோசித்துப் பார்த்தார். அடுத்து மூன்று நாள்களுக்கு  பள்ளி விடுமுறை. மீனுவின் அம்மாவுக்கு ஒரு யோசனை வந்தது. இரவு சாப்பிட்டுவிட்டு மீனு உறங்கச் செல்கிறாள். அப்போது மீனுவின் அம்மா படுக்கையறையின் உள்ளே நுழைகிறார்)
அம்மா:  மீனு! நாளைக்கு உனக்கு ஸ்கூல் லீவுதானே! நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருச்சா நாம ரெண்டு பேரும் சேர்ந்து தோட்ட வேலை செய்யலாம்.
மீனு: கார்டனிங்ஙா? சூப்பர்மா! எனக்கு ரெம்பப் பிடிக்கும்.
அம்மா: ஆமா மீனு! நம்ம தோட்டத்துல நிறைய காய்கறிகள் காய்ச்சிருக்கு. நாம நாளைக்கு அதையெல்லாம் பறிச்சு சமைக்கலாம். ஆனா ஒண்ணு, நீ காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும். 
மீனு: கண்டிப்பா எழுந்திருப்பேன்மா!

காட்சி - 3
(இடம்:  வீடு) 
(இரவு சொன்னது போலவே மீனு அதிகாலை எழுந்துவிட்டாள். அம்மாவும் மீனுவும் வீட்டின் பின்பிறம் இருந்த தோட்டத்திற்குச் சென்றார்கள்)
அம்மா:  மீனு, முதலில் தோட்டத்துக் குப்பைகளைப் பெருக்கலாம்.  அப்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றலாம். பிறகு காய்கறிகளைப் பறிக்கலாம்.
மீனு: சரிம்மா, நான்தான் காய்கறிகளைப் பறிப்பேன்.
(இருவரும் தோட்டத்தை சுத்தம் செய்துவிட்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபிறகு,  காய்கறிகளைப் பறித்தார்கள். தோட்டத்தில் வேலை செய்தது மீனுவுக்கு ரெம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.)
அம்மா: மீனு, இன்னிக்கு நீ சமையல்ல உதவி பண்ணணும். அப்புறம் உன் தங்கை பானுவையும் கவனிச்சுக்கணும்.
மீனு: சரிம்மா! நிச்சயம்  செய்யறேன்.
(அம்மா சமையல் செய்யும்போது மீனுவும் நிறைய உதவிகள் செய்தாள். குட்டித்தங்கை பானுவைக்  கவனித்துக் கொண்டாள். மாலையில் சிறிது நேரம் விளையாடினாள். பிறகு பாடம் படித்தாள். அன்றைய தினம் மீனுவுக்கு இனிமையாகக் கழிந்தது. அன்று இரவு மீனு தூங்கச் சென்றாள். அப்போது அம்மா மீனுவை அழைத்தார்)
அம்மா:   மீனு, நாளைக்குக் காலைலயும் சீக்கிரம் எழுந்திருப்பியா? ரெண்டு பேருமா சேர்ந்து ஹால், அலமாரி, டிவி எல்லாத்தையும் க்ளீன் பண்ணலாம்.
மீனு:  என்னோட பொம்மை, புக்ஸ் எல்லாத்தையும் பானு கலைச்சுப் போட்டிருக்காம்மா. அதையெல்லாம் நான் அடுக்கி வைக்கணும். அதனால நாளைக்கு சீக்கிரமா எழுந்திருச்சுடுவேன்.

காட்சி - 4
(இடம்: மீனுவின் வீடு)
(மாந்தர்கள்: மீனு, அம்மா)
(மறுநாளும் சீக்கிரமே மீனு எழுந்துவிட்டாள். மீனுவும் அம்மாவும் வரவேற்பறைக்கு வந்தார்கள்)

அம்மா: மீனு, உன்னோட புத்தக அலமாரியை நீயே சுத்தம் செய். புத்தகங்களை எல்லாம் அடுக்கி வை. அப்புறம் நான் வீட்டைக் கழுவித் துடைக்கும்போது எனக்கு உதவி பண்ணணும்.
மீனு: ஓகேம்மா. 
(அம்மா சொன்ன அத்தனை வேலைகளையும் அழகாகச் செய்து முடித்தாள். அன்றைய பொழுதும் இனிமையாகக் கழிந்தது. அன்று நிறைய வேலைகள் செய்த களைப்பினால் மீனு இரவில் சீக்கிரமே தூங்கச் சென்றாள். அப்போது அம்மா மீனுவிடம் வந்தார்)
அம்மா:  மீனு, நாளைக்கும் காலைலயும் சீக்கிரம் எழுந்திருப்பதானே? நாளைக்கு உன் குட்டித்தங்கை பானுவை நீதான் குளிப்பாட்டி டிரெஸ் பண்ணி விடணும். அப்புறமா உன்னோட நண்பர்களை வரச் சொல்லு. அவங்க எல்லாரும் நம்ம வீட்ல சாப்பிடட்டும். அப்புறமா நீங்க பக்கத்து பூங்கால போய் விளையாடலாம்.. சரியா?
மீனு: வாவ்! அப்படின்னா நாளைக்குக் காலையில ரொம்ப சீக்கிரம் எழுந்திருச்சுடுவேன்... 


காட்சி - 5
(இடம்: மீனுவின் வீடு)

(மாந்தர்கள்:  மீனு, தங்கை பானு,  அம்மா,  மீனுவின் நண்பர்கள்)
(அன்றும் சீக்கிரம் எழுந்த மீனு, அம்மாவுக்கு சில உதவிகள் செய்தாள். பிறகு தங்கை பானு எழுந்ததும் தானே குளிப்பாட்டி, உடை உடுத்தினாள். பிறகு நண்பர்களான வித்யா, ஆகாஷ், மனோ, சுனிதா எல்லாருக்கும் ஃபோன் செய்து அவர்களை வரச் சொன்னாள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். பிறகு எல்லாரும் அருகிலிருந்த பூங்காவிற்கு விளையாடச் சென்றார்கள். அம்மா பானுவையும் அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு வந்தார். பானுவும் மீனுவோடு சேர்ந்து விளையாடினாள். நேரம் கடந்ததே தெரியவில்லை. மாலைப்பொழுது வந்தது. நண்பர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்கள். வீட்டுக்கு வந்த மீனுவை அம்மா தன் அருகில் அழைத்தாள்.)
  அம்மா: மீனு! நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல?
மீனு: ஆமாம்மா! மூணுநாள் லீவு ஓடியே போச்சு.
அம்மா:   மூணு நாள் லீவுலயும் நீ காலைல சீக்கிரமா எழுந்துட்டல்ல மீனு! ஸ்கூல் இருந்தா சீக்கிரம் எழுந்திருக்கமாட்டே. லீவு நாள்ல எழுந்திருச்சுட்டே. ஏன்னு புரிஞ்சுதா?
மீனு: புரியலயேம்மா...
அம்மா:  வீடு சுத்தம் பண்றது, தங்கச்சியைக் கவனிச்சுக்கிறது, விளையாடுறது எல்லாமே உனக்குப் பிடிச்சிருக்கு. அதனால காலைல நீ சீக்கிரமா எழுந்து அந்த வேலைகளைச் செய்துட்டே. ஆனா ஸ்கூல் போறது, படிக்கிறது எல்லாம் உனக்கு போரடிக்கிற விஷயமா இருக்கு. அதனால அதை தாமதப்படுத்துற.
(அம்மா பேசுவதையே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவே தொடர்ந்து  பேசினார்)
அம்மா:  எல்லா வேலைகளையும் விரும்பிச் செய்தா எல்லாத்தையும் உற்சாகமாகச் செய்ய முடியும். நீ ஸ்கூல் போறதையும், படிக்கிறதையும் விரும்பினா தினமும் காலைல சீக்கிரமா எழுந்துடுவே. செய்ய வேண்டிய எல்லாத்தையுமே உற்சாகமா செய்தா வெற்றி அடைய முடியும். புரிஞ்சுதா?
மீனு: புரிஞ்சுதும்மா. இனி தினமும் சீக்கிரமா எழுந்து என்னோட வேலைகளை உற்சாகமா செய்வேன். 


காட்சி - 6
(இடம்: மீனுவின் அறை)
(மாந்தர்கள்:  மீனு, அம்மா)

அம்மா:  என்ன மீனு, படிச்சுட்டிருக்கிறியா?
மீனு:  ஆமாம்மா. ஐந்தரை மணிக்கே எழுந்துட்டேனே. இப்ப படிச்சு முடிச்சுடுவேன். அப்புறம் உங்களுக்கு வந்து ஹெல்ப் பண்றேன். 
அம்மா:  கிச்சன் வேலையை நான் பார்த்துக்கிறேன்... நீ சீக்கிரமா ஸ்கூலுக்கு ரெடியாகு.
(மீனு ரெடியாகி ஹாலுக்கு வந்தாள். சற்று நேரத்தில் ஸ்கூல் வேன் வந்தது. அதிலிருந்த குழந்தைகள் மீனுவை மகிழ்ச்சியாக வரவேற்றனர். இன்று மீனு மிகவும் உற்சாகமாய் புத்துணர்சியோடு பள்ளிக்குச் சென்றாள்.)
(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com