நூல் புதிது

நூல் புதிது

அறிவு சூடி (மாணவ மாணவிகளுக்கான சிந்தனை விதைகள்) - கருமலைப்பழம்நீ; பக்.64; ரூ.30; மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-18; தொடர்புக்கு:9841436213.

சிறுவர்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒளவைப் பாட்டி ஓரடி, ஈரடியில் பாடல்களை எழுதினார். அதை "ஆத்திசூடி'யாகத் தந்தார். அதேபோல இந்நூலும் இரண்டு வரிகளில் "அறிவுசூடி'யாக மலர்ந்துள்ளது. 

அன்பே பெருநிதி / அமைதியே நல்வழி; வன்மையும் கொள்/ வாய்ப்பை விடேல்; பண்பாட்டை மறவேல்/ படித்ததில் தேர்வு செய்; இளமையை இனிதாக்கு/ இருக்கும்போதே வாழ்த்து; சித்திரம் பழகு/ சிறுமையை நீக்கு - என சிந்திக்க வைக்கும், சிறுவர்களின் அறிவைத் தீட்டும் 308  அறிவுப் பாக்கள் எளிய தமிழ் நடையில் தரப்பட்டுள்ளன.

குகைக்குள் பூதம் (கதைகள்) - ஹரிவர்ஷினி ராஜேஷ்; பக். 96; ரூ.80; மகேஸ்வரி பதிப்பகம், 3/350, கால்நடை மருத்துவமனை பின்புறம், விருதுநகர்-626 001. தொடர்புக்கு: 8526769556.

ஹரிவர்ஷினி எழுதிய ஒன்பது கதைகளும், அந்தக் கதைகளுக்கு இவருடைய சகோதரி வர்த்தினி வரைந்த ஓவியங்களும் அருமை.  சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தட்சன் சாதித்தானா? தோழியின் மீது கோபப்பட்ட ரக்ஷியின் கோபம் தணிந்ததா? படிக்கும் ஆர்வம் கொண்ட முகிலனின் விருப்பம் நிறைவேறியதா? வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு வாணியும் ராணியும் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன என்பதை எல்லாம் கதைக் கருவாக்கிக் கற்பனை கலந்து தந்திருக்கிறார். இந்நூலிலுள்ள ஒன்பது கதைகளிலும் ஏதோ ஒரு கருத்தை முன்வைத்து அசத்தியிருக்கிறார் சிறுமி. படித்தால் உங்களுக்கே புரியும்!

கொக்கரக்கோ... (பாடல்கள்) - கீதா மதிவாணன்; பக்.80; ரூ.75; லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.

'தமிழில் பாட்டுப் பாடுவோம்' என்பதில் தொடங்கி, இயற்கை, பறவைகள், விலங்குகள், விளையாட்டு, திண்பண்டம், காய்கறிகள், ஓவியம் என நாற்பது பாடல்களும்; பத்து கதைப் பாடல்களும் என மொத்தம் ஐம்பது பாடல்கள் இந்நூலில் உள்ளன.

அழும் பாப்பாவின் அழுகையை நிறுத்துவதற்காக பாப்பாவுக்கு எதையெல்லாம் தருவேன் என்பதை ஒரு பாடல் பட்டியலிடுகிறது. எறும்புக் கடிக்கு பயந்துபோன சுண்டெலி என்ன செய்தது என்பதையும்,  கூடு கட்டுவதற்காகக் காகம் தேடிய மரம் எது என்பதையும் அழகாகப் பாடியுள்ளார் நூலாசிரியர். 'அக்கா அக்கா தேனக்கா / அங்கே இருப்பது யாரக்கா? பச்சைக் கிளிதான் பாரப்பா / கொஞ்சும் குரலைக் கேளப்பா' என்ற பாடல் (க், ங், ச், ஞ்) மெய்யெழுத்துகளைக் கொண்டு சிறப்பாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com