செய்திச் சிட்டு!

அமைதியாக வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு! முகத்தில் ஒரு சோகம்! உற்சாகமாக வரவேற்ற பிள்ளைகள் சிட்டின் சோகமான முகத்தைப் பார்த்ததும், ""என்ன ஆச்சு...?'' என்று கேட்டனர்.
செய்திச் சிட்டு!


அமைதியாக வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு! முகத்தில் ஒரு சோகம்! உற்சாகமாக வரவேற்ற பிள்ளைகள் சிட்டின் சோகமான முகத்தைப் பார்த்ததும், ""என்ன ஆச்சு...?'' என்று கேட்டனர்.

""கொஞ்சம் பழைய செய்திதான்... சொல்றேன் கேளுங்க... சில மாதங்களுக்கு முன்னாலே நான் பசிபிக் கடல் ஓரமா இருக்கிற கலிபோர்னியா துறை முகத்துக்குப் பக்கத்திலே இருக்கிற "ஹண்டிங்டன்' கடற்கரை ஓரமா பறந்துக்கிட்டு இருந்தேன். அப்போ, கடற்கரையில் கருப்புக் கருப்பா எண்ணைக் கசிவுகளைப் பார்த்தேன். சில மீன்கள் செத்துக் கிடந்தன. பல பறவைகளும் அதேபோல் செத்துக் கிடந்தன...''

""எண்ணைக் கசிவாலேயா?'' என்று கேட்டாள் மாலா.

""ஆமாம். கலிபோர்னியாவை ஒட்டிய பல கடற்கரைகளில் பல நாள்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதியை மறுத்து விட்டது அரசு. பாவம் பறவைகளின் இறக்கைகளில் எண்ணைக் கசிவுகள் ஒட்டிக்கொண்டு பறக்க முடியாமல் அவை இருந்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வெகுதூரம் பறக்கும் புலம் பெயரும் பறவைகள் அவை''

""அடப் பாவமே... எப்படி அந்த எண்ணைக் கசிவு ஏற்பட்டது?'' என்று கேட்டான் பாலா.

""கலிபோர்னியாவிலேயிருந்து சாண்டியாகோவிற்கு குரூட் எண்ணெய்யைக் கொண்டு செல்லும் குழாய்கள் ஒன்றில் சுமார் 13 அங்குலம் அளவிற்குப் பிளந்திருந்தது. அதிலிருந்துதான் இந்த எண்ணைக் கசிவு!'' என்று சோகமாகக் கூறியது சிட்டு. 

""எவ்வளவு  எண்ணெய் கசிந்தது?'' என்று கேட்டான் ராமு.

""சுமார் 6,50,000 லிட்டர்! இதை அறிந்த தன்னார்வலர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்களால் முடிந்த அளவு பாதிக்கப்பட்ட பறவைகளைக் காப்பாற்றினர். இந்த எண்ணைக் கசிவு கடல் தாவரங்களையும் விட்டு வைப்பதில்லை. மேலும், கடற்கரையில் ஏராளமான எண்ணெய்க் கசிவுகளை அலைகள் கொண்டு சேர்ப்பதால் அங்குள்ள சதுப்பு நிலக் காட்டுத் தாவரங்களும் இறந்து விடுகின்றன. அதுமட்டுமில்லை... கடலில் உண்டாகும் சுனாமி போன்ற பேரலைகளை ஊருக்குள் வராமல் தடுப்பது இந்த சதுப்பு நிலக் காடுகளில் உள்ள மரங்கள்தான். கடலை ஒட்டி வளரும் இந்தத் தாவரங்கள் அலையின் வேகத்தைத் தடுத்து சமனப்படுத்திவிடுகின்றன.''

""அப்போ சுனாமிப் பேரலைகளால் பாதிப்பு ஏற்படாம நம்மைப் பாதுகாப்பது இந்த சதுப்பு நிலத் தாவரங்கள்தானா?'' என்று ஆர்வத்தோடு கேட்டாள் மாலா.

""அதிலென்ன சந்தேகம்? ஹண்டிங்டன் கடற்கரை சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், "இயற்கை நமக்குக் கொடுத்த வரம் இந்த சதுப்பு நிலக்காடுகள். இந்தக் காடுகள் அழிந்தால் கடல் அலைகளால் ஏற்படும் கடல் அரிப்பும் அதிகரிக்கும்.  தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது. இதுவரை 44 எண்ணைக் கசிவு விபத்துகள் உலகில் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க நாம் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்' அப்படீன்னு சொன்னாரு...''

""ஹப்பா... கொஞ்சம் நிம்மதியா இருக்கு! இன்னைக்கு முக்கியமா கடற்கரையோட சதுப்பு நிலத் தாவரங்களின் முக்கியத்துவத்தை நான் தெரிஞ்சுகிட்டேன்!'' என்றாள் லீலா. 

மாலா கையிலிருந்த முந்திரிப் பருப்பை நீட்ட, சிட்டு அவற்றைச் சுவைத்துவிட்டு பிள்ளைகளிடம் விடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com