"பொய்த்துப் போனதோ பொய்க்கால் குதிரையாட்டம்?'

  கிராமத்தில் கோயில் திருவிழா என்றால், கரகாட்டம், காவடியாட்டம்,  பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று கிராமிய நடன நிகழ்ச்சிகளுடன்,  சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன.  இர
"பொய்த்துப் போனதோ பொய்க்கால் குதிரையாட்டம்?'
Updated on
2 min read



கிராமத்தில் கோயில் திருவிழா என்றால், கரகாட்டம், காவடியாட்டம்,  பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று கிராமிய நடன நிகழ்ச்சிகளுடன்,  சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன.  இருந்தாலும், எங்கள் கலைக்கு என்றுமே மவுசு உண்டு என்று தெரிவிக்கிறார் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடும் கலைஞரான மதுரையைச் சேர்ந்த எம். பாண்டி. 26 வயது இளைஞரான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இக் கலையில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை இந்திய நகரங்களிலும், வெளிநாட்டிலும்

நடத்திக் காட்டியுள்ளார்.

அவரைச் சந்தித்தோம்.

""எனது தந்தை மோகனும் பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய ஆட்டங்களை ஆடி வருகிறார். சென்னைக்குச் சென்று, அங்கு கே.டி. பெருமாள் என்ற கலைஞரிடம் இக் கலையைக் கற்றுக் கொண்டார். தற்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

  6-ம் வகுப்பு வரை படித்துள்ள நான், கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

  அரசு விழாக்களில் பொய்க்கால் குதிரையாட்டம் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். அதுபோல, தென்னக கலைப் பண்பாட்டு மையம் போன்றவை கிராமியக் கலைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இத் துறை அதிகாரிகள் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். கனிமொழி எம்.பி. சங்கமம் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அதற்குப் பின்னர், இத்தகைய கலைகள் சற்று பிரபலமடைந்தன என்றே சொல்லலாம். அரசு அமைப்புகள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியப் பாரம்பரிய நடனங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த ஊக்கமளித்து வருகின்றனர். எனக்கும் வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

  இக் கலையை இன்று பலரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இத்தகைய கிராமியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். திருச்சியில் ஒரு கல்லூரியில் இக் கலை குறித்த பயிற்சியை அளித்தோம். மதுரையில் பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். அதுபோல, ஜவகர் கலை மன்றம் சார்பில் மதுரையில் 25 மாணவ, மாணவியருக்கு இக் கலைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம் என்று புன்னகையுடன் கூறுகிறார் பாண்டி.

  இதுமட்டுமல்ல, "சரவணா', "பாண்டி', "படிக்காதவன்', "குசேலன்', "சுப்பிரமணியபுரம்' உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் இக்கலையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

  குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிட்டால், இக் கலை வளர்ந்துள்ளது. இதை ரசிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். கற்றுக் கொள்ள ஏராளமானோர் முன் வருகின்றனர். தற்போது பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுபவர்கள் 200 பேர் உள்ளனர்.

  மக்கள் ரசிக்கிறார்கள், மகிழ்கிறார்கள். ஆனால், எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. ஒரு நிகழ்ச்சி நடத்தினால், அதாவது ஒரு மணி நேரம் காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடினால், 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதற்காக காலில், 2.5 அடி, 4 அடி, 6 அடி உயரக் கட்டைகளைக் கட்டிக் கொண்டு ஆடும்போதும், நடக்கும்போதும், நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது.

  ஒருமுறை கேரள மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்தோம். அப்போது காலில் கட்டிய கட்டையுடன் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் எங்களை நடத்திக் கூட்டிச் சென்றனர். அச் சமயத்தில் காலில் ஏற்பட்ட வலி பல நாள்கள் நீடித்தது.

  திருவிழாக்கள் நடைபெறும் பங்குனி மாதத்திலிருந்து 6 மாதங்கள் வரைதான் இத் தொழிலில் ஈடுபடுவோம். மற்ற 6 மாதங்களில் வேறு தொழிலை நாட வேண்டிய நிலை. எங்களது கோரிக்கை எல்லாம், இக் கலை அழியக் கூடாது. இதற்காக, அதிக நிகழ்ச்சிகள் நடத்த அரசு எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் இக் கலை வளர நிர்வாகத்தினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அரசு பல்வேறு உதவிகளை வழங்கி, இக் கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார் பாண்டி.

  பா. ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com