குழந்தை ​ விஞ்ஞானிகள்..!

உச்சி வெயில் காயும் மதுரையில், ஓர் பரபரப்பான பிற்பகல் வேளை..! சாலையோரம் மாணவ, மாணவியர் சிலர் நின்றுகொண்டு சத்தமாக ஒலியெழுப்பியபடி செல்லும் ஷேர் ஆட்டோக்களை உன்னிப்பாகக் கவனித்துக் குறிப் பெடுத்துக் கொண
குழந்தை ​ விஞ்ஞானிகள்..!

உச்சி வெயில் காயும் மதுரையில், ஓர் பரபரப்பான பிற்பகல் வேளை..!

சாலையோரம் மாணவ, மாணவியர் சிலர் நின்றுகொண்டு சத்தமாக ஒலியெழுப்பியபடி செல்லும் ஷேர் ஆட்டோக்களை உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்

பெடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தவுடன், இந்த நேரத்தில் இவர்கள் பள்ளி செல்லாமல், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் நமக்குத் தோன்றியது.. அவர்களை அணுகி, மெதுவாக விசாரித்தோம்.. அவர்கள், ஆர்வமுடன் விளக்கத் தொடங்கினர்.

எவ்வளவு அரிய உண்மைகளை, அந்த கிராமப்புறப் பள்ளி மாணவ, மாணவியர் கண்டறிந்துள்ளனர்

என்பதை அறிந்தவுடன், நமது விழிகள் வியப்பால்

விரிவடைந்தன..! சாலைகளில் நம்மை மிரள வைத்து, கீழே விழ வைப்பது போல, விரைவாகக் கடந்து

செல்லும் ஷேர் ஆட்டோக்கள்தான் அவர்களது

ஆராய்ச்சிக்கான கருப்பொருள்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் டிச. 27-ம் தேதி 17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் மதுரை மாவட்டம், அச்சம்பத்தைச் சேர்ந்த கலிலியோ துளிர் இல்ல மாணவ, மாணவியரான என். நவிணா, ஆர். மதிவாணன், ஆர். பாலமுருகன், எஸ். நவீண், கே. சதீஷ்குமார் ஆகியோர் தான், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.ஷேர் ஆட்டோ குறித்து மாவட்டத்தில் அவர்கள் நடத்திய ஆய்வு மூலம் தொகுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை, இன்று இளம் விஞ்ஞானிகளாக அவர்களை அடையாளம் காட்டி உள்ளது.

"லட்சியமில்லாத வாழ்க்கை, சுக்கான் இல்லாத படகு போல' என்பதை இளம் பருவத்திலேயே அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளது, ஆர்வமாக அவர்கள் ஆய்வு குறித்து விவரித்தபோது உணர முடிந்தது.

ஷேர் ஆட்டோக்கள் குறித்து மாணவியர் நடத்திய சர்வேயில், பல அரிய உண்மைகள் தெரியவந்துள்ளன.

ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு "ஷேர் ஆட்டோவினால் ஏற்படும் பிரச்னைகள்'.

மக்கள் நினைத்த இடத்தில் ஏறி, இறங்க முடிகிறது. கட்டணமும் குறைவு என்றுதான் ஷேர் ஆட்டோக்கள் குறித்து பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இவர்கள் ஆராய்ச்சி மூலம் ஷேர் ஆட்டோவால் நன்மைகளை விட தீமைதான் அதிகம் எனக் கண்டறிந்துள்ளனர். மதுரை பகுதியில் மொத்தம் 13 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.

இம் மாணவ, மாணவியர் ஆய்வைத் தொடங்கும் முன் ஆட்டோ ஓட்டுநர், பயணிகள், தினமும் ஆட்டோ செல்லும் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எனப் பகுதி, பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்த முக்கியத் தகவல், ஷேர் ஆட்டோவால்

முதலில் பாதிப்புக்குள்ளாவது அதன் ஓட்டுநரே..!

ஆட்டோவிலிருந்து அதிகப்படியாக வெளியாகும் கார்பன் புகையால், அவரது உடல் நலம் நாளுக்குநாள் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோ என்ஜின் எழுப்பும் அதிகபட்ச ஒலியால், ஓட்டுநர் செவித்திறனை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்தபடியாக மாணவியர் ஓர் நாணயத்தை தெருவோரத்தில் சுற்றி விடுகின்றனர். ஆட்டோ செல்லும்போது, நாணயத்தின் சத்தம் சிறிதும் இன்றி, ஆட்டோவின் ஒலியே அதிகமாகக் கேட்கிறது. இதனால், ஆட்டோ செல்லும் பாதையில் உள்ள மக்கள் உரக்கக் கத்தினால்தான், பேசுவது புரிகிறது. மேலும் மக்களின் செவித்திறனும் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வை நடத்தி உள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மிகச் சிறந்த கட்டுரையாகத் தேர்வாகி உள்ளது.

இம்மாணவியரை வழிநடத்தும், மதுரை மாவட்ட "துளிர்' அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் எம்.தியாகராஜன் கூறுகையில், ""அண்டை மாநிலங்களில் இருந்து, இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளை தேசிய அளவிலான போட்டிகளில் சமர்ப்பிக்கும் மாணவர்களை, அந்தந்த மாநில அரசுகள் வெகுவாக ஊக்குவிக்கின்றன. இதனால், அவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று சாதனை படைக்கின்றனர்.

அதேபோல, தமிழக அரசும் இதுபோன்ற ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை அடையாளங்கண்டு, அவர்களை நன்கு ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார்.

கிரிக்கெட்டிலும், சினிமா, டி.வி. கேளிக்கைகளிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் இன்றைய மாணவர்கள் மத்தியில், வெற்றிபெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு, விடாமுயற்சியுடன் ஆராய்ச்சி செய்து, இளம் விஞ்ஞானிகளாகப் பட்டம் வாங்கிய இந்த மாணவ, மாணவியர் சரியான திசையில் வழி நடத்தப்பட்டால் நாளைய அப்துல் கலாமாகவோ, கல்பனா சாவ்லாவாகவோ மிளிர்வர் என்பதில் சந்தேகமில்லை..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com