பிரபலங்களின் கிராமங்கள்: ரிங் டாக்கீஸ் காதலன்!

கிராமங்களின் வருத்தம், சஞ்சலம், வெட்கம், கோபம், அச்சம், ஆனந்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் உள்வாங்கிய மனிதர்களின் கூட்டங்கள் நாம். வாழ்க்கை முழுவதும் வழிந்தோடும் கிராம ஞாபகங்கள் அடி மனதில் செம்மண் புழ
Updated on
2 min read

கிராமங்களின் வருத்தம், சஞ்சலம், வெட்கம், கோபம், அச்சம், ஆனந்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் உள்வாங்கிய மனிதர்களின் கூட்டங்கள் நாம். வாழ்க்கை முழுவதும் வழிந்தோடும் கிராம ஞாபகங்கள் அடி மனதில் செம்மண் புழுதியாக அப்பிக் கிடக்கிறது.

நூற்றாண்டுகளின் புழுதியைத் தாங்க முடியாத மனிதன் அதை தார்ச்சாலைகளால் மூடுகிறான். தார்ச்சாலைகள் மனிதர்களை மாநகரத்திற்கு அழைக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மாநகரம், நகரம் மற்றும் கிராமங்களுக்கு நீட்டும் கறுப்பு கொடிகளாக, தார்ச் சாலைகள் நீள்கின்றன.

மாநகரங்களின் தார்ச்சாலைகளின் கீழே செம்மண் சாலைகளின் சமாதிகள், அதற்கும் கீழே சேர்த்து வைக்கப்பட்டுள்ள காலடித் தடங்களுடன் ஒற்றையடிப் பாதைகள், செம்மண் சாலைகளையும், ஒற்றையடிப் பாதைகளையும், தோண்டிப் பார்க்கும் உக்கிரத்துடன் மாநகரத்து சூரியன் தார்ச்சாலைகளை உருக்கிக் கொண்டிருக்கிறது.

தார்ச்சாலைகளில் கால் தடங்கள் பதிவதில்லை. செருப்பு இல்லாதவர்களையும் கனத்த பூட்ஸ் இல்லாதவர்களையும் அவை அனுமதிப்பதில்லை. சிவப்பு, மஞ்சள், பச்சை என அவை விளக்குகளால் ஆணையிடுகின்றன.

திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் கிளைகளாகப் பிரிந்து செல்லும் செம்மண் சாலைதான் பத்தமடை. அழகிய கிராமம். பத்தமடையில் பாய் தான் பிரபலம். இஸ்லாமியர்கள், இந்து என இரு சமயத்தாரையும் சரி சமமாகக் கொண்ட ஊர். இஸ்லாமியர்களுக்கும் இந்துகளுக்குமான உறவு பாசம் நாளுக்கு நாள் அங்கு புதுப்பிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இரு மக்களும் உறவுக்காரர்கள் மாதிரி பழகுவார்கள். எந்த நேரமும் உழைத்துப் பாய் பின்னி வாழ்க்கையைப் பின்னும் மக்கள் என் ஊர் மக்கள். பத்தமடை பாய் என்றால் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. துணி மாதிரி பாயை மடித்து வைத்துக் கொள்ள முடியும். காலையில் எழுந்து தொட்டியில் ஊற வைக்கப்பட்டிருக்கும் கோரைகளைப் பதப்படுத்தி அவற்றுக்கு வர்ணம் கொடுத்து ஒவ்வொரு கோரையையும் நூலில் கோர்த்துப் பாயை உருவாக்குவார்கள். எந்த நேரமும் இதுதான் என் மக்களுக்கு வேலை. விடுமுறை இல்லாத உழைப்பு. மூன்று அக்காள்கள், அம்மா பாக்யலஷ்மி, நான்... இதுதான் என் குடும்பம். அப்பா சபாபதியின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் சுமை அம்மாவின் மேல் விழுந்தது. அக்காள்காளும் வேலைக்குச் சென்று விடுவார்கள். அவர்களின் ஒரே ஆறுதல் நான்தான். என்னை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆள் ஆக்கிவிட வேண்டும் என்பது அவர்களின் தினக் கனவு. நானோ ஊரின் மையத்தில், "விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தானே ஞான முதல்வனே' - என்றழைத்து படம் காட்டி சாயங்கால சந்தோஷமாக விளங்கிய ஸ்டார் டூரிங் டாக்கீஸின் நிரந்த ரசிகன். மாலை பாடும் அந்தப் பாடல்கள் சிலோன் வரைக்கும் கேட்கும் என எனக்கு நம்பிக்கை இருந்தது. இருட்டை நோக்கி காலம் முன்னேற முன்னேற பக்கத்து கிராமங்களின் சைக்கிள்களும், மாட்டு வண்டிகளும் தன் ஆஸ்தான ஓசைகளை எழுப்பிப் புழுதி கிளப்பி வந்து சேரும். அந்த ஓசை இன்னும் என் காதுகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. பள்ளிச் சென்று திரும்பி வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் காசு வாங்கி டூரிங் டாக்கீஸிக்கு ஓடி விடுவேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோரும் எனக்கு அங்குதான் பரிச்சயம். ரஜினி, கமல் படம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே ரிலீசாகும். மற்ற நாள்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்தான் ஆக்கிரமிப்பு கொள்ளும். நானோ சிவாஜி ரசிகன். சிவாஜி படங்கள் என்றால் தினமும் பார்ப்பேன். வீரபாண்டிய கட்டபொம்மனாக மாறி தென்னை மட்டையை வாளாக நினைத்துச் சுழற்றியதும். வ.உ.சி.யாக மாறி வண்ணான் குளத்தில் தகர கப்பல் விட்டதும் அந்த டூரிங் டாக்கீஸ் தந்த அதிர்வுகளால்தான். அக்கா, தங்கைகளுடன் பிறந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அண்ணனை அப்பனாகவும், தம்பியை மகனாவும் பார்ப்பவள் பெண். கிட்டிக்கு மரம் ஒடிக்கின்ற ஆண்கள் உலகத்தில் மரபாச்சி பொம்மைக்கு சோறு ஊட்டுவது பெண் மனம். எனக்கோ மூன்று பேருமே அக்காள்கள் என்பதால் என் வீடே என்னைக் கொண்டாடியது. என்னை எப்படியாவது என்ஜீனியராக்கி விட வேண்டும் என நினைத்த என் குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றாமல், சினிமா கிறுக்கெடுத்து அலைய ஆரம்பித்து விட்டேன். ஸ்டார் டூரிங் டாக்கீஸில் சிவாஜி படம் சரியாக ஓடவில்லை என்றால் ஓனரை விட நான்தான் அதிகம் வருத்தப்படுவேன். பாக்யராஜின் "தாவணி கனவுகள்' நான் பார்த்து மிரண்டு போன ஒரு திரைக் காவியம். ஐந்து தங்கைகளுடன் பிறந்த அண்ணன். தங்கைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு, தான் நேசித்த சினிமாவில் சாதிப்பதுதான் படத்தின் கதை. அந்தப் படம் பார்த்த பின்னர் நானும் பாக்யராஜாக மாறி விட்டேன். முதலில் அக்காள்களுக்கு திருமணத்தை முடித்துவிட்டு சினிமா நோக்கி சென்று விட வேண்டும் என்பதுதான் அப்போதைய என் ஐந்தாண்டு திட்டம். அதற்கு முதலில் ஒரு வேலை வேண்டும். தெரிந்த ஒருவரின் மளிகை கடையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். கடைகளில் வேலை பார்க்கும் பையன்களிடம் சச்சினின் சமீபத்திய சாதனை என்ன? இலங்கை பிரச்னையின் நிலை என்ன? என எந்தக் கேள்வியை கேட்டாலும் விழிப்பார்கள். உலகத்தை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன். கிராமங்களின் காற்றைச் சுவாசித்து, தண்ணீர் குடித்து வாழ்ந்து வந்த என்னை சினிமாவும், பொருளாதாரத் தேவையும் மாநகரத்துக்கு இழுத்துக் கொண்டது. ஆனாலும் இன்னும் நான் கிராமத்தான்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com