ஆயிரம் நிகழ்ச்சி கண்ட அம்புளி!

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், இரு ஆண் வித்வான்கள் தவில் வாசிக்க அதற்கு மெருகூட்டும் விதமாக மல்லிகா, அம்புளி என்ற இரு பெண் வித்வான்கள் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருந்தனர். திரும
ஆயிரம் நிகழ்ச்சி கண்ட அம்புளி!
Updated on
2 min read

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், இரு ஆண் வித்வான்கள் தவில் வாசிக்க அதற்கு மெருகூட்டும் விதமாக மல்லிகா, அம்புளி என்ற இரு பெண் வித்வான்கள் நாதஸ்வரம்

இசைத்துக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களோ திருமணச் சடங்குகளை ரசிப்பதைக் காட்டிலும், நாதஸ்வர இசையில் தங்களை மெய்மறந்து இருந்தனர். நாமும்தான்.

நாதஸ்வர வித்வான் அம்புளியை திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

""எனது தந்தை பி.ஏ. கணேசன். நாதஸ்வரக் கலைஞர். கேரளத்தில் வைக்கத்தில் உள்ள சேத்திரகலா பீடத்தில் சங்கீத வாத்தியாராக வேலை பார்த்தார்.

அப்போது என் தந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கேரளத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி தவில் வாசிப்பது வழக்கம். நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இக்கலையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு என் தந்தை ஊக்குவிப்பாக இருந்தார். தந்தை தான் எனது குரு.

அதிகாலை 4 மணிக்கு சாதகம் துவங்க வேண்டும் என்பது எனது தந்தையின் கண்டிப்பு. அதுதான் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது.

1999-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் முதல் அரங்கேற்றம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது. வத்திராயிருப்பு கோயில் திருவிழாவில் என் முதல் கச்சேரி நடைபெற்றது. சுவாமி புறப்பாடு நடைபெறும்போது பொதுமக்கள் முன்பு நாதஸ்வரம் வாசித்தேன். அப்போது நான் இனம் தெரியாத மகிழ்ச்சி அடைந்தேன்.

நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து பள்ளி செல்ல இயலவில்லை. இந்த இசை ஆர்வம் படிப்புக்கு இடையூறாக இருந்தது. அதனால் பள்ளிப் படிப்பை கைவிட்டு விட்டேன்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, மதுரை தமுக்கம் மைதானத்தில் மகளிர் மன்றம் சார்பில் பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் வாசித்தபோது மன நிறைவு, மகிழ்ச்சி நிலவியது. இந்நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தது.

சிறந்த கச்சேரி கேட்க வேண்டும் என விரும்புவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மூலம் கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஒரு திருமணத்தின்போது எனது கச்சேரியும், நாதஸ்வர வித்வான்கள் சேதுராமன்-பொன்னுச்சாமி அவர்களின் கச்சேரியும் ஒரே நேரத்தில் அமைந்தது. அப்போது நான் நாதஸ்வரம் வாசிப்பதைக் கேட்ட சேதுராமன்-பொன்னுச்சாமி, ""பெரிய ஆளாக வருவாய்'' என்று என்னைப் பாராட்டியதை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

"இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரி, இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட தமிழகம், கேரளத்தில் பல்வேறு கோயில்களில் கச்சேரி நடத்தி உள்ளேன். இருந்தாலும், மாபெரும் வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் போல் பெயர், புகழ் பெற வேண்டும். முதல்வர் கையால் கலைமாமணி விருது பெற வேண்டும் என்பது என் அவா'' என்றார் அம்புளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com