
திரும்பிய திசையெல்லாம் கலைநயம் மிக்க பாறைகள், கருப்பு, பழுப்பு, சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களில் பொலிவுடன் திகழும் சிமெண்ட், கான்கிரீட் சிற்பங்கள் என்று பூங்கா முழுவதுமே வித்தியாசமான கலைப் படைப்புகளின் சங்கமமாகத் திகழ்கிறது.
உபயோகித்தபிறகு தூக்கி எறியும் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களின் அணிவகுப்பில் மிளிரும் "ராக் கார்டன்', 1957-ல் உருவாக்கப்பட்டது.
பூங்கா உருவாக மூளையாகச் செயல்பட்டவர் அப்போது ஹரியானா அரசுத் துறையில் சாலைக் கண்காணிப்பாளராக இருந்த நெக் சந்த் சைனி. அதனால் அவரது பெயரால் "நெக் சந்த்ஸ் ராக் கார்டன்' என்றும் இந்தப் பூங்கா அழைக்கப்படுகிறது. நெக் சந்த் இந்தப் பூங்காவை மிகவும் ரகசியமாக உருவாக்கினார். தன்னுடைய வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் இந்தப் பூங்காவில் இருக்கும் பல படைப்புகளை வடிவமைத்தார். 1975-ல் தான் இப்படி ஒரு பூங்கா இருப்பதே வெளியுலகுக்குத் தெரியவந்தது.
தற்போது மேலும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு 40 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது இந்தப் பூங்கா. 5000-க்கும் மேற்பட்ட சிற்பங்களை இங்கே பார்க்க முடிகிறது. உலகின் நவீன அதிசயங்களுள் இந்தப் பூங்காவும் ஒன்றென அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் நுழைவு வாயிலும் பெரிய பாறை போன்ற கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவைச் சுற்றியுள்ள மதில் சுவர்களும் கனத்த, நீண்ட பாறைகளால் விரிகின்றன.
ராக் பூங்கா மூன்று பிரிவுகளாக உள்ளது. கண்ணுக்குக் குளிர்ச்சியளிக்கும் வெள்ளை நீர்வீழ்ச்சி பூங்காவின் மையத்தில் தெறித்து விழுகிறது. பூங்காவின் பிரதான அம்சமாக, பல விதமான கலைப்படைப்புகள் ஒரு பகுதியில் அணிவகுத்துள்ளன. கேளிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த "அம்யூஸ்மென்ட் பூங்கா' மறு பகுதியில் அமைந்துள்ளது.
பிரதான கலைப்படைப்புகளில் நெக் சந்த் சைனியின் கலைத் திறனும், நுணுக்கமும் பளிச்சிடுகின்றன. உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள், பாட்டில் மூடிகள், பல வண்ண வளையல் துண்டுகள், டைல்ஸ்கள், செராமிக் பானைகள், குளோùஸட்டுகள், உபயோகித்த பிறகு தூக்கி எறியும் மின்சார பல்புகள், ஸ்விட்சுகள் என்று அன்றாடம் நாம் பயன்படுத்தும், பயன்படுத்தியபிறகு வீணாக்கும் பொருட்களைக் கொண்டு மனிதர்கள், பறவைகள், தாவரங்கள் என்று விதவிதமான உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை, பழுப்பு, கருப்பு நிற பளிங்குக் கற்கள் ஒட்டப்பட்ட பெர்ரீய... பாறைகள், நீண்ட பாறை குகைக்குள் நுழைந்து செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தெரியாத வழியில் நுழைந்து விட்டோமோ என்ற அச்சத்துடன் ராக் பூங்கா முழுவதையும் சுற்றிப் பார்த்தாலும், இறுதியில் சரியான பாதைக்கே கொண்டு சென்று விட்டுவிடும் வகையிலான வடிவமைப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது.
கொஞ்சம் ஏமாந்தாலும் தலையைமுட்டும் குறுகிய பாறை நுழைவாயில்கள், கடுகளவு கல்லில் இருந்து டைனோசரஸ் அளவு மெகா சைஸ் கற்கள் வரையிலான பெரிய கற்பாறைகளில் பதிக்கப்பட்ட கலைநயம்... என்று கண்ணுக்கு கலர்ஃபுல் விருந்தளிக்கும் பல அம்சங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.
தரையில் பதிக்கும் டைல்ஸ்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாட்டியதாரகைகள், இசை வல்லுநர்கள், பறவைகள், மிருகங்கள் போன்ற உருவங்களில் புதுமையும், வித்தியாசமும் பளிச்சிடுகிறது. சிறு கற்களைப் பொடித்து ஒட்டி தயாரிக்கப்பட்ட பாறை சிற்பங்கள், வண்ணமயமான கண்ணாடி வளையல் துண்டுகளில் கண் சிமிட்டும் மங்கையர், சிறு சிறு பானைகளைப் பொருத்தி பாந்தமாக அமைக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று கற்பனைக்கு எட்டாத கலைப் படைப்புகளை இங்கு நாம் காணலாம். திறந்த வெளி அரங்கமும், மினியேச்சர் கிராமமும் பூங்காவின் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.
புதுமைக்கும், கற்பனை நயத்துக்கும், படைப்புத் திறனுக்கும் கட்டியம் கூறும் பல அம்சங்கள் இந்தப் பூங்காவில் நிறைந்துள்ளன. பார்த்து ரசிக்க வேண்டிய அரிய கலைப் படைப்பு இது!.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.