
"ஸôக்úஸôபோன் சிஸ்டர்ஸ்' என்று சங்கீத உலகில் பிரசித்தி பெற்று விளங்கும் லாவண்யா, சுப்புலக்ஷ்மி சகோதரிகளை ஒரு காலைவேளையில் சந்தித்தோம். சுப்புலக்ஷ்மி அமைதியாய் உட்கார்ந்து நாம் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்க லாவண்யா இசையாய் பேசினார்:
""எங்களுடைய தந்தை சாய்நாத். மிருதங்க வித்வான். ஸôக்úஸôபோன் மேதை கதிரி கோபால்நாத்திடம் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார். சிறுமியாக இருந்தபோது அவர்களுடைய கச்சேரியைக் கேட்டுக் கேட்டு ஸôக்úஸôபோன் வாத்தியத்தின் தனி நாதம் மீது எங்களுக்கு அலாதி ஆர்வம் ஏற்பட்டது. அந்த வாத்தியத்தை வாசிக்கக் கற்க வேண்டும் என்று எனக்கிருந்த விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தேன். அப்பா எங்கள் குருநாதர் கதிரி கோபால்நாத்திடம் கேட்டார். அவரும் இசைவு தெரிவிக்கவே முறையாக அவரிடம் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினோம்.
எங்கள் முதல் கச்சேரி மைசூரில் நாத மண்டபம் துவக்க விழாவில் கணபதி சச்சிதாநந்த குருஜி முன் 1997(1998) வருடம் ஆறாயிரம் ரசிகர்கள் அமர்ந்திருந்த ஓர் அரங்கத்தில் நடைபெற்றது.
2005 ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோவிலில் நடந்த எங்கள் கச்சேரியைக் கேட்க குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருந்தார். அவர் வந்ததும் கொஞ்சம் பயந்துவிட்டோம். அதனால் கண்களை மூடிக் கொண்டு வாசித்தோம். கச்சேரி முடிந்த பிறகு என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தபோது, "நீங்கள் இருவரும் ஒரு சகாப்தத்தையே ஏற்படுத்தியுள்ளீர்கள். பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளீர்கள்.' என்று பாராட்டினார். எங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
இதுபோலவே நாங்கள் இங்கிலாந்தில் நாட்டிங் ஹாமில் ஒரு திறந்த வெளியில் பல வெளிநாட்டவர் முன்னிலையில் ஸôக்úஸôபோன் வாசித்தோம். அனைவரும் வியந்தனர். அது மட்டுமல்ல, எங்களது இந்த நாதத்தின் காத்திரம், சிறந்த ஒலி வடிவம் ஆகியவற்றால் கவரப்பட்டு, வாசிப்பது ஆண் என்று மனதில் எண்ணி பின் அருகில் வந்து எங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள்.
எங்கள் வெற்றிக்குக் கடவுள் அருளும், எங்கள் குருநாதரின் அன்பும் ஆசியும்தான் காரணம். எங்களது குருநாதர் அவர் வாசிக்கும் கச்சேரிகளுக்கெல்லாம் உடன் அழைத்துச் சென்று, அதையே ஒரு பாடமாக, வகுப்பாகக் கொள்ளச் செய்தார். அந்த அனுபவம் எங்களுக்கு இப்போதும் கை கொடுக்கிறது.
எங்களது இந்த நிலைக்கு மற்றொரு காரணம் எங்களது தகப்பனாரின் உறுதுணைதான். நாங்கள் வாசிக்க உட்கார்ந்த உடன் அவர் மிருதங்கத்தை எடுத்து வந்து வாசிக்க அமர்ந்து விடுவார். அந்நேரம் அவ்விடமே ஒரு கச்சேரி மேடை போல் ஆகிவிடும். எங்களுக்கு மேடை பயம் இல்லாமல் போனதற்கு இந்த நிகழ்வுகளும் ஒரு காரணம். சிறு வயதில் வானொலியில் நிகழ்ச்சிகள் வரும்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் எங்களைக் கூப்பிட்டுக் கேட்கச் சொல்லி கோர்வை, குறைப்பு, முத்தாய்ப்பு பற்றி அப்பா விளக்கிக் கூறுவார். அவர் காரைக்குடி மணியிடம் பயிற்சி பெற்றவர். எங்கள் தாயாரும் எங்களை மற்ற வேலைகளைச் செய்யவோ, அடுப்புப் பணியோ அல்லது வேறு வீட்டுப் பணியோ செய்ய விடமாட்டார். உங்களுக்கு வாத்தியமும் சங்கீதமும்தான் தொழில். அவைதான் எல்லாமே என்று அடித்துக் கூறிவிடுவார்.
மிருதங்க வித்வான் ராஜாராவின் மனைவி பத்மா சாண்டில்யனிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சி தற்போது எடுத்து வருகிறேன். வாத்தியத்தில், வாய்ப்பாட்டு போல மிகச் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயின்று வருகிறேன். இது என்னை மேலும் வலுவடையச் செய்துள்ளது. எனக்கு பல ஆசைகள் உண்டு. விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்று ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால் இசை எங்களை ஆட்கொண்டுவிட்டது. இது எங்களது பெற்றோரின் எண்ணமாகவும் இருந்துவிட்டது. இசையில் வளமுற்றோம். கூடவே இன்னும் இரண்டு ஆசைகள் உண்டு. உலகின் நம்பர் ஒன் ஸôக்úஸôபோன் வாத்தியக்காரர் கென்னி ஜியுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அது போலவே உலக வயலின் மேதை எல். சுப்பிரமணியத்துடன் எப்படியாவது ஒரு முறையாவது வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
ஃப்யூஷன் முறையில் வெளிநாடுகளிலும் இங்கும் பல நிகழ்ச்சிகள் தந்துள்ளோம். ரஃபிஃகானுடன் சிதாரில் இணைந்து நாங்கள் ஸôக்úஸôபோன் வாசிக்கும் ஜுகல்பந்தி சி.டி. தயாரித்துள்ளோம்.
ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் ரீ-ரிகார்டிங்கில் பணிபுரிய ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம்.
பாரத் கலாசார் எங்களுக்கு யுவ கலா பாரதி விருதினை 2007ல் வழங்கியது. நாரத கான சபா கே.எஸ். மகாதேவன் க்ரிடிக்ஸ் விருதை எங்களுக்கு வழங்கியுள்ளது. பத்மா சாரங்கபாணி அமைப்பு அளித்த விருதும், ராஜ்யோத்ஸ்னா விருதையும் நாங்கள் இங்கே குறிப்பிட வேண்டும். இவை எல்லாம் பெண் இனத்திற்குக் கிடைத்த வெற்றிகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
லாவண்யா இல்லாமல் சுப்புலக்ஷ்மி இல்லை. அவள் இல்லாமல் நானும் இல்லை. மணமாகி சுப்புலக்ஷ்மி பெங்களூரில் இருக்கிறாள். எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது தினம் போன் செய்து பேசுவோம்.
எங்கள் அனுபவம் எங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு கலை உங்களிடம் எப்படி வருகிறது? நீங்கள் அதற்கு உங்களைக் கொடுப்பதனால் வருகிறது. என்ன செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதற்கு உங்களது நூறு சதவிகித உழைப்பைக் கொடுங்கள். இதுதான் எங்களது வெற்றியின் ரகசியம்''என்றார் லாவண்யா. சுப்புலக்ஷ்மி ஆமோதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.