
நொறுக்குத் தீனியை விரும்பாதவர்கள் உண்டா? பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் நொறுக்குத் தீனிதான் உடற்பருமனுக்கு பிரதான காரணம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஓர் உணவு வேளைக்கும் மற்றொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உண்ணப்படும் நொறுக்குத் தீனி ஆரோக்கியமானதாக அமைந்துவிட்டால், அதுவே உடல் நலத்துக்கான உணவாகவும் ஆகிவிடும்.
ஆரோக்கியமான நொறுக்குத் தீனி வகைகள் என்னென்ன? ஒரு பெரிய பட்டியலே போடலாம்.
சாம்பிளுக்கு இதோ சில:
நம் முன்னோர்கள் காலங்காலமாய் சமைத்து சாப்பிட்டு வந்த தின்பண்டங்கள் இன்றைய காலகட்டத்தில் வழக்கொழிந்து போய் வருகின்றன. இந்த வகைகளை மீண்டும் செய்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியம் நிச்சயம்.
எள்ளுருண்டை, பாசிப் பயறை வறுத்து அரைத்து வெல்லப்பாகு, தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் பொரிவிளங்காய் உருண்டை, பொட்டுக்கடலை வெல்லம் சேர்த்த கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, வறுத்து பொடித்த பொட்டுக் கடலை மாவுடன் வெல்லப்பாகு அல்லது சர்க்கரை (நெய்) சேர்த்து செய்யப்படும் மாலாடு, ரவாலட்டு போன்றவை மிகச் சிறந்த பாரம்பரிய நொறுக்குத் தீனி வகைகளுக்கு எடுத்துக்காட்டு. இவற்றை அளவோடு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு சத்தும் கிடைக்கும். உடம்பும் ஊதிப்போகாது.
மாலை நேர டிபனுக்கு, வேக வைத்த மக்காச்சோளம் சிறந்த உணவு. திருவிழாக்களில் விற்கப்படும் பொரி, பொட்டுக் கடலை, வேர்க்கடலை கலந்த கலவை, வயிற்றை காயப்படுத்தாத சத்தான தீனி.
அவலைப் பயன்படுத்தி ஓர் ஆயிரம் சிற்றுண்டிகளைச் செய்யலாம். அவலை பாலில் ஊறவைத்து, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக உண்ணலாம். இந்தக் கலவையுடன் முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் சேர்த்தால், சுவையான இனிப்பு ரெடி.
காலங்காலமாய் நம் முன்னோர்கள் செய்து சாப்பிட்டு வந்த இதுபோன்ற சத்தான நொறுக்குத் தீனி வகைகளை மறந்துவிட்டு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை சாப்பிட ஆரம்பித்ததன் விளைவே, நோய்களுக்கு அடிப்படைக் காரணம் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.
சொல்றதைச் சொல்லிட்டோம். இனி ஆரோக்கியம் உங்கள் கையில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.