படிச்சது இலவசம் கிடைச்சது தங்கம்!

பணமும் வசதியும் செல்வாக்கும் இருந்தால் பதவிகள் கிடைக்கலாம்; படிப்பு வந்துவிடாது. கல்விக்கான இடம் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் இடமளிப்பதில்லை. தெருவிளக்கிலே படித்து மேதையானவர்கள் பலர். இதோ அதற்கு ஒரு ச
படிச்சது இலவசம் கிடைச்சது தங்கம்!
Updated on
2 min read

பணமும் வசதியும் செல்வாக்கும் இருந்தால் பதவிகள் கிடைக்கலாம்; படிப்பு வந்துவிடாது. கல்விக்கான இடம் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் இடமளிப்பதில்லை. தெருவிளக்கிலே படித்து மேதையானவர்கள் பலர்.

இதோ அதற்கு ஒரு சமீபத்திய உதாரணமாகத் திகழ்கிறார் காஞ்சனா. இலவசமாகக் கல்வி கற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார் இவர்.

கல்வி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்புரிமை. அந்தப் பிறப்புரிமைக்குத் தடையாக இருப்பது வறுமை.

இந்த தடைக்கல்லைத் தகர்த்தெறியும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இலவச கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பாரதியார் பல்கலைக்கழகம். இத்திட்டத்துக்குப் பிதாமகனாக இருந்தவர் அப்போதைய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரும் இப்போதைய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருமான க.திருவாசகம்.

பாரதியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அனைத்து தனியார் கல்லூரிகளும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தபட்சம் 5 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். அப்படி வழங்கும் கல்லூரிகள் கூடுதலாக 5 சதவீத மாணவர் சேர்க்கை செய்ய பல்கலைக்கழகம் அனுமதி வழங்கும். இதுதான் அந்த மகத்தான திட்டம்.

இத் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து இலவசமாக எம்.எஸ்ஸி (கம்ப்யூட்டர் சயன்ஸ்) படித்த கிராமத்து மாணவி என்.காஞ்சனா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

சாதனை படைத்த அவர், இப்போது அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கிராமத்தின் மைய பகுதியில் இருக்கும் அக் கல்லூரிக்குச் சென்று காஞ்சனாவிடம் பேசினோம்.

இனி அவரிடம் இருந்து.....

""பெரியநாயக்கன்பாளையம் அருகே புஜங்கனூர் தான் எனது சொந்த கிராமம்.  நான் 8-ம் வகுப்பு படிக்கும்போதே அப்பா நடராஜ் இறந்துவிட்டார். அம்மா சரஸ்வதி, விவசாய கூலிவேலை செய்து என்னையும், தங்கை சத்யபிரியாவையும் படிக்கவைத்தார்.

ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தேன்.

அம்மா எங்களின் கல்வி ஆர்வத்தைப் புரிந்து கொண்டு கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். கல்விதான் எங்களுக்கு ஒரே துணை என்பதை எங்களின் அம்மா உணர்ந்திருந்தார். வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியபோதும் எங்கள் படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று அவர் நினைத்ததில்லை.

அரசுப் பள்ளியில் இலவசமாகப் படிக்க முடிந்தது. ஆனால் கல்லூரிப் படிப்பு? அதிலும் இலவசமாகத் தொடர முடியாதே?

நான், பயனீர் கல்லூரியில் பி.சி.ஏ. முடித்தேன். பல்கலைக்கழக அளவில் 8-வது இடம் பிடித்தாலும் வறுமையால் படிப்பைத் தொடர முடியவில்லை. இனிமேல் படிக்கவைக்க பணம் இல்லை என அம்மா கூறிவிட்டார். படிப்பில் அதீத ஆர்வம் இருந்தும் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை. நாமே சம்பாதித்து படித்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தேன். கணினி மையத்தில் ஓராண்டாக பணியாற்றினேன்.

அப்போதுதான் பயனீர் கல்லூரி முதல்வர் கே.ஆர்.கார்த்திகேயன் என்னை நேரில் அழைத்து இலவச கல்வித் திட்டத்தில் சேர வாய்ப்பு கொடுத்தார். என் கனவு பலித்தது. மறுக்கப்பட்டிருந்த கல்விக் கனவு மீண்டும் நனவானது.

கல்லூரியில் சேரும்போதே முதல்வரிடமும், இங்குள்ள பேராசிரியர்களிடம் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தேன். அது பலித்துவிட்டது. இப்போது இதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்து எம்.ஃபில் படிக்க திட்டமிட்டுள்ளேன்.

அதைத்தொடர்ந்து என்னை போல வறுமை காரணமாகப் படிக்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுவது தான் அடுத்த லட்சியம்'' என முடித்துக்கொண்டார் காஞ்சனா.

பாரதியார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய இந்த முன்மாதிரி திட்டத்தைத் தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களும் அறிமுகப்படுத்தினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஏழை மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com