கல்லூரிக் கருவறை!

''கல்லூரி வாழ்க்கைதான் பலருடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்குது. முன் பின் பரிச்சயம் இல்லாத மலைப்பாதையைப் போல் புதிது புதிதான திருப்பங்களையும் தரிசனங்களையும் கொடுக்கிறது கல்லூரி. திகட்ட, திகட்ட சந்
கல்லூரிக் கருவறை!
Updated on
2 min read

''கல்லூரி வாழ்க்கைதான் பலருடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்குது. முன் பின் பரிச்சயம் இல்லாத மலைப்பாதையைப் போல் புதிது புதிதான திருப்பங்களையும் தரிசனங்களையும் கொடுக்கிறது கல்லூரி.

திகட்ட, திகட்ட சந்தோஷங்களை ஊற்றி, நட்பு, காதல் என சங்கிலித் தொடர்களில் சிக்க வைத்து,ஆசைகளையும் நிராசைகளையும் சரிவிகிதத்தில் நிரப்பி, துக்கமான நிமிஷங்களுக்கு நண்பனின் தோள் கொடுத்து, இனி வரப் போகும் வாழ்க்கைக்கும் காதல் தந்து, ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு கொடுத்திருக்கும் அந்த கல்லூரி?  அபூர்வமான, அற்புதமான அந்த வாழ்க்கைதான் இந்தப் படம்''... அனுபவத்துடன் பேசுகிறார் இயக்குநர் கே.வி.குகன். "மொழி' உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளர். பி.சி.ஸ்ரீராமின் மாணவர். "இனிது இனிது' மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

"'ராதாமோகனின் 'மொழி' படம் பண்ணும் போதுதான், பிரகாஷ்ராஜ் சார் பழக்கம். என் சுறுசுறுப்பு, ஆர்வம் எதோ ஒரு நிமிஷத்துல அவரோட கவனம் திரும்பி, என்னை பத்தி விசாரிக்க வைச்சுருக்கு. சினிமா ஆர்வத்தத் தெரிஞ்சுக்கிட்டு. ""தெலுங்கில் வந்த "ஹேப்பி டேஸ்' படம் என்னை ரொம்ப பாதிச்சுட்டு, அதை தமிழில் எடுக்கலாம்னு இருக்கேன். நீங்கதான் எடுத்து தரணும்னு நம்பி தந்தார். இதோ இப்போ நல்லா வந்திருக்குன்னு பாராட்டுறார். சந்தோஷமாக இருக்கு. பி.சி.சார்கிட்ட கத்துக்கிட்ட சினிமாவுக்கு இது அப்படியே அர்ப்பணம்.''

பிரகாஷ்ராஜ் தயாரிப்பு என்றாலே மனித உணர்வுகள் முதன்மை பெறும். இது எப்படி?

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று தெரியாத அதன் மர்மம்தான் வாழ்க்கைனு நினைக்கிறேன். எவ்வளவு திட்டமிட்டு தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் நாள்களை இயற்கை மாத்தி எழுதிட்டுப் போகுது. "அபியும் நானும்', "மொழி' இதெல்லாம் என்னை வித்தியாசமா யோசிக்க வைச்சுருக்கு. கிளாமர், ஆக்ஷன் என சினிமாவே பரபரத்துக் கிடக்கும்போது, மனுஷனோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து படமெடுப்பார் பிரகாஷ்ராஜ். அதை விட்டு ஒரு சென்டி மீட்டர்கூட இப்படமும் நகராது.  கல்லூரி கதைக்கான அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி அதைத் தாண்டிய  அனுபவங்களை முழுக்க முழுக்கச் சொல்லியிருக்கேன். காதல் தரும் வலி, நட்பு தரும் வலி ரெண்டையும் உணர்ந்துட்டு போகலாம்.

எல்லோரும் புதுமுகங்கள் என்றால் இயக்குவது கஷ்டமாக இல்லையா?

2000 பேருக்கு இண்டர்வியூ வெச்சு, ஆதித், விமல், நாராயண், சரண், ரேஷ்மி, பெனாஸ், சோனியா, ஜியான்னு எட்டு பேரை செலக்ட் பண்ணினோம். எல்லோருமே கல்லூரி வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டு இருக்குறவங்க. யாருக்கும் கேமிரா பயம் இல்லை. சின்னதா ஒரு பதற்றம், அதுவும் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே காணாமல் போய்விட்டது. எல்லாமே பாஸிட்டிவ் காட்சிகள்தான். ஆபாசம் கிடையாது. பிள்ளைகளோட இந்தப் படத்துக்கு வர முடியும். 



மிக்கி ஜே.மேயர்ன்னு இசையமைப்பாளர் புதுசா இருக்காரே?

தெலுங்கு "ஹேப்பி டேஸý'க்கு மியூசிக் போட்டவர். அவரையே பிடித்து இதிலும் பயன்படுத்தி இருக்கோம். கல்லூரி கதைக்கு எந்த அளவுக்கு மியூசிக் தேவைன்னு உணர்ந்தவர். நல்ல பாடல்கள் வந்திருக்கு. வைரமுத்து, நா. முத்துக்குமாருன்னு இசைக்கு பலமானவர்கள் இருக்கிறார்கள்.

"பெற்ற தாயின் வயிற்றில்

பத்து மாதம் இருந்தோம்...

கல்லூரி தாயே உன் வயிற்றில்

நாலு ஆண்டுகள் இருந்தோம்...

எங்களைக் கலைத்து விடாதே..' ன்னு வைரமுத்து கதைக்கு பலம் சேர்த்திருக்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com