சாலமன் பாப்பையா வீட்டு ஹனா

தமிழின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் மதுரையில் தற்போது ஜப்பானிய மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரம்பரியமிக்க மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஜப்பான் மொழி, மற்ற மொழிப் பாடங்களுக்கு இணையாக
சாலமன் பாப்பையா வீட்டு ஹனா
Updated on
3 min read

தமிழின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் மதுரையில் தற்போது ஜப்பானிய மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரம்பரியமிக்க மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஜப்பான் மொழி, மற்ற மொழிப் பாடங்களுக்கு இணையாகக் கற்றுத் தரப்படுகிறது. அந்த மொழியைக் கற்றுத்தருபவர் பேராசிரியை விமலா சாலமன்தான். நீங்கள் நினைப்பது சரிதான். பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மகள்தான் அவர்.  கல்லூரி வளாகத்தின் பசும் மரங்களின் சலசலப்புக்கு இடையே குளிர்காற்று தவழ, வகுப்பறையில் ஜப்பானிய மொழி வாசம் வீசிய அந்தப் பேராசிரியரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து....

தமிழறிஞர் மகளான நீங்கள் ஜப்பானிய மொழியை விரும்பிக் கற்றது எப்படி?

நான் மதுரை பாத்திமா கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படித்தேன். மொழிப் பாடமாகத் தமிழ் இருந்தது. ஆர்வமுடன் தமிழ் இலக்கியம், இலக்கணத்தையும் படித்துள்ளேன். தந்தை பேராசிரியர் என்பதால் இயற்கையாகவே தமிழ் மீது எனக்கு அதிக ஆர்வம். படிப்பை முடித்ததும் விடுமுறைக்காக 1985 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானுக்கு உறவினர் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கு எனக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை என்பதால் ஜப்பானிய டி.வி. நிகழ்ச்சிகளையே அதிகம் பார்க்க நேர்ந்தது. அதில் ஜப்பானிய மொழியிலேயே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

டி.வி.யில் ஜப்பானிய மொழியைக் கேட்பதற்கே இனிமையாக இருந்தது. அந்த மொழியைக் கற்கும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியரிடம் டியூஷன் படித்தேன். தமிழோடு தொடர்புடையது என ஜப்பான் மொழியைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே விருப்பத்துடன் கற்றதால் எளிதில் மொழியைக் கற்கமுடிந்தது. எனக்கு ஜப்பானிய மொழியைக் கற்பித்த ஆசிரியர் பள்ளியில் சென்று மொழியைக் கற்குமாறும் ஆலோசனை கூறினார். இதையடுத்து ஜப்பானிய மொழிச் சான்றிதழ் படிப்பை மேற்கொண்டேன். 3 அடுத்தடுத்த ஆறு மாத பயிற்சி வகுப்புகளைப் பயின்றேன். இதில் எனக்கு ஜப்பானிய மொழியில் கற்பிக்கும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்தது.

உங்களால் எப்படி அம்மொழியில் புலமை பெற முடிந்தது?

ஜப்பானிய மொழியைக் கற்ற வேற்று நாட்டவர்களுக்கு அந்நாட்டில் போட்டிகளை நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தப்படும் போட்டியில் பங்கேற்பவர்கள் முதலில் தங்களது குரலை பேச்சாக பதிவு செய்து போட்டி நடத்தும் அமைப்பினருக்கு அனுப்ப வேண்டும்.

அவ்வாறு பேசி அனுப்பிய 16 பேரில் என்னை முதல் ஆளாகத் தேர்வு செய்திருந்தனர். ஜப்பானிய பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டியிலும் பரிசுகளைப் பெற்றுள்ளேன். நாடு திரும்பிய நான் புதுதில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஜப்பானிய மொழியில் எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றேன். அங்கேயே ஜப்பானிய மொழி கற்பிக்கும் விரிவுரையாளராகப் பணி கிடைத்தது. 1987 முதல் 1989-ம் ஆண்டு வரையில் அங்கு பணிபுரிந்தேன். பின்னர் ஜப்பானிய மொழி-தமிழ் இரண்டின் ஒற்றுமை குறித்து இளநிலை ஆய்வுப் பட்டம் பெறவும் முடிவு செய்தேன்.

ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் பணியின் அனுபவம் குறித்துக் கூறுங்களேன்?

புதுதில்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்த போது ஜப்பான் நாட்டுத் தூதரகம் நடத்திய ஜப்பானிய கலாசார மையம் சார்பில் மாணவ, மாணவியருக்கு மாலை நேர வகுப்புகள் மூலம் ஜப்பானிய மொழியைக் கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டேன்.

அப்போது ஹைதராபாதில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழி கற்பிக்கும் பணிக்கு அழைத்தனர். ஆனால், 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரையில் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஜப்பானிய மொழி கற்பிக்கும் பிரிவில் பணிபுரிந்தேன். அங்கு ஜப்பானிய அறக்கட்டளை மூலம் ஜப்பானிய மொழியைக் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் மதுரைக்கு வந்தேன். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் ஆலோசனையைத் தெரிவித்தனர்.

இதையடுத்து  இங்கு சேர்ந்தேன். தமிழ் மொழியுடன், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றுடன் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழியையும் கற்றுள்ளேன்.

மதுரையில் ஜப்பானிய மொழிக்கு எந்த அளவுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இருக்கிறது?

ஆரம்பத்தில் அமெரிக்கன் கல்லூரியில் மாதத்துக்கு 100 மணி நேர வகுப்பு என்ற அடிப்படையில்தான் ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் பிரிவை ஆரம்பித்தோம். மாணவர்களிடையே அதிக வரவேற்பு இருந்ததை அடுத்து இப்போது மொழிப் பாடமாக அனைத்துத் துறை மாணவர்களும் கற்றுவருகின்றனர். டிப்ளமோ படிப்பாகவும் ஜப்பானிய மொழி கற்றுத்தரப்படுகிறது. மேலும் ஜப்பானிய ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் கற்றுத்தரப்பட உள்ளது.

சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் ஜப்பானிய மொழியை அதிகமானோர் கற்றுவருகின்றனர். சிம்மக்கல் சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில்கூட தற்போது ஜப்பான் மொழியை குழந்தைகள், ஆசிரியைகள் கற்றுவருகிறார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஜப்பானிய மொழி ஆய்வு மையத்தை அமைப்பதே எனது எதிர்காலக் கனவாகும்.

ஜப்பானிய மொழியை எளிதில் கற்க மாணவர்களால் முடிகிறதா?

அமெரிக்கன் கல்லூரியில் தற்போது 50 பேர் வரையில் ஜப்பானிய மொழியை  முதல் பாட மொழியாகப் படித்துவருகின்றனர். இதில் மாணவியர் அதிக ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். ஜப்பானிய அரசு நடத்தும் தேர்வை எழுதி அந்நாட்டுக்கு மதுரையிலிருந்து சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவியர் சென்று வந்துள்ளனர்.

ஜப்பானிய மொழியைக் கற்போருக்கு பணி வாய்ப்புகள் எப்படி?

இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் ஜப்பானிய கூட்டு நிறுவனங்கள் அதிகம்.

தற்போது தொழில் துறையில் அதிகமாக முன்னேறிய நாடாக உள்ள ஜப்பானில் பணிபுரிய ஏராளமானோர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளனர்.

அந்த அடிப்படையில் பல பெண்கள் தங்களுக்குக் கணவராக வரப்போகிறவர் ஜப்பானில் பணிபுரிவதால் அதற்காக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறுகின்றனர்.மேலும், சுற்றுலா வழிகாட்டி, நிறுவனங்களில் கலந்துரையாடலின்போது மொழி பெயர்ப்பாளர் எனப் பல பணிகளுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அங்கு படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் சலுகையும் அந்நாட்டு அரசால் வழங்கப்படுகிறது. இதை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.



தமிழறிஞர் பெண்ணான நீங்கள் ஜப்பான் மொழியில் சிறந்த ஆசிரியையாக விளங்குவது எப்படி?

எனக்குத் தமிழ் மொழி மீது இயற்கையாகவே பிடிப்பு உண்டு. அதனால்தான் இப்போது தமிழ்ச் சிறுகதை உள்ளிட்ட இலக்கியங்களை ஜப்பானில் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

ஜப்பான் மொழியில் "ஹனா' என்றால் பூ என்று அர்த்தமாம். ஆம்! இந்த ஜப்பான் மொழிப் பேராசிரியை பாடம் நடத்தும் விதத்தைப் பார்த்தால், சாலமன் பாப்பையா என்ற பழுத்த தமிழ் மரத்தில் பூத்த "ஹனா' விமலா சாலமன் என்றால் அது பொருத்தமாகவே இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com