கணவரைவிட எனக்குத்தான் அதிக வோட்டு!

""சேச்சே... இந்த ரோடெல்லாம் இப்படித் தூசியும், சகதியுமா சுத்தமில்லாமல்ல இருக்கு... இதைச் சரிபண்ணமாட்டாங்களா...'' என்ற ஆதங்கத்தோடு ஒரு குடும்பத் தலைவி பஜாரில் நடந்துகொண்டிருக்க, அவரை அவசரமாக அழைத்து வந
கணவரைவிட எனக்குத்தான் அதிக வோட்டு!
Updated on
2 min read

""சேச்சே... இந்த ரோடெல்லாம் இப்படித் தூசியும், சகதியுமா சுத்தமில்லாமல்ல இருக்கு... இதைச் சரிபண்ணமாட்டாங்களா...'' என்ற ஆதங்கத்தோடு ஒரு குடும்பத் தலைவி பஜாரில் நடந்துகொண்டிருக்க, அவரை அவசரமாக அழைத்து வந்து அதே பகுதிக்கு வார்டு கவுன்சிலருக்கு நிற்கவைத்து, அவரையே அந்த மாநகருக்கு மேயராக்கி...  நீயே எல்லாத்தையும் சரிபண்ணிக்கோ.... என ஒரு வாய்ப்பையும் வழங்கினால் எப்படி இருக்கும்? இது ஏதோ திரைப்படத்தில் வந்த கற்பனைக் காட்சியல்ல... நிஜத்தில் நடந்த உண்மை.. இப்படித்தான் மதுரை மாநகராட்சியில் இப்போது மேயராக இருக்கும் தேன்மொழிக்கும் அரசியல் பிரவேசம் நடந்தது.

திருமணத்துக்கு முன் மதுரையைப் பார்க்கக்கூட வாய்ப்பில்லாமல் குக்கிராமத்தில் இருந்த அவர் இப்போது... மதுரை மாநகரத்தின் முதல் பெண் மேயர். அரசியலில் திணிக்கப்பட்ட அவரிடம்

அரசியல் கலக்காமல் ஒரு பேட்டி:

* உங்களைப் பற்றி கூறுங்களேன்?

எனது ஊர், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள தூயனூர். கிராம முன்சீப்பான அப்பா, வீட்டைவிட்டு வெளியேறாத அம்மா, 3 சகோதரிகள், 3 சகோதரர்கள் இவர்களுடன் 5 வது குழந்தையாகப் பிறந்தேன்.

எட்டாவது வரைதான் படித்தேன். காடு, கழனிக்குக்கூட சென்றதில்லை. சிறு வயதில் அண்ணனுடன் ரயில் ஏறி மானாமதுரைக்கு சென்று படம் பார்த்த அனுபவம் உண்டு.

எம்.ஜி.ஆர். படத்தை விரும்பிப் பார்ப்பேன். உரிமைக்குரல் உள்ளிட்ட பல படங்களைப் பார்த்துள்ளேன். அதேபோல சிவாஜியையும் பிடிக்கும். இப்போது ரஜினி, கமல் படங்களைப் பார்ப்பேன். நடிகைன்னா பத்மினி, கே.ஆர்.விஜயா, ரேவதி, ஸ்ரீவித்யாவைப் பிடிக்கும்.

* நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்று நினைத்தது உண்டா?

கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. நான் பஜாரில் எனது தோழி ஒருவருடன் சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த ஒருவர் எனது கணவர் அவசரமாகக் கூப்பிடுவதாகக் கூறினார். நானும் வீடு வந்தேன். அப்போதுதான் நான் வசிக்கும் சுப்பிரமணியபுரம் பகுதியில் (42-வது வார்டு) கவுன்சிலராக நிற்குமாறு கூறினார்கள்.

எனக்கு கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போலத்தான் அப்போது இருந்தது. என்றாலும் கணவர் தைரியம்கூறி பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிற்கச் சொன்னதாக கூறியதாலும் நான் தேர்தலில் நிற்க சம்மதித்தேன்.

* நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என நினைத்தது உண்டா?

திமுக சார்பில் நின்றதால் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், எனது கணவருக்கு இதே வார்டில் கிடைத்த வாக்குகளைவிட அதிக வாக்குகள்  எனக்குக் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

அதிலும் மேயர் பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. செ.ராமச்சந்திரன் மேயராக இருந்தபோது எனது கணவர் தெற்கு மண்டலத் தலைவராக இருந்தார். அப்போது எங்கள் பகுதிக்கு வந்த மேயரை நான் வரவேற்கச் சென்றபோது, மேயரா எனப் பிரமிப்போடு அவரைப் பார்த்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற நான், கணவருடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தபோது என்னைச் சந்தித்த தற்போதைய துணை மேயர், நீங்கள் மேயராகும் வாய்ப்பு உள்ளது என்று கூறியபோது ஏதோ கனவு போலவே இருந்தது. அந்தக் கனவு நனவாகும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

* குடும்பத்தலைவியாக இருக்கும்போது உங்கள் பகுதி குறைகளை யாரிடமாவது கூறி மனு அளித்தது உண்டா?

மனு அளித்தது இல்லை. ஆனால், எனது கணவர் மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவராக இருந்தபோது அடிக்கடி சாலைகளை நல்ல முறையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்வேன். நான் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், அமைச்சர் தங்கம் தென்னரசு எனது கணவருடன் வந்திருந்தார். அப்போது நான் பிறந்த கிராமம் 50 ஆண்டுகளாகச் சாலை வசதியின்றி இருப்பதைச் சுட்டிக்காட்டினேன். அதன் பின் அங்கு சாலை போடப்பட்டது.

* அதிகம் படிக்காத உங்களால் பட்டம் பெற்றுள்ள அதிகாரிகளை எப்படி வேலை வாங்க முடிகிறது?

நான் எப்போதும் அதிகாரத்தோடு யாரையும் வேலை வாங்குவதில்லை. அன்பாகத்தான் சொல்லி வேலை வாங்குகிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதில் வருத்தமாகத்தான் உள்ளது. இதைக்கூட எனது அம்மாவிடம் கேட்டேன். அவரோ, நாங்கள் படிக்க வைத்தோம், நீதான் படிக்கவில்லை என என்னை கோபித்துக்கொள்கிறார். கல்லூரி அளவுக்குப் படிந்திருந்தால் இப்போது இங்கிலீசில் பேசி இன்னும் கொஞ்சம் விவரமாக செயல்பட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் உள்ளது.

* அதிகாரிகள் ஆங்கிலத்தில் கொண்டுவரும் கோப்புகளை எப்படி சரிபார்த்து கையெழுத்திடுகிறீர்கள்?

எல்லாக் கோப்புகளையும் தமிழில்தான் எழுதி வருகிறார்கள். அதைப் படித்துப் பார்த்துதான் கையெழுத்திடுகிறேன். நான் அதிகம் படிக்காதவள் என்பதால் மேயர் பதவியில் நீடிக்கமாட்டேன், பாதியிலேயே ஓடிவிடுவேன் என்றெல்லாம் நினைத்தவர்கள் உண்டு. ஆனால் இப்போது எனக்கு பதவியில் எப்படிச் செயல்படவேண்டும் என புரிந்துவிட்டது.

* வீட்டுக்குள்ளேயே இருந்த நீங்கள் முதல் மாமன்ற கூட்டத்தை நடத்தும்போது எப்படி இருந்தது? உங்கள் கணவர் எந்த வகையில் உங்களுக்கு உதவுகிறார்?

முதன்முதலில் கூட்டத்துக்கு வந்தபோது பயம் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது. ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பழமொழி. என்னைப் பொறுத்தவரை எனது முன்னேற்றத்துக்கு பின்னால் எனது கணவர் இருக்கிறார் என்பதே உண்மை.

* உங்கள் குழந்தைகள் குறித்து?

எனக்கு 2 மகன்கள். இருவரும் படித்து வருகிறார்கள். பெண் பி.காம். முடித்து, திருமணமாகிச் சென்றுவிட்டார். என்னுடன் எனது அம்மா இருப்பதால் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதில் சிரமம் ஏதும் தெரியவில்லை.

படம்: ப.குமாரபாண்டியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com