

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே முதலில் அனைவரின் நினைவுக்கும் வருவது கேக்தான். அதிலும் பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.
""இது 15}ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாகும். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது.
அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது அதில் மாமிச வகைகளையும் பயன்படுத்துவார்களாம். மதுபானங்களில் உள்ள ஆல்கஹாலில் அந்த மாமிசங்கள் கரைந்து புதியதொரு சுவையை ஏற்படுத்தித் தந்துள்ளதாம்.
பேக்கிங் முறையில் தயாரித்தால் அதற்கு பெயர் கேக். அதையே ஆவியில் வேக வைத்தால் புட்டிங். இது ஆங்கிலேயர்களின் கலாசாரம். நமது ஊரிலும் புட்டிங் உண்டு, ரைஸ் கேக் என்ற பெயரில். அது என்ன என்கிறீர்களா, நம்ம ஊர் இட்லிதான்.
நமது இட்லிகளுக்கு மல்லிகைப்பூ இட்லி முதல் குஷ்பூ இட்லி, சில்லி இட்லி எனப் பல பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதைப்போல தயாரிக்கப்படும் கேக்குகளுக்கும் வகைக்கேற்ற பெயருண்டு. எண்ணெயில் பொறித்தெடுத்தால் அதற்கு பெயர் வறுவல்(பிரை) என்பதைப்போல, மைக்ரோ ஓவன்களும், செங்கல்லைக் கொண்டு கட்டப்படும் பேக்கரி அடுப்புகளும் கண்டறியப்படாத அந்தக் காலகட்டத்தில் கொதிக்கும் தண்ணீரில் துணி மூட்டைக்குள் பாதுகாப்பாக கட்டப்பட்ட கலவையை முக்கி வேக வைத்து எடுத்து கேக் தயாரித்தனர். இதற்கு பெயர் போச்சிங் என்பதாகும். தற்போது தயாரிப்பு முறைகள் மாறுபட்டிருந்தாலும், சுவை கூட்டப்பட்டிருந்தாலும் கேக்கின் மகத்துவம் மட்டும் இன்னமும் மாறவில்லை'' என்கிறார் உதகையிலுள்ள சலிவன் கோர்ட் தலைமை செப்பான ஜோய்.
மலைப் பிரதேசங்களில்தான் கேக்கிற்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறதா எனக் கேட்டால், இல்லை சமவெளிப்பகுதிகளில் அதைவிட கூடுதலான வரவேற்பு உள்ளதென்கிறார் கோவையிலுள்ள கேஆர்எஸ் பேக்கரியின் உரிமையாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜ். ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வரும் இவர், ""கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் அதிகபட்சமாக 100 கிலோ கேக் விற்றாலே மிக அதிகமென்றிருந்த நிலையில் தற்போது இந்நாட்களில் குறைந்தது 10,000 கிலோ கேக் விற்பனையாவது உறுதி'' என்கிறார்.
குழந்தைகளின் பிறந்த நாளுக்குப் புத்தாடை இல்லாவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால் கேக்கில்லாமல் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்ற புதிய அணுகுமுறை கேக்கின் விற்பனையைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நவீன தொழில்நுட்ப முறைகளால் சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பு கேக், முட்டை சாப்பிடாதவர்களுக்காக முட்டை இல்லாத கேக் எனப் பல ரகங்களிலுமாக 200}க்கும் மேற்பட்ட சுவைகளில் தற்போது கேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேஆர்எஸ் பேக்கரியில் ஒரு கிலோ கேக் அதிகபட்சமாக ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உதகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்படும் கேக்குகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் கலந்து சுமார் 8 வாரங்கள் அந்தக் கலவையை வைத்திருந்து அதன் பின்னர் கேக் தயாரிக்கப்படுகிறது. இது 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் மட்டுமின்றி நாட்டின் பிற நட்சத்திர ஓட்டல்களிலும் இத்தகைய கேக் தயாரிக்கப்படுகிறது.
நாட்டின் பிற பகுதிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளுக்கும் உதகையில் தயாரிக்கப்படும் கேக்கிற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. சமவெளிப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கும், கலாசாரத்திற்கும் ஏதுவாகவே கேக் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், நீலகிரியைப் பொறுத்த மட்டில் ஆங்கிலேயர் காலத்தின் கலாசாரம் மட்டுமின்றி இங்கிலாந்திலுள்ளதைப் போலவே இங்கும் நிலவும் தட்ப வெப்ப நிலைக்காகவும் தயாரிக்கப்படும் கேக்குகள் சர்வதேச அளவிலும் புகழ் பெற்றவையாகும்.
அதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே நீலகிரியில் முதலில் உச்சரிக்கப்படும் வார்த்தை கேக் என்றால் மிகையாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.