ரொட்டியின் சரித்திரம்!

கிறிஸ்து பிறப்பதற்கு 1000 வருடங்களுக்கு முன்பிருந்த ஓர் உணவுப் பொருள் தற்போதும் வெவ்வேறு மாற்றங்களுடன் உலகம் முழுக்க அனைத்து தரப்பினரிடத்திலும் மிக முக்கிய இடத்திலுள்ளது என்றால் அது ரொட்டி ஒன்றுதான்.
ரொட்டியின் சரித்திரம்!
Updated on
2 min read

கிறிஸ்து பிறப்பதற்கு 1000 வருடங்களுக்கு முன்பிருந்த ஓர் உணவுப் பொருள் தற்போதும் வெவ்வேறு மாற்றங்களுடன் உலகம் முழுக்க அனைத்து தரப்பினரிடத்திலும் மிக முக்கிய இடத்திலுள்ளது என்றால் அது ரொட்டி ஒன்றுதான்.

மெசபடோமியாவிலும், எகிப்திலும் கோதுமை பயிர் முக்கிய விளைபொருளாக இருந்த காலகட்டத்தில் அந்த கோதுமையை அரைத்து பேஸ்ட் போல உருவாக்கி செங்கல் சூளைபோல கட்டப்பட்ட வெப்ப அடுப்புகளில் வேக வைத்து தயாரிக்கப்பட்டதுதான் ரொட்டி. அதன் பின்னர் நவீனமயமாக்கலுக்கு வந்த பின்னரும் பிரமாண்டமான ஓவன்கள் உருவாக்கப்பட்டபோது இந்த ரொட்டிகளும் காலத்திற்கேற்ற வகையில் சுவையில் மாற்றங்களை உருவாக்கி தயாரிக்கப்பட்டன.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால், மலை மாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் அதிக அளவில் இருந்த காரணத்தால் இன்னமும் நீலகிரியில் ரொட்டி என்பது மிக முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. அதிலும் மாவட்டத்தில் பிரெஞ்சு பிரெட் எனப்படும் ரொட்டி வகைக்கு தனி மவுசே உள்ளது.

மற்ற ரொட்டிகளைப் போல அல்லாமல் கிரிக்கெட் மட்டை போன்ற வடிவத்தில் சுமார் 2 அடி நீளம் வரை இந்த ரொட்டி இருக்கும். மற்ற வகையான ரொட்டிகள் மைதா மாவில் தயாரிக்கப்படும் நிலையில் பிரெஞ்சு பிரெட் மட்டும் ஆட்டா மாவில் தயாரிக்கப்படுவதாக, நீலகிரி மாவட்டத்திலேயே பிரெஞ்சு பிரெட் தயாரிக்கிற ஒரே நிறுவனமான நஹார் ஹோட்டல் நிறுவனத்தின் அங்கமான சைட் வாக் அமைப்பின் மேலாளர்கள் பாலு மற்றும் கலீம் அகமது ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் நம்மிடம் பகிர்ந்து மற்ற தகவல்களாவன:

""கோதுமை மாவை பயன்படுத்தி பிரெட் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உணவுப் பொருளாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் பிரெட் உருமாறியுள்ளது. நவதானியங்களைக் கொண்டு மல்ட்டி கிரெய்ன் பிரெட் எனவும், மிக முக்கிய மூலிகைகளைக் கொண்டு ஹெர்பல் பிரெட் எனப்படும் மூலிகை பிரெட், மில்க் பிரெட் மற்றும் சாண்ட்விச் எனவும் தயாரிக்கப்படுகிறது.

இதில் ஐரோப்பியர்களின் தனி சுவைக்கேற்ப பிரெஞ்சு பிரெட் தயாரிக்கப்டுகிறது. இதில் சீஸ் மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்க்கப்படுவதால் எளிதில் செரித்துவிடும். உதகைக்கு வரும் வெளிநாட்டவர் அனைவருமே பிரெஞ்சு பிரெட்டையே விரும்புகின்றனர். அதனால் அவர்களின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நீலகிரி மாவட்டத்தில் எங்களது நிறுவனத்தில் மட்டுமே பிரெஞ்சு பிரெட் தயாரிக்கப்படுகிறது'' என்றனர்.

இந்த ரொட்டி பல முக்கிய பிரச்னைகளுக்கும் காரணகர்த்தாவாக அமைந்துள்ளது.

பைபிளில் வாற்கோதுமை ரொட்டியைக் குறித்து பல இடங்களிலும், கடைசி இரவு விருந்திலும் குறிப்பிடப்படுகிறது. இயேசு கற்பித்த பிரார்த்தனையிலும் ரொட்டி என்ற வார்த்தையே இடம் பெற்றுள்ளது.

இந்த ரொட்டி தற்போது சற்றே உருமாறி பன், பாவ், சூப் ஸ்டிக், பர்கர் என்றெல்லாம் மாறிவிட்டது. பீட்சாவுக்கும் அடிப்படை ரொட்டியே. இந்த ரொட்டியிலிருந்து எகிப்து நாட்டில் உபபொருள் ஒன்றும் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது வேறொன்றுமில்லை. பிரெட் ஒயின்தான் அது. ஈஸ்ட் கலந்த ரொட்டியை நீரில் முக்கி எடுக்கும்போது அந்த நீரில் கலக்கும் ஆல்கஹாலிலிருந்து பிரெட் ஒயின் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தற்போதும் அமெரிக்காவில் வழக்கிலுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com