

உலகளவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்கள் உள்ளனர். அதேபோல, தற்போது பருவநிலை மாற்றம் தொடர்பான பொதுவான பிரச்னைகளுக்கு விழிப்புணர்வு காணவும் சாம்பியன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பினர், நீலகிரியிலுள்ள நீலகிரி ஆவண மையத்தின் உதவியுடன் இத்தகைய சாம்பியன்களை உருவாக்கியுள்ளனர். "கிளைமேட் சாம்பியன்கள்' என அழைக்கப்படும் இவர்களுக்கு குன்னூரில் ஒரு வார பயிற்சி வழங்கப்பட்டது. ஜெர்மனி, நார்வே, சீனா, இங்கிலாந்து, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், லிபியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இந்தியாவின் சார்பில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருமாக மொத்தம் 30 பேர் இந்த முகாமில் பங்கேற்று கிளைமேட் சாம்பியன்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
உலக வெப்ப மயமாதலால் பருவநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்காக வெளியேறும் கார்பன்டை ஆக்சைடின் அளவை குறைப்பதற்காக உலகம் முழுதும் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் காலநிலை மாற்றம் குறித்த இந்த சர்வதேச கருத்தரங்கையும் நடத்தியுள்ளது.
தற்போதுள்ள இளைய தலைமுறையினரிடையே காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது. இதில் இளைஞர்கள் அனைத்து மக்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால் பசுமையான உலகை உருவாக்க முடியுமென, இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் தென்னிந்திய இயக்குநர் கிரிஸ் கிப்சன் குறிப்பிட்டார்.
""மலைகளைப் பாதுகாத்தால் மட்டுமே வன உயிரினங்களையும் பாதுகாக்க முடியும். எனவே, உயிர்ச்சூழல் மண்டலங்களாக உள்ள மலைப்பகுதிகளின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருடன் ஒன்றிணைத்து காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்'' என இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா குறிப்பிட்டார்.
""நீலகிரியின் தன்மையை தற்போது நாம் இழந்து வருவதாகவும், இந்த நிலையை மாற்றி நீலகிரி முற்காலத்தில் எப்படி இருந்ததோ அந்த நிலைமைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு கூட்டு முயற்சிகளே அவசியமென நீலகிரி ஆவண மையத்தின் தலைவர் தர்மலிங்கம் வேணுகோபால் குறிப்பிட்டார்.
குன்னூரிலுள்ள சால்வேசன் ஆர்மி அரங்கில் ஜனவரி 30ம்தேதி வரை 7 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தங்கின் முடிவாக எதிர்வரும் 2015ம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் ஒரு உறுதிமொழி சாசனமும் வெளியிடப்பட்டது. அதில் புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், வர்த்தக ரீதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு சர்வதேச அளவிலான தரச்சான்று பெறுவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த நில மேலாண்மை திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டுமெனவும், நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் சுற்றுலா திட்டங்களை வரைமுறைப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா திட்டங்களையே செயல்படுத்த வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பு வரி வசூலிக்கப்பட்டு அந்த நிதியை வனப்பாதுகாப்புக்கு செலவிடலாம் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இயற்கை வேளாண்மை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், திடக்கழிவு மேலாண்மை, திட்டமிட்ட நீர் வடிகால்களை அமைத்தல் ஆகியவற்றோடு அந்தந்த நாடுகளில் ள் மற்றும் விலங்குகளுக்கு பதிலாக அந்த தட்பவெப்ப நிலையின் கீழ் வளரும் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்த கிளைமேட் சாம்பியன்கள் நீலகிரியிலுள்ள தோடர், கோத்தர், குரும்பர் மற்றும் இருளர் இன பழங்குடியினரைக் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கைகளில் பழங்குடியினருக்கு இயற்கையாகவே உள்ள பாரம்பரிய அறிவுத்திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
தற்போது சர்வதேச பிரச்சினையாக எழுந்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பினர், நீலகிரி ஆவண மையத்துடன் இணைந்து நடத்தியுள்ள இளைஞர்களுக்கான இந்த சர்வதேச கருத்தரங்கு இதுபோன்ற பல்வேறு கருத்தரங்குகளுக்கு வழிவகுத்துள்ளதோடு, காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடத்தில் ஏற்படுத்த முனைந்தது வரவேற்பையே பெற்றிருந்தது.
அதேபோல இந்த கிளைமேட் சாம்பியன்களும் நீலகிரியில் தங்களுக்கு கிடைத்துள்ள அனுபவங்களைக் கொண்டு அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெறும்போதுதான் இந்தக் கருத்தரங்கின் நோக்கமும் வெற்றி பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.