
கண்களை எந்தப்பக்கமும் திருப்புதல்,குதிரை போன்ற முக அமைப்பு,குரங்கு போன்ற வால்,ஆண் இனங்களே இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளை உடைய அரியவகை கடல்வாழ் உயிரினம் கடல்குதிரை. கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல் நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடல்தாவரங்கள்,கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக் கொண்டு இருக்கும்.
முதுகுத் துடுப்பினைப் பயன் படுத்தி பெரும்பாலும் குதித்து குதித்தும் செல்லும் மீன் இனமாகும்.
""சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கும். பிற விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற்தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறியதாக இருந்தாலும் எந்தப்பக்கமும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையது. தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.
பெண் இனம் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால்பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கை 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருக்கும். இதன் விலை கிலோவுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை உள்ளது.சிங்கப்பூர்,சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்குச் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாக கொடுத்து
வருகின்றனர்.
தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால் உலக அளவில் இதன் தேவை அதிகமாகியுள்ளது'' என்கிறார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ. முருகன்.
சி.வ.சு.ஜெகஜோதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.