கடல் அட்டை!

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த உயிரினம் சில சமயங்களில் உடலை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றும் ஒரு உயிரினமாக மாறுவதும் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஒட்டக்கூடிய நூலிழை போன்ற நச்சு
கடல் அட்டை!
Published on
Updated on
1 min read

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த உயிரினம் சில சமயங்களில் உடலை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றும் ஒரு உயிரினமாக மாறுவதும் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஒட்டக்கூடிய நூலிழை போன்ற நச்சுத் திரவத்தை வெளிப்படுத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சிறப்புக்களை உடைய அரியவகை கடல்வாழ் உயிரினமே கடல் அட்டை.

தமிழகத்தில் கடல் அட்டை என்றும் கடல் வெள்ளரி என்றும் மலேசியாவில் ட்ரபாங் எனவும் பிரான்சில் பீச்-டி.மெர் என்றும் அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூர்,ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த உயிரினம் சீனாவில் சுவை மிகு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த கொழுப்புச் சத்தும் அதிக புரதச்சத்தும் நிறைந்தது. ஒரு கிலோ கடல் அட்டை ரூ.2000வரை விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் 650 வகைகள் இருந்தாலும் இந்தியாவில் 200 வகைகள் மட்டுமே உள்ளது.

பொருளாதார ரீதியாக 13 வகைகளே முக்கியமானது. இவற்றில் 5 இனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம்,கீழக்கரை,பெரியபட்டிணம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.

புழுவைப் போன்று நீண்டு பருத்தும், உருண்டையாகவும் இருக்கும். இரு முனைகளும் மழுங்கியே இருக்கும். உடலின் மேற்புறம் வளைந்தும் அடிப்பகுதி தட்டையாகவும் தோல்

தடிப்பானதாகவும், வழவழப்பானதாகவும் இருக்கிறது. எலும்புகள் சிறியதாக இருந்தாலும் உடலின் பல்வேறு பகுதியில் பரவியுள்ளன. மிருதுவான உடலுடைய இதன் முன்புறத்தின் அடியில் வாயும் அதனைச் சுற்றி 20 சிறிய உணர்நீட்சி உறுப்புகளும் உள்ளன. இவையே உணவினைத் தேடவும் தேடிய பின் அதனை உண்ணவும் பெரிதும் பயன்படுகின்றன. உடலின் உட்புறம் உள்ள குழியில் ஒருவித திரவம் நிரம்பி இருக்கும்.

இத்திரவத்தின் மூலமே பிராணவாயு மற்றும் தேவையான உணவுப் பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்திக் கொள்கிறது. பெரும்பாலும்  சாம்பல்,கருப்பு,வெள்ளை நிறங்களில் காணப்படும் இந்த இனம் ஒருவித சுண்ணாம்புப் பொருளால் ஆனது. ஆழம் குறைந்த கடல் பகுதிகள்,பவளப்பாறைகள்,களிமண் நிறைந்த கடல் பகுதிகளிலும் இவைகளைக் காணமுடிகிறது. சிறிய வெண்புள்ளிகளைப் போலத் தெரியும் கருவுற்ற இதன் முட்டைகள் நீரில் மிதந்து திரிகின்றன.          

கடலில் வெடி வைத்து மீன் பிடித்தல்,தடை செய்யப்பட்ட வலைகளால் மீன் பிடித்தல், கடலில் மூழ்கிய நிலையில் கைகளாலும்,அலுமினியத் தட்டுக்களாலும் இவை இருக்கும் இடங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சேகரித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரினம் அழிந்து கொண்டே போகிறது. இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் அடையாதவைகளையும் பிடிப்பதால் புதிதாக உருவாகும் இளம் குஞ்சுகளும் அழிகின்றன.

இவற்றைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் மீனவர்களோ இதனைப் பிடிக்க அனுமதி கோரி பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவற்றைப் பிடிப்பவர்களை வனத்துறையினரும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com