
எங்க வீட்டுக்காரரு குதிரை ரேஸூக்குப் போறாரு என்று அலுத்துக் கொள்ளும் பெண்களைப் பார்த்திருப்போம். பெண் ஒருத்தர் ரேஸþக்குப் போகிறார்.
அதுவும் குதிரை சவாரி செய்பவராக என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். குதிரைப் பந்தயங்களில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில், 235 ஆண்டு கால இந்திய குதிரைப்பந்தய வரலாற்றில் முதன்முறையாக "1000 கினியாஸ் கிளாசிக் குதிரைப் பந்தயத்தில்' பெண் ஒருவர் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தப் போட்டி முதல்முறையாக ரேஸில் கலந்து கொள்ளும் பெண் குதிரைகளுக்கானது. ஆகவே அவற்றின் முதல் ஓட்டம் மூர்க்கமாக இருக்கும். இக் குதிரைப் பந்தயத்தில் தற்போது முடிசூடா ராணியாக விளங்கும் ரூபாதான் மலைகளின் அரசியான உதகையில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவிலுள்ள ஒரே பெண் ஜாக்கியான ரூபாவைப் பற்றி சில தகவல்கள்:
ரூபா ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால் தற்போது வசிப்பது சென்னையில்தான். இவரது தந்தை நர்பத் சிங், ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணியாற்றியவர். தற்போது குதிரை பயிற்சியாளராக இருக்கிறார். ராஜ்புத்திர வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் இயல்பாகவே குதிரைகளின் மீது ஆர்வமும், அவற்றை அடக்கி ஆளும் திறனும் பெற்ற ரூபா, தனது 4-வது வயதிலேயே குதிரை சவாரியில் ஈடுபட்டாராம். இவரது வீட்டிலிருந்த குதிரைதான் இவரது ஆர்வத்துக்கு வடிகாலாக அமைந்தது. நான்கு வயதில் நாமெல்லாம் பொம்மைக் குதிரைகளை வைத்து விளையாடி வந்த நிலையில் ரூபா நிஜ குதிரையில் சவாரி செய்து அசத்தினார்.
சென்னையில் மந்தனா என்ற பிரபல குதிரை பயிற்சியாளரிடம் பயிற்சி ஜாக்கியாக சேர்ந்து கடந்த 2002-ம் ஆண்டில் ஜாக்கிக்கான லைசென்ஸ் பெற்ற ரூபா, இதுவரை சுமார் 600 பந்தயங்களில் பங்கேற்று அவற்றில் 150 முறை வெற்றி கண்டுள்ளார்.
27-வயதான ரூபா பொருளாதாரத்தில் எம்.ஃபில்., முடித்து விட்டு தற்போது எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவரது சகோதரர் ரவீந்தர் சிங்கும் ஜாக்கிதான். இவர், ஹைதராபாதில் ஜாக்கியாக உள்ளார்.
உதகையில் நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயத் தொடரில் பங்கேற்றுவரும் ரூபா நம்மிடம் தெரிவித்ததாவது:
""எனது தாத்தாவும், தந்தையும் குதிரை பயிற்சியாளர்கள் என்பதோடு எனது சகோதரரும் ஜாக்கி என்பதால் எங்களது வீட்டில் மற்ற விஷயங்களைவிட குதிரைகளைக் குறித்த விஷயங்கள்தான் பிரதானமானது. அதுதான் நான் இப்போது குதிரைப்பந்தய வீராங்கனையாக மாறியுள்ளதற்குக் காரணம். குதிரையின் கம்பீரமும், அதன் மீது சவாரி செய்யும்போது மனதில் ஏற்படும் சந்தோஷமும் என்னை வெகுவாகக் கவர்ந்த விஷயங்கள்.
அதிகமாக யாரும் தேர்ந்தெடுக்காத துறை என்பதாலும் எனக்கிருந்த பயிற்சி மற்றும் குடும்ப பின்னணியின் காரணமாகவும் இத்துறையில் சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை சிறு வயதிலேயே ஏற்பட்டு விட்டது. அதுதான் தற்போது நான் பெற்றுள்ள கிளாசிக் வெற்றிக்கு அஸ்திவாரம்.
இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், பெங்களூரு, மைசூரு, மற்றும் உதகை ஆகிய எட்டு இடங்களில் ஆண்டு முழுதும் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றன. இவற்றில் சுமார் 500 ஜாக்கிகள் பங்கேற்கின்றனர். இவர்களில் நான் மட்டுமே பெண் ஜாக்கி. அதனால் நான் பங்கேற்கும் பந்தயங்களில் என்னைக் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
தினமும் அதிகாலையில் குதிரைகளுடன் டிராக் வாக் முடித்து பின்னர் தனியாக பயிற்சியில் ஈடுபடுவேன். மீண்டும் மாலையில் குதிரைகளுடன் பயிற்சி. குதிரைப் பந்தயங்கள் இல்லாவிட்டாலும் இந்தப் பயிற்சிகள் தொடரும். குதிரைப் பந்தயத்தில் பங்கேற்பவர்களின் முக்கிய தகுதியே அவர்களின் உடல் எடையைத் தொடர்ந்து பராமரிப்பதுதான். உடல் எடை 60 கிலோவைத் தாண்டக்கூடாது. குதிரைப்பந்தயங்களில் பங்கேற்பவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இதனால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாலே போதுமானது. ஆரோக்கியமும், முயற்சியும் இருந்தால் சாதுவாக இருந்தாலும் இத்துறையில் பிரகாசிக்கலாம்.
பந்தயத்தில் பங்கேற்கும் எல்லாக் குதிரைகளுமே சாதுவாக இருப்பதில்லை. சில முரட்டுக் குதிரைகளும் இருக்கும். அவற்றை அடக்கி ஆளத் தெரிய வேண்டும். ஆனால், எந்த குதிரையை ஓட்டப் போகிறோம் என்ற விபரம் பந்தயத்திற்கு முதல் நாள்தான் தெரியும்.
அதனால் குதிரையின் மீது அமர்ந்து அதன் தன்மைக்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொண்டால்தான் அவற்றை அடக்கி ஆள முடியும்.
2002-ஆம் ஆண்டில் ஜாக்கிக்கான லைசென்ஸ் பெற்ற பின்னர் கே.எஸ்.மந்தனாவின் "ஷெல்டிக் வென்ச்சர்' என்ற குதிரையில்தான் 2003-ஆம் ஆண்டில் எனது முதல் வெற்றியைப் பெற்றேன். அதைத்தொடர்ந்து 150 முறைக்கு மேல் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது பெற்றுள்ள கிளாசிக் வெற்றி'தான் வாழ்க்கையில் மறக்க முடியாதது'' என்கிறார் ரூபா.
உதகையில் இந்த ஆண்டு குதிரைப் பந்தய சீசன் தொடங்கிய ஒரு மாதத்தில் 6 வெற்றிகளை அதிரடியாக பெற்றுள்ள ரூபா, இந்திய குதிரைப் பந்தய ஜாக்கிகள் வட்டாரத்தில் முடிசூடா ராணியாகவே விளங்கி வருகிறார்.
இந்திய குதிரைப்பந்தய களத்தில் மட்டுமின்றி வெளிநாட்டு களங்களிலும் வெற்றிக் கனிகளைப் பறிக்க வேண்டுமென்பதே ரூபாவின் கனவு திட்டம் என்பதால் விரைவில் அது நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.