ஊட்டி சாக்லேட்; ஏற்காடு அன்னாசி!

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. கிட்டத்தட்ட அனைவருமே எங்கேயாவது சுற்றுலா செல்லத் திட்டமிடுவார்கள். குறைந்தபட்சம் சொந்த ஊருக்காவது சென்று வருவார்கள். இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் பயணம்தான் பிரதானம்.
ஊட்டி சாக்லேட்; ஏற்காடு அன்னாசி!
Published on
Updated on
2 min read

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. கிட்டத்தட்ட அனைவருமே எங்கேயாவது சுற்றுலா செல்லத் திட்டமிடுவார்கள். குறைந்தபட்சம் சொந்த ஊருக்காவது சென்று வருவார்கள். இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் பயணம்தான் பிரதானம். அப்படி பயணம் செய்யும் போது கவனமாக இருந்தால் பயணம் கலக்கமின்றி கலகலப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



அதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. எத்தனை பேர், எங்கெங்கு போகிறீர்கள் என்பதை முதலில் முடிவெடுங்கள். அந்த இடங்களுக்குப் போய், வரும் செலவு பட்ஜெட்டுக்குள் வருகிறதா? என்பது மிக முக்கியம். பயணம் செய்யும் நாட்களில் வீட்டுப் பெண்களுக்குப் பர்சனல் பிரச்னைகள் உள்ளதா?

என்பதைத் தெரிந்து அதற்கேற்ப சுற்றுலாவைத் திட்டமிடுவது நல்லது. பஸ், ரயில், விமானம் எதில் பயணம் என்று முடிவெடுத்த பின்னர், உடனடியாக பயண ஏற்பாடுகளை தொடங்கி விடவும்.

சற்றே சொகுசாகப் பிரயாணிக்க டெம்போ டிராவலர், மாக்ஸி கேப், சுராஜ் மஸ்டா போன்ற வாகனங்களை அமர்த்திக் கொள்ளலாம். துணிமணிகள், பெட்டி படுக்கைகளை அடிக்கடி ஏற்றி இறக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதே போல் தண்ணீர் குடுவைகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தீர்ந்துவிட்டால் அங்கங்கு காலி குடுவையைக் கொடுத்துவிட்டு புதிய தண்ணீர் குடுவைகளை வாங்கிக் கொள்ளலாம்.

வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் உங்களோடு கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை ஒருவர் பொறுப்பாக கவனித்து வந்தால் பதட்டம் இருக்காது. இதனால் எந்தப் பொருளும் மிஸ் ஆகாது. பயணத்தில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். நெருங்கிய உறவுகளுடன் செல்லும்போது செலவுகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது.

சுற்றுலாத் தலங்களில் கூடுமான வரைக்கும் பணத்தை அதிகமாகக் கையில் வைத்திருக்காமல், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். திருட்டு மற்றும் தொலைந்து போவதால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கலாம். பணம் தொலைந்தால், தேவையில்லாத அலைச்சலையும் பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

குழந்தைகள், உடமைகள் மீது எப்போதும் கவனம் தேவை. பஸ், ரயில் நிறுத்தங்களில் கிடைக்கும் பொருட்கள் பெரும்பாலும் மிகச் சிறந்த உணவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் வயிற்றுக் கோளாறு போன்ற சிக்கல் ஏற்படலாம்.

இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் வரலாம். அப்படி உடல் நலக் குறைவால் சுற்றுலாவின் சந்தோஷமும் குறையக்கூடும். குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் எண்ணைப் பதார்த்தங்களைத் தவிர்த்தால் பயணம் ஜாலியாக இருக்கும்.

குளிர் பிரதேசப் பயணமாக இருந்தால் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பழைய கிழிந்த வேட்டி போன்றவற்றை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது. மலைப் பயணங்களின் போது வாந்தி மயக்கம் தவிர்க்க, தலைவலிக்கு மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்வதும் அவசியம்.

வீடு கட்ட, கல்யாணம் நடத்த கல்விக்கு என வங்கிக் கடன் தருவதை அறிவீர்கள். அதேபோல் சுற்றுலாவுக்கு லோன் தருகிறார்கள் தெரியுமா?

இது டிராவல் லோன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கூடுமானவரையில் லோன்களைத் தவிர்க்கலாம். பணம் அவசியம் என்ற பட்சத்தில் கிரெடிட் கார்டில் லோன் எடுப்பதை விட, பர்சனல் லோன் எடுப்பது நல்லது. ஏனென்றால், பர்சனல் லோனுக்கு வட்டி குறைவு.

அதேபோல் டிராவல் இன்சூரன்ஸ் எடுப்பதும் நல்லது. சுற்றுலா மற்றும் வெளியூர் செல்லும்போது நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், பத்திரங்கள் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட்டுச் செல்லுங்கள். வெளியூர் செல்லும்போது உங்கள் ஏரியா கூர்க்காவிடம் வீட்டை அடிக்கடி நோட்டம் பார்க்கச் சொல்லுங்கள். மேலும் காவல் நிலையத்திலும் பெட்டிஷனாக எழுதிக் கொடுப்பது நல்லது.

பயணத்தில் வயிறு சரியில்லை என்றால் சோடா குடிக்காமல், இளம்சூட்டில் நீர் அல்லது பால் குடிப்பது நல்லது. முடிந்தவரை அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை அளவோடு சாப்பிட்டால் பயணத்தில் பிரச்னை தலை காட்டாது. சுற்றுலா தலங்களில் "இது சூப்பர்', "அது அப்படி..' என்று சொல்வதை நம்ப வேண்டாம். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே என்ன ஸ்பெஷல் என்பதை முன்பே அறிந்து கொள்ளவும். ஊட்டி சாக்லேட், ஏற்காடு அன்னாசி என ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் உணவு பொருட்களை அங்கேயே சாப்பிட்டால்தான் நல்ல ருசியோடு இருக்கும். நம்ம ஊரில் மலிவாகக் கிடைக்கும் பொருளைப் பெருமைக்காக சுற்றுலாத் தலத்தில் அதிக விலைக்கு வாங்க வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com