அருட்பா..நீச்சல்..கிடார்..இனியா!

""வல்லதா யெல்லா மாகியெல்லாமும் அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி'' - பக்தி மணம் கமழும் குரலில் அருட்பாவைப் பாடிக் கொண்டிருக்கிறா
அருட்பா..நீச்சல்..கிடார்..இனியா!

""வல்லதா யெல்லா மாகியெல்லாமும்

அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோர்

அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி''

- பக்தி மணம் கமழும் குரலில் அருட்பாவைப் பாடிக் கொண்டிருக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சிறுமி. அந்தச் சிறுமியின் ஞான ஒலியில் கட்டுண்டிருந்தார்கள் பக்தர்கள். அவர் பெயர் இனியா. பெயரைப் போலவே இருந்தது அவரின் பேச்சும்.

""அப்பா செந்தில்குமார் இதய நோய் மருத்துவ நிபுணர். அம்மா அமுதவடிவு கண் மருத்துவர். தாத்தா சுப்ரமணியன் நெல் பதன ஆராய்ச்சி மையத்தின் முதல் மேலாண் இயக்குநர். பாட்டி சிவகாமசுந்தரி தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் எல்லாருமே வள்ளலாரின் தீவிர பக்தர்கள்.

அவர்கள் வழியில் வந்த நான் வெறும் பக்தையாய் இருப்பதை விட, அவர் பாடிச் சென்ற பாடல்களைப் பாடிப் பரப்புவது என்பதை நோக்கமாகக் கொண்டு ஐந்து வயதிலேயே அருட்பாவைக் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். குரலிசைப் பயிற்சியை கணேச அய்யரின் பேத்தி கீதா அவர்களிடமும் தஞ்சை கெüசல்யா மேடத்திடமும் மூன்று வருடங்கள் கற்றேன்.

அருட்பாவை ஓரளவு கற்றுத் தேர்ந்தபின் முதன் முதலாக வடலூரில்தான் மேடை ஏறினேன். தொடர்ந்து நான்கு வருடங்களாக பாடியும் வருகின்றேன். அருட்பாவில் ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்கள் உள்ளன. அதையெல்லாம் பொருள்பட முறையாகக் கற்றுக் கொண்டும் வருகிறேன்.

திருவையாறு தியாக பிரம்ம சபையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அருட்பா பாடிவருகிறேன். தஞ்சை பெரிய கோயில் வழிபாட்டு மன்றத்திலும் கோவை நகரின் தமிழ் அமைப்புகளிலும் தொடர்ந்து அருட்பா பாடிவருகிறேன். வள்ளலார் மன்றத்தின் அருட்பா இசை மணி, இசை செல்வி என்ற இரண்டு பட்டங்களைப் பெற்றிருக்கிறேன்.

மேடையில் அருட்பா மட்டுமின்றி பாரதி, பாரதி தாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களுடன் மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பாடியுள்ள பக்திப் பாடல்களையும் பாடிவருகிறேன்.

அருட்பா பாடுவதைத் தவிர, எனக்கு நீச்சல் போட்டிகளில் பங்கெடுப்பதிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். தஞ்சையில் உள்ள ஹரிஷ் என்பவரிடம் முறையாக நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். நீச்சலில் ஃப்ரீ ஸ்டைல், பட்டர்ஃபிளை, பேக்-ஸ்ட்ரோக் போன்ற பல நிலைகளிலும் மாவட்ட அளவில் வென்றதுடன் மதுரை, ஓசூர், சென்னை, திருச்சி போன்ற இடங்களில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, பத்து தங்கப் பதக்கம், எட்டு வெள்ளிப் பதக்கம், ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளேன்.

பாடுவது நீந்துவது தவிர ஓவியம் வரைவதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. கண்ணாடி ஓவியம், பானை ஓவியம், பல்ப் ஓவியம், கொலாஜ் ஓவியம்... இப்படிப் பல்வேறு ஓவியங்களும் வரைந்து பாராட்டுகளுடன் பரிசுகளும் வென்றுள்ளேன். வாத்திய இசைத் துறையில் மேற்கத்திய வாத்தியமான கிடார் வாசிக்கக் கற்று வருகிறேன். ஹாம் ரேடியோ பற்றி ஆர்வமாக பல தகவல்களைத் திரட்டி வருகிறேன்.

தற்போது கமலா சுப்ரமணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன். படித்துக்கொண்டே இத்தனை துறைகளில் நான் ஈடுபடுவதற்கும் ஜெயிப்பதற்கும் என்னுடைய அம்மாதான் காரணம். என்னுடைய தந்தை சமீபத்தில்தான் இறந்துவிட்டார். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் எங்கப்பாவும் ஒருவர். பல ஏழைகளுக்குச் செலவில்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்னுடைய அப்பா.

நான் மருத்துவராகி ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பது அவருடைய கனவு. நீச்சலில் உலக அளவில் சாதிக்கவேண்டும் என்பது என்னுடைய கனவு. இரண்டு கனவுகளுமே, நான் தினமும் பாடும் அருட்பாவினால் நிச்சயம் கைகூடும் என்பது எனது நம்பிக்கை!'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com