

கடம், ஆண்கள் வாசிக்கும் இசைக் கருவியாகும். ஆண்கள் கூட ஒரு நேரத்தில் ஒரு கடம்தான் வாசிப்பர். ஆனால், சுகன்யா ராம்கோபால் ஒரேநேரத்தில் 6 கடங்களை வாசித்து "கடதரங்கம்' என்ற நிகழ்ச்சியையே நடத்தினார். நீலகிரி கலாச்சார சங்கத்தின் சார்பில் குன்னூரில் சமீபத்தில் நடந்தது இந்நிகழ்ச்சி.
நாட்டைக் குறிஞ்சி ராகத்தில் வர்ணம் தொடங்கியது முதலே ரசிகர்களின் கரவொலி சப்தத்தால் அரங்கம் அதிர்ந்தது. "ஆனந்தம்' எனும் தலைப்பில் அவர் வழங்கிய கடதரங்க "தனி' அரங்கில் இருப்பவர்களுக்குப் புதிய தாள அனுபவத்தைக் கொடுத்தது! இவரோடு இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவருமே பெண்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த வித்தியாசமான நிகழ்ச்சிக்குப் பின்னர், சுகன்யா ராம்கோபாலைச் சந்தித்தோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட இசை விருந்து...
""கடம் என்பது உப பக்க வாத்தியமாகத்தான் இருந்தது. அதிலும் கச்சேரிகளில் கடத்திற்கு 5வது ஸ்தானமே கிடைத்திருந்தது. ஆனால், கடத்தையும் பிரதானப்படுத்த வேண்டுமென நினைத்தபோது இதை வாசிப்பது பெண் என்பதால் எனக்கு யாரும் முக்கியத்துவம் தராத நிலை இருந்தது. இந்த நிலையை என்னுடைய முறையான பயிற்சியினால் முழுவதுமாக மாற்றினேன். விதவிதமான ராகங்களில் அமைந்த தியாகராஜர் கீர்த்தனைகளையும், தமிழ் கீர்த்தனைகளையும் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து பாடிவருகிறேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அமெரிக்கா, சைப்ரஸ் போன்ற வெளிநாடுகளிலுமாக இதுவரை சுமார் 250 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். எந்த ஒரு சங்கீதத்திற்கும் மொழி தேவையில்லை. இசையும், பாவமும், பக்திப் பூர்வமும்தான் தேவை. மொழி தெரிந்தால் இன்னும் அதிகமாக அனுபவிக்கலாம். தற்போதைய சூழலில் தமிழ் கீர்த்தனைகள் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றன. பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள், "குறையொன்றுமில்லை' போன்றவற்றை மக்கள் இன்னமும் விரும்பிக் கேட்கின்றனர்.
இந்த நாகரிக உலகில் இளைஞர்களின் விருப்பங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களின் மனதுக்கு நிம்மதி தருவது சங்கீதம்தான் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவதோடு, சங்கீதமும் கற்றுக் கொள்கின்றனர். இதற்கு ஊடகங்களும் உறுதுணையாக உள்ளன. இளம் கலைஞர்களுக்கு அதிகம் ஆதரவளிக்கின்றன.
இசைத்துறையில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம், நான், தமிழ்த் தாத்தாவின் கொள்ளுப் பேத்தி என்பதும் ஒரு காரணம். அவரது தமிழ்த்தொண்டை எந்தத் தமிழனாலும் மறக்கமுடியாது.
உ.வே.சாவைப் பற்றி எப்போது நினைத்தாலும் சந்தோஷமாகவே இருக்கும். தமிழ்த்தாத்தாவின் தந்தை வெங்கடசுப்ரமணியம். இவர் ஹரி கதை சொல்பவர். தனது மகனான உ.வே.சாமிநாதய்யரை, பெரிய சங்கீத வித்வானாக்க நினைத்திருந்தார். ஆனால், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையோ இவரை தமிழ்த் தொண்டாளராக மாற்ற முயற்சித்தார். இதில் தமிழ்த்தொண்டையே உ.வே.சா. தேர்ந்தெடுத்தார்.
அந்தப் பரம்பரையில் வந்த அவரது கொள்ளுப் பேத்தியான நான், சங்கீதத் துறையில் இன்றைக்கு இருப்பதால், "தமிழ்த்தாத்தாவின் மறு பிறவியே நான்தானோ?!' என்ற சந்தேகம்கூட எனக்குள் உண்டு!'' என்கிறார் சுகன்யா ராம்கோபால்.
சுகன்யா ராம்கோபால் கடம் மட்டுமல்லாது கொன்னக்கோலையும் இசைக்கிறார். இவரது குழுவிலுள்ள யோகவந்தனா வீணையையும், சவுமியா ராமச்சந்திரன் வயலினும், ரஞ்சனி வெங்கடேஷ் மிருதங்கத்தையும், பாக்யலட்சுமி கிருஷ்ணா மோர்சிங்கும் இசைக்கின்றனர்.
தங்களது கடதரங்கம் நிகழ்ச்சியை உலகம் முழுதும் நடத்த வேண்டுமென்பதே தங்களது லட்சியமென இக்குழுவினர் ஒட்டுமொத்த குரலில் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சுகன்யா ராம்கோபால் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ விருதுகள் ஏதும் தராவிட்டாலும் கூட, நாட்டிலேயே கடம் வாசிக்கும் ஒரே பெண்மணி என்ற புகழுடன் தனது இசைக்கொடியை நாடு முழுதும் பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.