

மகாத்மா காந்தியைப் பற்றியும் அவரது கொள்கை, கடமைகளைப் பற்றியும் இப்போது அதிகமாக நினைப்போருமில்லை. அதற்குச் செயல் வடிவம் கொடுப்போரும் இல்லை.
முடிந்தவரை நூல் நூற்று ஒவ்வொரு காந்தி ஜெயந்தியின் போதும் காதி வஸ்திராலயங்களுக்கு நூல் கொடுத்து வந்ததின் மூலம் காந்தியத்துடனான தங்களின் தொடர்பு இழையை துண்டிக்காமல் காப்பாற்றி வந்தனர் எல். அலமேலு அம்மாள், ஆர்.சீதாபதி ஆகியோர். "இன்னமும் மனம் நூல் நூற்கச் சொன்னாலும், உடல் ஒத்துழைக்கவில்லை' என்னும் இவர்கள் தற்போது, வாடகை குறைவாக இருக்கிறது என்ற காரணத்துக்காக சென்னையிலிருந்து புதுச்சேரி, அவ்வை நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் எங்குச் சென்றாலும் காந்தி கால ராட்டினத்தை கூடவே எடுத்துச் செல்கின்றனர். வாரிசு இல்லாத அந்தத் தம்பதியினர் தாங்கள் தேசிய சொத்தாக மதிக்கும் அந்த ராட்டினத்தை என்ன செய்வது? என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களைச் சந்தித்தபோது...
""அந்தக் காலத்தில் மகாத்மா காந்தி என்றால் மக்களுக்கு நினைவுக்கு வருவது ராட்டினம்தான். காந்தியின் கொள்கையைக் கடைப்பிடித்த எங்கள் குடும்பத்தினர் ராட்டினம் சுற்றி நூல் நூற்று வந்தனர். அதனை நாங்களும் தொடர்ந்தோம்.
ராட்டினத்தை நான் வாங்கவில்லை. என்னுடைய பெரியப்பா எனக்குக் கொடுத்தார். இது பாரம்பரியம் மிக்க ராட்டினம். இதுபோன்ற ராட்டினத்தை இப்போது பார்க்க முடியாது. காந்தி கால ராட்டினம். பல பேருக்கு இதை இப்போது சுற்றக் கூட தெரியாது. இதை எளிதாக எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லமுடியும். அதற்காக பெட்டி வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வைத்திருக்கும் ராட்டினம் இதுவரை பழுதாகவில்லை. இப்போதும் இதைச் சுற்றி நூல் நூற்க முடியும். உடல்தான் எங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.
தினந்தோறும் ஓய்வு நேரங்களில் நூல் நூற்பது வழக்கம். அதைச் சேகரித்து வைத்திருப்போம். காந்தி ஜெயந்தியன்று காந்தி நினைவாக எதாவது காதி வஸ்திராலயங்களுக்குச் சென்று இதை ஒப்படைத்துவிட்டு வருவோம். அதில் எங்களுக்கு மனநிறைவு கிடைத்து வந்தது. காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் நாங்கள் நூற்ற நூலைக் கொடுத்து ஆசிர்வாதம்
பெற்றுள்ளோம். எங்கள் வீட்டில் முன்னோருக்குத் திதி கொடுக்க வரும் சாஸ்திரிக்கு நூல் கொடுத்து வந்தோம். அதை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார். பூணூலுக்காக இதை அவர் பயன்படுத்திக் கொள்வார்.
இந்த ராட்டினம் எப்படியாவது சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. இந்த ராட்டினத்தின் பெருமையை உணர்ந்தவர்கள், இந்த ராட்டினம் தேவைப்படுவோர் எங்களை அணுகினால் அதைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்'' என்கிறார் ஆர்.சீதாபதி.
""ஓய்வு நேரத்தில் இதைச் செய்து வந்தோம். நான் எல்ஐசி ஏஜெண்டாகப் பணியாற்றினேன். என் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அப்போதெல்லாம் எல்ஐசி பாலிசி எடுக்க ஆட்களைப் பிடிப்பது கஷ்டம். அந்தக் காலத்தில் சிரமப்பட்டு அந்தப் பணியைச் செய்து வந்தேன். ஓய்வு நேரத்தில் இரண்டு பேரும் நூல் நூற்போம்.
மகாகவி பாரதியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் லெட்சுமண அய்யர். தியாகி. அவர் என்னுடைய தந்தையார். படகோட்டிகள் சங்கம், விறகு வியாபாரிகள் சங்கம் போன்ற சங்கங்களுக்கு நிறுவனத் தலைவராக இருந்துள்ளார். பாரதியைப் போலவே சொத்துச் சேர்க்காதவர். தேச பக்தி, ஏழைகளுக்குச் சேவை என்று வாழ்ந்து தன்னுடைய ஆயுளைக் கழித்தவர். அவருக்கு நான் உள்பட இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். என்னுடைய தாயார் கமலம்மாள் (95) இன்றைக்கும் சென்னையில் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறார்'' என்றார் அலமேலு அம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.