

தனுஷனோட சந்தோஷம், துயரம் இரண்டுமே உறவுகள்தான். அந்த உறவுகளின் பின்னணியில் ஒரு ஜீவனுள்ள காதலை சொல்லப் போறேன். தெலுங்கில் ஹிட்டடித்த "ரெடி' படத்தின் ரீமேக்தான். தமிழ் சினிமாவுக்காக சில மாற்றம் செய்திருக்கேன். உறவுகளை உணர்வோம். அது எப்படின்னு சொல்ற படம்தான் "உத்தமபுத்திரன்' ''. என்கிறார் அப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
கிட்டத்தட்ட 3-வது படத்தையும் ரீமேக் படமாக முடிச்சிட்டீங்க. எப்படியிருக்கு இந்த ரீமேக் அனுபவம்?
ஒரு படத்தை ரீமேக் பண்றது கொலைக் குற்றமா என்ன? பிற மொழிகளில் ஓடிய படங்களை நல்ல காசுக்கு வாங்கி இங்கு படமாக்குறேன் அவ்வளவுதான். ஆனால் இங்கு கதையைச் சுட்டு, காட்சிகளைச் சுட்டு எடுக்குற படங்களைப் போல் என் படங்கள் இல்லையே. ரீமேக் படத்தைப் பண்ணுவது ஒண்ணும் சுலபம் இல்லை, என்பதை எல்லோரும் புரிஞ்சுக்கணும். வேறு ஒரு கலாசாரத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு கதையை மாற்றுவதில் நிறைய வேலை இருக்கத்தான் செய்கிறது. வருஷத்துக்கு 5 சதவீத படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. அந்தப் படங்களில் ரீமேக் படங்கள்தான் முக்கிய இடங்களைப் பிடிக்குதுன்னு ஒரு கணக்கு சொல்லுது.
ரீமேக் என்றாலும் காதல்தான் உங்களுக்கு நம்பத் தகுந்ததா?
இப்போ தமிழ் சினிமாவே காதல், ஆக்ஷன்னு பரபரத்துக் கிடக்குது. இந்த நிலையில் நான் எதையும் புதுசாக எடுத்து வந்து தர முடியாது. இதில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே இல்லை. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மான்னு ஒரு உறவு பின்னலும் இருக்கு. மற்ற படங்களைவிட இது வேறு ஓர் இடத்துக்கு வரும். உறவுகள்தான் மனிதனின் அடித்தளம் என சொல்லிருக்கேன்.
தனுஷ் எப்படி?
முதலில் ஒரு டைரக்டர் தான் எடுக்க நினைக்கிற கதையைப் புரிய வைக்கணும். அதற்கு அந்த நடிகர் ஒத்துழைப்பு தரணும். அதற்கு முன் வந்தார் தனுஷ். கதையைச் சொன்னதும் செய்வோம்ன்னு நம்பிக்கை தந்தார். எமோஷன், ஆக்ஷன் ரெண்டுமே தனுஷுக்கு பிரமாதமாக வருது. எப்போதும் தனுஷை எல்லோருக்கும் பிடிக்கும். இந்தப் படம் வந்தால் இன்னும் கூடுதலாகப் பிடிக்கும். இப்ப இருக்கிற பக்குவத்தை அவரே ரசிப்பார் என நினைக்கிறேன். முன்பைவிட பொறுமை அவரிடம் நிறைய வந்திருக்கு. இது தனுஷுக்கு முக்கிய காலகட்டம் என்பதையும் நான் கவனத்துல வைச்சிருக்கேன்.
நயன்தாரா, ஸ்ரேயா இப்போ ஜெனிலியான்னு ஹீரோயின் தேர்வு அசத்தலாக இருக்கே?
ஜெனிலியா முதலில் கொஞ்சம் தமிழ் பக்கம் வந்துட்டுப் போனாங்க. ஏனோ அவங்களுக்குப் பெரிய இடம் கிடைக்கல. தெலுங்கு, ஹிந்தின்னு பிஸியாக இருக்காங்க. ஹிந்தியில் சில படங்கள் பார்த்தேன். இதுதான் அவங்க தமிழ் சினிமாவுக்கு வர வேண்டிய நேரம்னு தோணுச்சு. கதை சொன்னதும் ஷூட்டிங் என்னைக்குன்னு கேட்டு வந்து இறங்கிட்டாங்க. வந்தவர் இனி மும்பை பக்கம் போக மாட்டார் என நினைக்கிறேன். கனவு கன்னி ரேஸில் அவங்களும் ஓட ஆரம்பிச்சுருவாங்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.