வயலினுக்கும் வாய்ப்பாட்டுக்கும்

கல்கியின் 111-வது பிறந்த நாள் விழாவில் அவரது நினைவு விருது வயலின் கலைஞர் சாருலதா ராமானுஜத்துக்கும், வாய்ப்பாட்டுக் கலைஞர் அம்ருதா முரளிக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களிடம் பேசினோம். அவற்றிலிருந
வயலினுக்கும் வாய்ப்பாட்டுக்கும்
Published on
Updated on
2 min read

கல்கியின் 111-வது பிறந்த நாள் விழாவில் அவரது நினைவு விருது வயலின் கலைஞர் சாருலதா ராமானுஜத்துக்கும், வாய்ப்பாட்டுக் கலைஞர் அம்ருதா முரளிக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களிடம் பேசினோம். அவற்றிலிருந்து:

சாருலதா ராமானுஜம்: ""நான் எனது ஒன்பதாவது வயது முதல் புதுக்கோட்டை ராமநாதனிடம் வயலின் கற்றுக் கொண்டேன். இவர் புகழ்பெற்ற ராஜமாணிக்கம் பிள்ளையின் சீடர். ராமநாதன் என் மேல் மிகுந்த அக்கறை கொண்டு, வீட்டிற்கே வந்து சொல்லிக் கொடுத்தார். அவர் திருப்பதியிலேயே குடியேறி, அங்குள்ள இசைக் கல்லூரியில் பணிபுரிந்து, அன்னமாச்சாரிய ப்ராஜெக்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். நானும் வளர்ந்தது, கற்றது எல்லாம் திருப்பதியில் தான். பின்பு குரு அனூர் ராமகிருஷ்ணாவிடம் மூன்று வருடங்கள் பயிற்சி. என் கணவருக்கு ஏற்பட்ட வேலை மாற்றத்தால் ஹூப்ளி செல்ல நேர்ந்தது. அங்குள்ள கானசுதா என்ற சபா என்னை வெகுவாக ஊக்குவித்தது. அங்குதான் ஓ.எஸ். தியாகராஜன், மணி கிருஷ்ணஸ்வாமி போன்ற பெரிய வித்வான்களுக்கு வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு முறை டி.ஆர். சுப்ரமணியத்திற்குப் பக்கவாத்தியம் வாசித்தவுடன் அவர் என்னைக் கவனத்தில் வைத்து டெல்லிக்கு அழைத்து, எனக்கு ஹைதராபாத் சகோதரிகள், டி.எம்.கிருஷ்ணா, ஓமனக்குட்டி போன்றோருடன் வாசிக்க வழிவகுத்தார். இது போலவே நெய்வேலி சந்தானகோபாலனும் இசைத் துறையில் எல்லாவிதத்திலும் என்னை வளர்த்தது குறிப்பிடத்தக்கது. எனக்குத் தெலுங்கு மொழியும் தெரியும் என்பதாலும், தமிழ் பாடல்கள் கற்றபொழுது தமிழையும் கற்றதாலும், பாட்டின் ஸôஹித்யத்தை நன்கு அனுபவிக்கும் தன்மை எனக்குண்டு. முக்கியமாகப் பாட்டில் நிரவல்  என்னை ஆட்கொண்டுவிடும். இதில் இன்னும் நான் சிறந்த முறையில் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. நமது பாரம்பரிய சங்கீதத்தின் ஸôஹித்ய பாவத்தை நன்கு அறிய வேண்டும் என்றெண்ணி ஆர். கே. ஸ்ரீகண்டனிடம் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொள்கிறேன்.  ஏழெட்டு வருடங்களாக பெங்களூரில் இருப்பதால் இது சாத்தியமாயிற்று. வேதவல்லி, சுகுணா, விஜய்சிவா ஆகியோர்களுக்கு வாசித்ததை அரிய பாக்கியமாகவே கருதுகிறேன். இந்த விருது என்னை உற்சாகப்படுத்துகிறது, நெகிழ்வுறச் செய்கிறது.என்னை மேலும் வலுப்படுத்துகிறது.''

அம்ருதா முரளி: "வீட்டில் எனது பாட்டி இசையை ஆரம்பித்து வைத்தார். ஆனால் நான் முறையாகக் கற்றது கேதாரநாதன், மற்றும் மீரா கேதாரநாதனிடமே. பிறகு ரமா ரவியிடமும், தற்பொழுது பி.எஸ்.என்.னிடமும் கற்று வருகிறேன். வயலினைப் பொறுத்த மட்டில் முதல் பாடங்கள் விட்டல் ராமமூர்த்தியிடம். பின்பு இன்றுவரை டி. ருக்மணி. வாய்ப்பாட்டையும் வயலினையும் நான் எடுத்துக் கொண்டிருப்பதால் இருக்கும் நேரத்தை இரண்டிற்கும் பாகுபாடு செய்வது கடினமாகத்தான் இருக்கிறது.  இதுவரை இறைவனின் அருளால் இரண்டிலுமே ஓர் அளவிற்கேனும் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒரு நேரத்தில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே முழுமையாக முனைய வேண்டிய கட்டாயம் உண்டாகலாம். வாய்ப்பாட்டு என்பது ஒரு தனி சுகத்தைக் கொடுக்கிறது. செம்மங்குடியிடம் தன்யாசியில் "ஞானமே' என்ற தியாகராஜ க்ருதியைப் பாடிப் பாராட்டு பெற்றேன். நான் அப்பொழுது ஒரு சிறுமிதான். இருந்தும், இந்த இராகத்தில் கற்பனை ஸ்வரம் அமைக்கச் சொல்லி, தானும் எந்த பேதமும் இல்லாமல் என்னுடன் அவர் வீட்டில் பாடியதை என்னால் மறக்க முடியாது.

இது போலவே எம்.எஸ். அம்மாவிடமும், டி.கே. பட்டம்மாளிடமும், தனியாகவும் இன்னும் பல இளைய வித்வான்களுடன் சேர்ந்திசையாகவும் பாடியுள்ளேன். எனது பாடும் திறனைக் கண்டு 1997ல் எனக்கு முதல் முதலில் ராகசுதா அரங்கில் வாய்ப்பளித்தார் எஸ்.வி.கே.. வயலினிலும் நான் முதல் கச்சேரி செய்தது குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவுக்குப் பக்க வாத்தியமாக மேடையில் அமர்ந்து தான். கல்கி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜேந்திரனும்  விஜயா அவர்களும் என்னைச் சிறு வயது முதலே பார்த்து வருபவர்கள். அவர்கள் என்னை இந்த விருது பெறத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது எனக்கும் மிகுந்த பெருமையைக் கொடுக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com