எத்தனை எத்தனை ஓவியர்கள்!

தமிழ்நாட்டில் நவீன ஓவியக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் தாக்கமும் குறித்த வரலாறு இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற குறையை இனி யாரும் கூறமுடியாது. மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் அமைப்பு,
எத்தனை எத்தனை ஓவியர்கள்!

தமிழ்நாட்டில் நவீன ஓவியக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் தாக்கமும் குறித்த வரலாறு இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற குறையை இனி யாரும் கூறமுடியாது.

மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் அமைப்பு, அந்தப் பொறுப்பை இயக்குனர் அம்ஷன்குமாரிடம் மிகச் சரியாக ஒப்படைத்திருக்கிறது என்பதை இரண்டு பாகங்களாக சுமார் ஒரு மணிநேரக் குறும்படமாக அவர் தயாரித்துக் கொடுத்திருக்கும் ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் தோன்றிற்று.

அம்ஷன் குமார் ஏற்கனவே சுமார் 20 டாக்குமென்டரிகள் தயாரித்தவர். பாரதியார், உ.வே.சாமிநாதய்யர், சி.வி.ராமன், அசோகமித்திரன், தமிழ் நாடகம் என்று ஒவ்வொரு படைப்பும் அவருடைய தெளிவான பார்வையை எடுத்துக்காட்டின.

சென்னை எழும்பூர் கவின் கலைக் கல்லூரியில், சென்ற வாரம் இந்த டாக்குமென்டரியை, கல்லூரியைச் சேர்ந்த மாணவர், மாணவியருடன் பார்க்க நேர்ந்தது.

முதலில் ஏன் இந்த டாக்குமென்டரி, அம்ஷன்குமார்?

""நவீன ஓவியம் என்றால் புரியாது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை நீக்கவும், நவீன ஓவியத் துறையில் தமிழ்நாட்டில் எத்தனை ஓவியர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கவும் தான் இந்த முதல் முயற்சி. இதில் ஓவியர்களே தங்கள் ஓவியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். பார்வையாளனுக்கும் படைப்பாளிக்கும் இடையே பாலமாக இருக்கவே இதைத் தயாரித்தேன்!'' என்கிறார் அம்ஷன்குமார்.

டாக்குமென்டரியின் முதல் பகுதி, நவீன ஓவியக் கலை தமிழ்நாட்டில் தொடங்கிய காலத்திலிருந்து அறுபதுகள் வரையிலான காலத்தை விவரிக்கிறது. 1850-ல் விக்டோரியா கலைச் சுவையை இந்தப் பகுதி மாணவரிடையே உண்டாக்கத் தோற்றுவிக்கப்பட்டதுதான் எழும்பூர் கவின் கலைக் கல்லூரி. ஆனால் நவீன ஓவியக் கலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்பட்ட 1929-ல் டி.பி.ராய் செüத்ரி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதுதான். ஏராளமான மாணவர்களை இந்த நவீன ஓவியத் துறையில் தூண்டிவிட்டு வளரச் செய்தவர் தேவி பிரசாத் ராய் செüத்ரி. (மெரினா கடற்கரையிலுள்ள மகாத்மா காந்தி சிலையையும், உழைப்பாளர் சிலையையும் உருவாக்கியவர் ராய் செüத்ரி) இவருக்குப் பின் வந்த கே.சி.எல். பணிக்கர், நவீன ஓவியக் கலையை ஓர் இயக்கமாகவே தமிழ்நாட்டில் ஈஞ்சம்பாக்கத்தில் உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

கும்பகோணத்தில் இருந்த அரசு கவின் கலைக் கல்லூரி, ஆலயங்களின் சூழலில், இயற்கையாகவே பாரம்பரிய வழியில் படைப்புகள் உருவாக்க, அந்தப் பகுதி மாணவருக்கு வசதியாக அமைந்தது. பிரபல ஓவியர்கள் எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ், ஆர்.கிருஷ்ணா ராவ், ஆர்.பி.பாஸ்கரன், வித்யா சங்கர் ஸ்தபதி, அல்ஃபோன்úஸô, அருள்தாஸ் ஆகியோர் சென்னையிலும் கும்பகோணத்திலும் பணியாற்றியுள்ளனர்.

சி.ஜே.அந்தோணிதாஸ், எல்.முனுசாமி, கிருஷ்ணராவ், பி.வி.ஜானகிராமன், ராமானுஜன் மற்றும் சிலரின் பாணிகள் அவர்களுடைய பின்னணியுடன் பேசப்படுகின்றன.. இந்த முதல் பகுதியில்.

இரண்டாம் பகுதியில், 70-களில் தொடங்கி இன்றுவரையிலான இயக்கத்தை நிறையத் தகவல்களோடு சொல்கிறார் அம்ஷன்குமார்.

ஆர்.பி.பாஸ்கரன், அல்ஃபோன்úஸô, அருள்தாஸ், அச்சுதன் கூடலூர், கே.முரளிதரன் மற்றும் வித்யா சங்கர் ஸ்தபதி ஆகியோரின் பேட்டிகள் இதில் தரப்படுகின்றன. வகுப்பில் திடீரென்று நுழைந்த ஒரு பூனையை வைத்துக் கொண்டு, பூனைகளாகவே வரைந்து தள்ளினார் ஆர்.பி.பாஸ்கரன்!

கறுப்பு வெள்ளைக் கோட்டோவியத்தில் மகாத்மா காந்தியை வரைந்த ஆதிமூலம் பின்னர் தைல ஓவியங்களுக்கு மாறியது சுவையான திருப்பம். உருவங்களை மாற்றம் செய்து வரைவது, ஓவியரும் இயக்குனருமான பி.கிருஷ்ணமூர்த்தியின் பாணி. இது மேற்கத்திய நாடுகளில் பல சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தது என்றார்.

அபராஜிதன், ஷைலேஷ், சீனிவாசன் போன்றோரின் சில ஓவியங்களும் இடம்பெற்றன. ஓவியத்துக்கும், ஓவிய மாணவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையான செய்தியை ஆர்.பி.பாஸ்கரன் தெரிவிக்கும் முத்தாய்ப்போடு குறும்படம் முடிகிறது.

சில ஓவியர்களை விட்டுவிட்டீர்களே?

""நான் வேண்டுமென்றே விடவில்லை. கால அவகாசம் குறைவு என்பதால் இந்தப் பதிவில் சிலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். உதாரணங்களை மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. இதுவே முழுமையானது என நான் கூறவில்லை. பட்டியல் போல ஓவியர்களின் பெயரைச் சொல்லுவதை விட, இதுபோல மேலும் பல குறும்படங்கள், ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் பணி பேசப்படவேண்டும் என்பதே என் விருப்பம். இதில் இடம்பெற்ற ஓவியர்கள் முக்கியமானவர்கள். ஆனால் விடுபட்டவர்கள் அவர்களை விடக் குறைந்தவர்கள் அல்லர்.''

டி.பி.ராய் செüத்ரி பற்றி அம்ஷன் குமார் கூறிய ஓர் உண்மைச் சம்பவம்:

ஒருமுறை ஓர் ஓவியம் தீட்டிக் கொண்டே இடது கையால் காபி கோப்பையைப் பிடித்துக் கொண்டு பருகிக் கொண்டிருந்தாராம் ராய் செüத்ரி. காபி ஓவியத்தில் சிந்திவிட்டது. அவர் அதைத் தூர எறிந்துவிடுவார் என மாணவர்கள் நினைத்தனர். ஆனால் ராய் செüத்ரியோ இன்னும் சில கோப்பை காபியை வரவழைத்து ஓவியத்தின் மீது ஊற்றி, ஒரே மாதிரி சமமான வண்ணம் அதில் தோன்றும்படி செய்தாராம்!

அம்ஷன்குமார், கி.ராஜநாராயணனின் "கிடை' என்ற கதையை ஆதாரமாகக் கொண்டு "ஒருத்தி' என்ற திரைப்படமும் தயாரித்திருக்கிறார். இந்தியன் பனோரமாவில் இதற்குப் பரிசும் கிடைத்திருக்கிறது. திரைப்படங்கள் குறித்து அம்ஷன்குமார் எழுதிய "சினிமா ரசனை' நூல் வித்தியாசமான படைப்பு. இப்போது புதிய திரைப்படம் ஒன்று தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார் அம்ஷன்குமார்.

சென்ற வாரம் ஒரு காலை நேரச் சொற்பொழிவில் கிடைத்த சில சுவாரசியமான தகவல்கள்:

ய்தேவர் ஆட்டம் என்பது தமிழ்நாட்டில் கம்பள நாயக்கர் இனத்தவரின் சமூக சடங்குகளில் ஒன்று. இதை ஏப்ரல்-மே மாதங்களிலும், திருமணங்கள், விழாக்களிலும் வழங்குகிறார்கள். உடை என்னவோ வெறும் வேட்டியும், வண்ணமயமான தலைப்பாகையும்தான். ஆனால் அடிப்படையாக 18 அடவுகள் (அல்லது அடிகள்) வைத்துக் கொண்டு, 72 அடவுகளை அனாயாசமாகச் செய்கிறார்கள். எளிமையாக, இயல்பாக, வேகமாக, தாளத்துக்கு ஏற்ப உடலசைவு அமைந்திருக்கிறது.

ய்பரதநாட்டியம் போலவே தெருக்கூத்தும் நம் தமிழ்நாட்டின் பாரம்பரியச் சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டும் என்று வாதாடியவர், மியூசிக் அகடமி நிறுவனர்களில் ஒருவரான ஈ.கிருஷ்ணய்யர்.

ய்மாரியம்மன், ஸ்ரீ ரங்கநாதர் எனப்படும் விஷ்ணுவின் சகோதரி- மகாமாயா. தமிழ் மாத வைகாசி முதல் நாளன்று சமயபுரம் மாரியம்மனை, ஸ்ரீ ரங்கம் வைணவ பிராமணர்கள் (ஐயங்கார்) வழிபடுவர்.

ய்சொற்பொழிவின் முடிவில், தெருக்கூத்துக்கும் பரதநாட்டியத்துக்கும் உள்ள தொடர்பை விளக்க புரிசை சம்பந்தன் ராவணனாகவும், பரதநாட்டியக் கலைஞர் சங்கீதா ஈசுவரன் அனுமனாகவும் தோன்றி ஒரே ஒரு காட்சியை வழங்கினர். தெருக்கூத்து வசனத்தில் இருந்த இயல்பான நகைச்சுவையில் கிராமிய ஞானம் வெளிப்பட்டது. சங்கீதாவின் பரதநாட்டிய அம்சம் குறைவாகவும்,தெருக்கூத்து அம்சம் தூக்கலாகவும் இருந்தது!

- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com