கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்...

கொண்டலாத்தி................................................ முழுக்க முழுக்க பறவைக் கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தச் சின்ன புத்தகத்தின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் கவ
கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்...
Published on
Updated on
2 min read

கொண்டலாத்தி................................................

முழுக்க முழுக்க பறவைக் கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தச் சின்ன புத்தகத்தின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் ஆசை. கவிதை உலகை ஆசையின் கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் தேன்சிட்டுகளும் தவிட்டுக்குருவிகளும் அலங்கரிக்கின்றன. தமிழ்க் கவிதையுலகில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது. பார்த்தவுடனேயே பரவசப்படுத்துகிறது. பறவைகளின்றி இந்த உலகமே  இல்லை என்கிறார் ஆசை. பறவைகள் குறித்த இவருடைய பரவலான ஆர்வம் பற்றி தொடர்கிறார்:

"இயற்கையைப் பொறுத்தவரை அதை நாம் எந்தப் புள்ளியிலிருந்தும் ஆரம்பிக்கலாம். நான் பறவைகள் என்ற புள்ளியில் ஆரம்பித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பறவையும் ஓர் அற்புதம். இந்தியப் பறவையியலின் தந்தையான, காலம்சென்ற சலீம் அலி ஒருமுறை சொன்னார்: மனித இனம் அழிந்துவிட்டால் அதனால் உலகத்துக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாது  ஆனால் பறவைகள் அழிந்துவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்று.

ஓர் இடத்தில் பறவைகள் அதிகமாக இருந்தால் அங்கே சுற்றுச்சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். மனிதர்கள் அதிகமாக இருந்தால் சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.

இயற்கை தன்னுடைய சமநிலையைப் பராமரிப்பதற்கு முக்கியமான காரணிகளாக இருக்கின்றன பறவைகள். பறவைகள் மட்டும் இல்லை என்றால் இந்த உலகத்தைப் பூச்சிகள் முற்றிலும் அழித்துவிடும் என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு இன்றியமையாதவை பறவைகள்.

நம் முன்னோர்கள் பறவைகளின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், எல்லாப் புராணங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகளிலும் பறவைகள் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால், நவீன வாழ்க்கை மனிதனிடத்திலிருந்து பறவைகளை வெகு தொலைவுக்கு விரட்டிக்கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் சென்னையில் இருந்தேன். ஒருகட்டத்தில் இனியும் இங்கிருந்தால்  எனது நுண்ணுணர்வையும் மனிதத் தன்மையையும் கவிதைத் திறனையும் இழந்துவிடுவேனோ என்று அஞ்சும் அளவுக்கு சென்னை வாழ்க்கை என்னை மிரட்டியது. சொந்த ஊரான மன்னார்குடிக்கே திரும்பினேன்.

ஆனால், ஊரில் பழைய நண்பர்கள் இல்லை. பழைய சூழல் இல்லை. அந்த இழப்பை பறவைகள்தான் சரிகட்டின. பறவைகள் என்னைப் பற்றிக்கொண்டன. சுற்றியுள்ள குழந்தைகள் என்னுடன் சேர்ந்துகொண்டனர். வயல்வெளிகளை நோக்கிச் செல்வோம். புதுப்புது பறவைகளை யார் முதலில் காட்டுவது என்பது போட்டியாக மாறும். குழந்தைகள் வேகமாக பறவைகளைப் பார்த்துவிடுவார்கள். ஆனால், பெயர் சொல்லத் தெரியாதல்லவா? புதுப்புது பெயர்களாகக் கண்டுபிடிப்பார்கள்  காற்றுக்கொத்தி, மழைக்கொத்தி, மழைப்பாடி என்றெல்லாம். இந்த அனுபவங்கள் எல்லாம்தான் கவிதைகளாகின.

பழந்தமிழ் இலக்கியத்துக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. குறுந்தொகைக்கு உ.வே.சா. எழுதிய முன்னுரையில் அவர் கொடுத்திருக்கும் ஐவகை நிலச் செய்திகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். மரங்கள், செடிகொடிகள், பறவைகள், பூச்சிகள், நிலப் பரப்புகள் என்று ஒவ்வொன்றையும் பற்றி எவ்வளவு செய்திகள் அதுவும் முக்கியமாகப் பறவைகள்.  தமிழ்க் கவிதையில் பாரதி காலம் வரை பறவைகளுக்குப் பஞ்சம் இல்லை.

ஆனால், பாரதிக்குப் பிறகு இயற்கைக்கும் தமிழ்க் கவிதைக்குமான உறவில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சியே கொண்டலாத்தி. தமிழில் இப்படியோர் உயர்ந்த தரத்தில் புத்தகம் வெளிவருவது இதுவே முதல் முறை. இதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அந்த வகையில் என்னுடைய பதிப்பாளர் க்ரியா எஸ். ராமகிருஷ்ணனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தத் தருணத்தில் எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். குழந்தைகளை தயவுசெய்து வாரத்தில் ஒரு நாளேனும் வெளியே அழைத்துச் செல்லுங்கள். மரங்களை நோக்கி  அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்த  ஓரிரு பறவைகளையேனும்  அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். பறவைகளை அவர்கள் தொடர்ந்து பார்க்கும்போது அவற்றுடன் உறவாடக் கற்றுக்கொள்வார்கள். இயற்கையோடு உறவாடக் கற்றுக்கொள்வார்கள். இந்தப் பூமி மனிதர்களுடையது மட்டும் அல்ல என்ற பேருண்மையை உங்களுக்கு உணர்த்துவார்கள்'' என்றார்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com