

கடலில் வேகமாக நீந்தும் மீன்கள் பல இருந்தாலும் மின்னல் வேகத்தில் நீந்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுவிடும் மீனே மின்னல் வேக மீன் எனப்படுகிறது. இம்மீன்களின் நீந்தும் வேகம், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில் குமார் கூறியதாவது.
""சைபியஸ் கிளாடிஸ் என்ற விலங்கியல் பெயரும், கத்தி மீன், வாள் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது மின்னல் வேக மீன். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்று பொருளாகும். இம்மீனின் தாடை நீண்டு வாள் போலவே இருப்பதால் இதற்கு வாள் மீன் என்றும் கத்தி போன்று இருப்பதால் சிலர் கத்தி மீன் என்றும் சொல்வதுண்டு. பிற மீன்களைத் தனது வாள் போன்று இருக்கும் தாடையால் காயமடையச் செய்து தின்று விடும் குணம் உடையது.
இதன் அதிகபட்ச நீளம் 14 அடியாகும். கடல் நீரைக் கிழித்துக் கொண்டு மிக வேகமாக நீந்தும் உடலமைப்பைக் கொண்ட இந்த மீன் ஒரு மணிநேரத்தில் 80 கி.மீ.தூரம் வரை நீந்தும். கடலில் சில சமயங்களில் ஆக்ரோஷமாக தாவிக் குதித்து செல்லும்போது அவ்வழியாக செல்லும் படகோட்டிகள் மேலே விழுந்து அதனால் குத்துப்பட்டு உயிரிழந்த மீனவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இம்மீன் வேண்டுமென்றே மனிதர்களைத் தாக்குவது இல்லை.
மின்னல் வேகத்தில் கடலில் நீந்திச் செல்வதால் அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கடற்படைப் போர்க் கப்பல்களுக்கு ஸ்வோர்டு ஃபிஷ் என்ற இதன் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.
சிறுமீன்கள், பறவை மீன்கள், கணவாய் போன்ற மீன்வகைகளை உண்டு வாழும் இம்மீன்களில் பெண் இனத்தை விட ஆண் இனம் பெரியதாக இருக்கும். பெண் இனம் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆண் இனம் 4 வருடங்களுக்கு பிறகும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன. கடலில் 75 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் இவ்வினங்கள் அட்லாண்டிக் பெருங் கடலில்தான் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
இனப்பெருக்க காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே திரிந்து ஒரே சமயத்தில் ஒரு மில்லியன் முதல் 29 மில்லியன் முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் 4. மி.மீ முதல் 12 மி.மீ நீளத்துக்கு வளர்ச்சியடையும்போது மின்னல் வேக மீனின் உருவத்தையடைகின்றது. அதன் பிறகுதான் தாடைகள் இரண்டும் முழு வளர்ச்சியடையத் துவங்குகின்றன.
இம்மீன்களின் கண்களுக்கு அருகேயுள்ள ஒரு சிறப்பு உறுப்பு மூலமாக அதன் கண்களும், மூளையும் சூடாகிக் கொண்டே இருப்பதால் இதன் சுற்றுப்புற வெப்பநிலை சுமார் 15 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வகையில் வெப்பத்தை உண்டாக்கி வைத்துக் கொள்கின்றன. இம்மீன் இனங்கள் கடலில் கூட்டமாக வாழாமல் தனிக்காட்டு ராஜாவாகவே சுற்றித் திரிகின்றன. ஒரு மீன் இருக்கும் இடத்திலிருந்து மற்றொரு மீன் 10மீட்டர் தூரத்திற்குள் ஆங்காங்கே தனித்தனியாக நீந்திக் கொண்டேயிருக்கும்.
இத்தாலி நாட்டின் கடற்கரையில் மத்திய தரைக் கடல் பகுதியில் மட்டும் இம்மீன்களின் கூட்டத்தைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டுக்கு அதிகம் செல்கிறார்கள்''
என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.