வண்டுள்ள மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்!

மிகவும் கடுமையாக உழைத்து, சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமித்து வைக்க நினைப்பவர்கள் அதிகம். அதற்காக இரவும் பகலும் உழைப்பார்கள். சத்துள்ள உணவுவகைகளை நேரத்துக்குச் சாப்பிட மாட்ட
வண்டுள்ள மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்!
Updated on
2 min read

மிகவும் கடுமையாக உழைத்து, சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமித்து வைக்க நினைப்பவர்கள் அதிகம். அதற்காக இரவும் பகலும் உழைப்பார்கள். சத்துள்ள உணவுவகைகளை நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள். உழைத்துக் களைத்து நடுத்தர வயதைத் தாண்டும்போது அவர்களை நோய்கள் தாக்கினால் மருத்துவமனைகளில் போய் படுத்துவிடுவார்கள். சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது இவர்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்தில் பாதியை எழுதி வாங்கியிருப்பார்கள். அந்த அளவுக்கு மருத்துவச் செலவுகள் இப்போது அதிகமாகிவிட்டன.

 நடுத்தர மக்கள், ஏழை மக்கள் கடுமையான நோய்களால் தாக்கப்பட்டால் என்ன செய்வார்கள்? பணம் இல்லாவிட்டால் மருத்துவம் பார்க்க முடியாமல் சாக வேண்டியதுதானா? போன்ற கேள்விகள் எழலாம்.

 இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு 90 சதவீதம் இலவசமாக மருத்துவம் செய்கிறார் ராமனாதன்.

 "வசந்தா நினைவு அறக்கட்டளை' என்ற அமைப்பை 1993-ஆம் ஆண்டு ஏற்படுத்தி இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 624 பேரைக் குணப்படுத்தியிருக்கிறார்.

 ""என்னுடைய அம்மா வசந்தா 1990 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது நான் எம்.டி., படித்துக் கொண்டிருந்தேன். எனவே 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா பெயரில் அறக்கட்டளையை ஆரம்பித்தேன்.

 அறக்கட்டளை சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் அசோக் நகரில் மருத்துவமனையை ஆரம்பித்தோம். திருச்சி, கோவை, மும்பை ஆகிய நகரங்களில் வசந்தா நினைவு அறக்கட்டளை ஆரம்பித்து, புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்து வருகிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று சொல்லித் தருகிறோம்.

 புற்றுநோயில் கோடிக்கணக்கான வகைகள் உள்ளன. நாங்கள் நோயாளிகளைச் சோதித்துப் பார்த்து அவர்களுக்கு வந்திருக்கிற புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? முடியாதா? என்பதைத் தெரிந்து கொள்கிறோம். குணப்படுத்த முடியும் என்கிற நோயாளிகளை மட்டும் எங்களுடைய மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டு சிகிச்சை அளிக்கிறோம்.

 அதிலும் ஏழைகளுக்கு (அவர்கள் உண்மையிலேயே ஏழையா? என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு) மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது பெருமளவுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கிறோம்.

 அதுமட்டுமல்ல, புற்றுநோய் குணமானவுடன், அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் வாழ உதவியும் செய்கிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமானாலும் மனதளவில் மிகவும் பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். "ஏன் பிழைத்து வந்தோம்? செத்துப் போயிருக்கலாமே?' என்று கூட நினைப்பார்கள்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த இளம் வயதினருக்குப் படிக்க உதவுகிறோம். இளம் பெண்களின் திருமணத்துக்கு உதவுகிறோம். வயதானவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்குகிறோம்.

 இவ்வளவையும் மக்கள் தரும் நன்கொடைகளை வைத்தே செய்கிறோம். நன்கொடை திரட்ட கலைநிகழ்ச்சிகள், இசைச் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். எங்களுடைய உண்மையான சேவையைப் பற்றித் தெரிந்து கொண்ட பலர் நிறைய உதவுகிறார்கள்'' என்கிறார் பெருமையுடன்.

 புற்றுநோய் வந்தவர்களுக்கு மருத்துவம் செய்கிறீர்கள். புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினோம்.

 ""புற்றுநோய் வருவதற்கு நமது வாழ்க்கைமுறையும், உணவுமுறையும்தான் காரணம். நாம் பசியில்லாமல் இருக்கும்போது சாப்பிடுகிறோம். பசிக்காமல் இருக்கும்போது இனிப்புகள், காரம் என உள்ளுக்குள் திணித்துக் கொண்டே இருக்கிறோம். அப்படிச் செய்வதால் செரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்ல, உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அதிக உடல் எடை புற்றுநோய்க்கு உடலின் வாசலைத் திறந்துவிடுகிறது.

 அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள், அசைவ உணவின் அளவுக்குக் காய்கறிகளையும் அதோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும். கேரட், பப்பாளி போன்றவை உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையவை. அவற்றையும், நார்ச்சத்து அதிகம் உள்ள பிற உணவுகளையும் நிறையச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது 3 கி.மீ. தூரம் தினம்தோறும் நடக்க வேண்டும். லிஃப்ட்களைத் தவிர்க்க வேண்டும். படிகளில் ஏறி மாடிக்குச் செல்ல வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. நம் அருகில் ஒருவர் புகை பிடித்தால் அவரைத் தள்ளிப் போகச் சொல்ல வேண்டும். புகைபிடிப்பவர் வெளியே விடும் புகையைச் சுவாசித்தாலும் புற்றுநோய் வரும். சிகரெட் புகையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் 43 வகை நச்சுப் பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மையுடையவை. நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, புகைபிடிப்பது.

 வாயில் புற்றுநோய் வருவதற்குக் காரணமாகப் பான்பராக், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்துவதைச் சொல்லலாம். இப்போது விற்கப்படும் அரிசி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் எல்லாவற்றிலும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வராது. ஆனால் அவற்றின் விலை அதிகம் என்பதால் ஏழை மக்கள் அவற்றைவாங்க முடியாது.

 வண்டுள்ள மாம்பழங்களைச் சாப்பிட்டால் தீமை இல்லை. ஏனென்றால் காய்கறிகள்,பழங்களில் பூச்சிகள், வண்டுகள் போன்றவை உயிர் வாழ முடியுமானால் அவை மனிதர்களுக்குத்

 தீங்கானவையாக இருக்க முடியாது.

 புற்றுநோய் வந்திருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள பல அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகினால் ஆரம்பநிலையில் புற்றுநோயை எளிதில் குணப்படுத்திவிடலாம். எனவே மார்பகப் புற்றுநோய், ரத்த புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கு என்னென்ன அறிகுறிகள் உள்ளன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விழிப்புணர்வு இயக்கங்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல முயற்சிகளைச் செய்கிறோம். ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான முகாம்களை நடத்துகிறோம்'' என்கிறார் ராமனாதன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com