சினி பிட்ஸ்...

சினி பிட்ஸ்... மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையைப் பற்றி படம் எடுக்கிறோம் என்று கூறி அவரை முடிந்தவரை இழிவாகக் காட்டி எடுக்கப்பட்ட "த டர்ட்டி பிக்சர்' படம் இந்தியா முழுவதும் வசூலை வாரிக் கு
சினி பிட்ஸ்...
Updated on
2 min read

சினி பிட்ஸ்...

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையைப் பற்றி படம் எடுக்கிறோம் என்று கூறி அவரை முடிந்தவரை இழிவாகக் காட்டி எடுக்கப்பட்ட "த டர்ட்டி பிக்சர்' படம் இந்தியா முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதையடுத்து சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலன் தன்னுடைய சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கு முன்பு ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார்.

எவ்வளவு பணம் தந்தாலும் இனி வில்லனாக நடிக்கவே மாட்டேன் என அறிவித்திருந்தார் சத்யராஜ். "சிவாஜி', "தசாவதாரம்', "மாற்றான்' உள்ளிட்ட முக்கியமான படங்களில் வில்லனாக நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார். ஆனால் இப்போது "எனக்கென தனியாக எந்த பாலிசியும் இல்லை; கதாநாயகன், குணசித்திர நடிகர், வில்லன் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் இனி நடிக்க முடிவெடுத்துள்ளேன்' என்கிறார்.

அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெறுவதற்காக தான் சந்திக்கும் சினிமாக்காரர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் வலிந்து வந்து தன்னுடைய செல்ஃபோன் எண்ணை கொடுத்து வந்தார் அமலாபால். ஓரளவுக்குப் பெயர் சொல்லும் நடிகையாக வளர்ந்தவுடன் பழைய பாதையை மறந்துவிட்டார். இப்போது மாதத்துக்கு ஒரு முறை செல்ஃபோன் எண்ணை மாற்றி வருகிறார்.

"கொலை வெறி...' பாடலுக்கு இசையமைத்த அனிருத் படத்தின் நாயகன் தனுஷ் மீதும் இயக்குநர் ஐஸ்வர்யா மீதும் அதிருப்தியில் இருக்கிறாராம். பாடலின் வெற்றிக்கு அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடுவதும் அதில் இசையமைப்பாளரின் பங்கு என எதுவுமே இல்லாதது போலும் அவர்கள் காட்டிக்கொள்வதுதானாம். அதற்கேற்றாற்போல இந்த நட்சத்திரத் தம்பதியும் இசையமைப்பாளரின் பங்கு குறித்து பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை.

தமிழில் வெற்றி பெற்ற "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை "ஏக் திவானா தா' என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குகிறார் கெüதம் மேனன். தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் "மதராஸ் பட்டணம்' படத்தில் நடித்த எமி ஜாக்சன் நடிக்கிறார். கதாபாத்திரத்தோடு ஒன்றவேண்டும் என்பதற்காக எமி ஜாக்சனுக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை 15 முறை ஹோம் தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார் கெüதம்.

ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் கணீர்க் குரலில் தரணியெங்கும் ஒலித்த "மன்மத லீலையை வென்றார் உண்டோ...' பாடலை தலைமுறை தாண்டியும் எவராலும் மறக்க முடியாது. "ஹரிதாஸ்' படத்தில் இடம்பெற்ற இந்த சாகா வரம் பெற்ற பாடலை எழுதியவர் மறைந்த கவிஞர் பாபநாசம் சிவன். அவருடைய பேரனும் கர்னாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருமான அசோக் ரமணி, பாடல்களைப் புனைவதிலும் அவற்றை தன்னுடைய தென்றலிசைக் குரலால் பாடுவதிலும் வல்லவர். உலகம் முழுவதும் பல நாடுகளில் கர்னாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவரை சும்மா விடுமா நமது சினிமாவுலகம்? தான் தயாரித்து இயக்கி வரும் "ஒரு சொல்' என்ற படத்துக்காக அசோக் ரமணியை வற்புறுத்தி பாட வைத்திருக்கிறார் வி.வெங்கட்ராமன். சினேகன் எழுத சாமுவேல் என்ற புதியவர் இசையில் "வெத்தலன்னா... வெத்தல, நான் கொழுந்து வெத்தல...' என்ற பாடலை அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார் அசோக் ரமணி. அடுத்த ஆண்டு ஒலிக்கப்போகும் சூப்பர் ஹிட் பாடல்களில் இந்தப் பாடலுக்குத்தான் முதல் இடம் என அடித்துச் சொல்லுகிறது "ஒரு சொல்' படக் குழு.

மாதவனுடன் "ஜோடி பிரேக்கர்ஸ்' ஹிந்திப் படத்தில் நடித்து வரும் பிபாஷா பாசு, எப்போது பார்த்தாலும் மாதவனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். பல நடிகர்களுடன் "காதல் கிசுகிசு'க்களில் சிக்கியபோதும் மாதவனைப் போலத்தான் எனக்குக் கணவர் அமைய வேண்டும் என்றும் கூறி வருகிறார். இன்னொரு விஷயம்... தீவிர அசைவப் பிரியையான பிபாஷா, மாதவனுடன் பழகியதற்குப் பிறகு சைவத்துக்கு மாறிவிட்டாராம்.

இன்றைய தேதியில் தமிழின் இளம் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சூர்யாதான். அவருடைய படங்களுக்குக் கிடைக்கும் ஓப்பனிங், கலெக்ஷன் ஆகியவற்றால் அஜித், விஜய் ஆகியோரை விட நான்கு கோடி அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராகியிருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமெüலி இயக்கத்தில் தெலுங்கு காமெடி நடிகர் சுனில் நடித்து பெரும் வெற்றி பெற்ற "மரியாதை ராமண்ணா' தெலுங்குப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் சார்பில் சந்தானத்தைச் சந்தித்து ஹீரோவாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். "என்னை காமெடியனா வச்சு மட்டும் படம் எடுங்க; ஹீரோவாக ஆக்குகிறோம் என்று என்னை வச்சு காமெடி பண்ணாதீங்க' எனக் கூறி மறுத்துவிட்டாராம்.

"ச்ச்சுட்டேபுடுவேன்' என்று பஞ்ச் டயலாக் பேசி குஸ்தி போட்ட நடிகரின் படம் வசூலில் கையைச் சுட்டுக்கொண்டது. இதனால் நடிகரின் அடுத்தடுத்த படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் நடிகரின் சம்பளத்தில் ஒரு பெரிய "சி'யைக் குறைத்துவிட்டனவாம். வேறு வழியில்லாமல் நடிகரும் சம்மதித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com