பொய்க்கால்குதிரை... பிறக்குமிடம் மதுரை!

மதுரையின் பாரம்பரியத்தை அடையாளம் காட்டுவதில் கரகம், மாடு, மயில், பொய்க்கால் குதிரை போன்ற ஆட்டக் கலைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. இவற்றுக்கான சிறப்பம்சமே அவற்றில் இடம்பெறும் மாதிரி உருவங்கள்தான். அந்தவக
பொய்க்கால்குதிரை... பிறக்குமிடம் மதுரை!
Updated on
2 min read

மதுரையின் பாரம்பரியத்தை அடையாளம் காட்டுவதில் கரகம், மாடு, மயில், பொய்க்கால் குதிரை போன்ற ஆட்டக் கலைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. இவற்றுக்கான சிறப்பம்சமே அவற்றில் இடம்பெறும் மாதிரி உருவங்கள்தான். அந்தவகையில் மாடு, மயில், குதிரை ஆகியவற்றின் மாதிரி உருவங்களை மக்கள் மனதில் பதியவைக்கும் வகையில் வடிவமைப்பது தனிக்கலையாகும். இந்தவகையான மாதிரி கலை உருவங்களை வடிவமைப்போர் பொறியியல் கல்லூரியில் போய் படித்துவிட்டோ, ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றுவிட்டோ அல்லது தனியார் நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துவிட்டோ வந்தவர்கள் அல்ல. விவசாயக்கூலி வேலை பார்த்துவிட்டு... வேலை இல்லாத நேரத்தில் பொழுதுபோக்காகவும், தாங்கள் வாழும் கிராமத்து திருவிழாக்களுக்குத் தங்களால் ஆன பங்களிப்பை நல்கும் வகையிலும் அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதே உண்மை.

மதுரை மாவட்டம், மாத்தூர் அருகே உள்ள குருத்தூர் எனும் குக்கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுக்கான மாதிரி உருவ வடிவங்களை உருவாக்கித் தரும் ரவி மற்றும் அவரது மனைவி ஜெய அமுதா ஆகியோர் கலையின் நுட்பங்கள் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...

""எனது தந்தை பெரியான். விவசாயக்கூலி. நானும் கூலிவேலைதான் பார்த்துவருகிறேன். இது எங்களுக்குப் பரம்பரைத் தொழில் இல்லை. விவசாய நேரத்தில் நாற்றுநடுதல், களை எடுத்தல் என வருவாய்க்கு வேலை இருக்கும். அறுவடை முடிந்தால் கிராமத்தில் வேலை இருக்காது.

அந்த நேரத்தில் எனது தந்தை கோயில் சிற்பங்களைப் போல களிமண்ணில் உருவங்களைச் செய்து அதை வெயிலில் காயவைத்து வீட்டில் வைத்திருப்பார். இதே போல பேப்பர் கூழ் மூலம் உருவங்களைத் தயாரித்து கோயில் திருவிழாக்களில் விற்றுவந்தார்.

அதுவே அவருக்கு கோடைகாலத்தில் வருவாய் தரும் தொழிலாகிவிட்டது. மண் மூலம் உருவங்களைச் செய்து அதில் பேப்பர் கூழ் பூசி நன்றாக வெயிலில் காயவைப்பார். பின்னர் மண்ணை உடைத்தால் பேப்பர் கூழ் உருவம் கிடைத்துவிடும். நான் சிறுவயதில் அப்பாவுடன் இருக்கும்போது இதை கவனித்தேன். பத்தாம் வகுப்பு வரையில் படித்த நான், அதற்குமேல் படிக்க வசதி இல்லாததால் விவசாயக்கூலி வேலையில் ஈடுபட்டுவருகிறேன்.

அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது. ஆகவே நான் இப்போது பாரம்பரிய கலைகளுக்கான உருவங்களைத் தயாரித்து விற்றுவருகிறேன். எனது அத்தை மகளைத்தான் திருமணம் செய்துள்ளேன். ஆகவே எனது மனைவியும் என்னுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்'' என்றார் ரவி.

ரவியைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெய அமுதா கலைத் தொழிலைப் பற்றி ஆர்வமுடன் விவரித்தார்.

""கிராமங்களில் இன்னும் மாடாட்டம், மயிலாட்டம்,

கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனப் பாரம்பரியக் கலைகள் திருவிழாக்காலங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு 6 கலை உருவங்களாவது விற்கும் நிலை உள்ளது. இவை ஒவ்வொன்றும் சுமார் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது.

இதுதவிர இப்போதும் கோயில் திருவிழாக்களில் விதவிதமான நேர்த்திக் கடன்களைப் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். அதற்கான முகமூடிகளையும் நாங்கள் செய்துதருகிறோம். வயதான பெண், பூதம், தாத்தா, பாட்டி உருவம் மற்றும் அரக்கர் தலை வடிவம் எனப் பலவகை முகமூடிகளை "நெட்டி' எனப்படும் தாவரத்தின் தண்டிலிருந்து தயாரித்து விற்கிறோம்.

கரகாட்டத்தில் செம்புக்கு மேலே உள்ள அன்னம், மயில் போன்ற அலங்கார உருவங்களையும் செய்து தருகிறோம். இதுபோன்ற பல அலங்கார உருவங்களைக் கோடை காலத்தில்தான் செய்யமுடிகிறது. ஆகவே முழு நேரத் தொழிலாக இல்லாமல் பகுதி நேரத் தொழிலாகவே கலை வடிவங்களைச் செய்துவருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரை சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தின்போது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பக்தர்களுக்கான தலை அலங்காரம் உள்ளிட்டவற்றையும் செய்துதருவதால் வருவாய் கிடைக்கிறது.

களிமண், பேப்பர் கூழில் செய்யும் உருவங்கள் எடை அதிகமானதாக இருக்கும். ஆகவே அதை தூக்கிக்கொண்டு ஆடும் வகையில் இப்போதைய கலைஞர்கள் இல்லை. பேப்பர் கூழ், களிமண்ணால் அமைக்கப்படும் மாடு, குதிரை உருவம் தத்ரூபமாக அமைவதில்லை. இதையடுத்து 'நெட்டி' எனப்படும் தாவர தண்டில் இந்த உருவங்களைச் செய்துதருகிறோம். இதனால் அவை லேசாக இருப்பதுடன், நீண்டநாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடிகிறது.

மதுரை மாவட்டத்தில் கண்மாய்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி தாவரம் அதிகமாக இருந்தன. இதனால் இலவசமாகவே அவற்றை பிடுங்கி காயவைத்து உருவங்களை அமைத்தோம். ஆனால் இப்போது நெட்டித் தாவரங்கள் அரிதாகிவிட்டன. கண்மாய்களில் நம்மண்ணிற்குரிய தாவரங்கள் முளைக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆகவே நெட்டியை கோவை, நாகர்கோயில்,

திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து உருவங்களைச் செய்துதருகிறோம். நெட்டியைக் காசுக்கு வாங்குவதால் இப்போது கலை உருவங்கள் செய்வதற்கு நிறைய மூலதனம் தேவைப்படுகிறது.

மதுரை புதுமண்டபத்தில் உள்ள கலைப் பொருள் விற்பனை கடைக்காரர் எங்களுக்கு ஆர்டர் தந்து வாங்குவார். எங்களுக்கு நேரடியாக புதுமண்டபத்தில் கடை ஒதுக்கித்தந்தால் நாங்களே குறைந்த விலையில் கலைப் பொருள்களை விற்கலாம். இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உதவினால் நல்லது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com