ரைஸிருந்து ராக்கெட்டுக்கு..!

இந்தியாவின் முதல் எஸ்எல்வி ரக ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிவடைந்தபோது, கேரளத்திலிருந்து எழுந்த குரல் "வி டோன்ட் வான்ட் ராக்கெட், வி வான்ட் ரைஸ்' என்பதே. அந்த அளவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி
ரைஸிருந்து ராக்கெட்டுக்கு..!
Updated on
2 min read

இந்தியாவின் முதல் எஸ்எல்வி ரக ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிவடைந்தபோது, கேரளத்திலிருந்து எழுந்த குரல் "வி டோன்ட் வான்ட் ராக்கெட், வி வான்ட் ரைஸ்' என்பதே. அந்த அளவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. இது பழைய கதை.

அதன் பின்னர் இந்திய விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட வளர்ச்சி சர்வதேச அளவில் விண்வெளி தொழிற்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 5வது இடத்திற்குக் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதற்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஒத்துழைப்பும் முக்கியக் காரணமென்ற கருத்து பல்வேறு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதைப் போல, இந்தியாவின் இஸ்ரோ அமைப்பின் சார்பில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி தொழிற்நுட்பம் தொடர்பான கண்காட்சிகள் நாடு முழுதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள், அதன் சாதனைகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விவரிக்கப்படுகிறது.

இக்கண்காட்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சமீபத்தில் குன்னூரில் நடத்தப்பட்டது. இதில் இஸ்ரோவின் தயாரிப்புகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, இன்சாட், கல்பனா, சந்திராயன் உள்ளிட்ட தற்போது வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் மற்றும் எதிர்காலத்தில் வட்டமடிக்கவுள்ள செயற்கை கோள்கள் ஆகியவற்றின் மாதிரிகளை காட்சிக்காக வைத்திருந்தனர்.

இஸ்ரோó அமைப்பினருடன், நீலகிரி கலாசாரச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள் கண்காட்சியை நீலகிரி மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும் சுமார் 20,000 பேர் வந்து கண்டுகளித்துள்ளனர். இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் புத்தகப் படிப்பை மட்டுமே போதிக்காமல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான அறிவியல் உணர்வுகளையும் அவர்களிடத்தில் புகுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்கான எஜு சாட் செயற்கை கோள், நிலப்பரப்பைத் துல்லியமாக வடிவமைக்கும் கல்பனா செயற்கை கோள், நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியிலான மூன் மிஷன் சந்திராயன் 2 செயற்கை கோள், செயற்கை கோள்களை ஏவும் வாகனங்கள், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி வகைகளிலான செயற்கை கோள்கள், நகரமைப்பு வசதிகளுக்கான கார்ட்டோ சாட் செயற்கை கோள்கள், மீன்வளம் மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கான ஓசன் சாட், வானியல் ஆராய்ச்சி தொடர்பான அஸ்டிரோ சாட் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரோவின் மக்கள் தொடர்பு இயக்குநர் சதீஷ், ""நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியில் புதிய முயற்சியான ஸ்பேஸ் ரிசர்ச் கேப்ஸ்யூல் (எஸ்ஆர்இ) எனப்படும் விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கே திரும்பிவரும் இந்த விண்கலத்தையும் இஸ்ரோ தயாரித்துள்ளது.

பொதுவாக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டதுடன் அவற்றின் ஆயுட்காலம் முடிவடைந்ததும் அங்கேயே அழிக்கப்பட்டுவிடும். ஆனால், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கே திரும்பிவரும் வகையிலான விண்கலத்தை இந்தியா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 2ன் பயணத்தில் இந்த விண்கலம் பயன்படுத்தப்படும்'' என்றார்.

மக்கள் தொடர்பு அலுவலர் குருபிரசாத், ""விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா  அசுர வளர்ச்சி எட்டியுள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டில் முதன்முதலாக விண்ணில் ஏவப்பட்ட ஆரியபட்டா, அதைத்தொடர்ந்து பாஸ்கரா, ஆப்பிள், இன்சாட் 1ஏ, 1பி, 1சி, 2ஏ, ரகங்கள், ஜிசாட், ரிசோர்ஸ் சாட், கார்ட்டோசாட், ஸ்டூட்சாட், ரிசாட், என இதுவரை 58 விண்கலங்கள் இந்தியாவின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இதைத்தவிர கடந்த 1999}ம் ஆண்டிலிருந்து ஜெர்மனி, கொரியா, பெல்ஜியம், இந்தோனேசியா, அர்ஜென்டினா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி, சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் 25 செயற்கைகோள்களையும் இந்திய விண்கலங்கள் விண்ணில் ஏவியுள்ளன'' என்றார்.

கண்காணிப்புக் குழு இயக்குநர் போஜராஜ்... ""விண்வெளி தொழிற்நுட்பங்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் இந்திய விண்கலங்களே செலுத்தமளவிற்கு இந்தியா விண்வெளி தொழிற்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக இத்தொழிற்நுட்பத்தில் உலகின் முதல் 5 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது. நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்பட உலகிற்கு அறிவித்தவர்கள் இந்திய ஆராய்சியாளர்கள்தான்'' என்றார் தோல்வியடையாத ராக்கெட்டாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com