மன்மத லீலையை வென்றார் உண்டோ?

மன்மதலீலையை வென்றார் உண்டோ...' காற்றில் கசிந்தது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களின் செவிகளை வசப்படுத்திய அந்தக் கந்தர்வக் குரல். பாகவதர்தான் மீண்டும் வந்துவிட்டாரோ? என்று எண்ணும் அளவுக்கு ஏழிசை ம
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
Updated on
2 min read

மன்மதலீலையை வென்றார் உண்டோ...' காற்றில் கசிந்தது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களின் செவிகளை வசப்படுத்திய அந்தக் கந்தர்வக் குரல். பாகவதர்தான் மீண்டும் வந்துவிட்டாரோ? என்று எண்ணும் அளவுக்கு ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் அத்தனை பாடல்களையும் அப்படியே பாடி அரங்கில் இருந்த அனைவரது பாராட்டையும் பெற்றார் அந்தப் பாடகர்.

1944 முதல் 1950-ம் ஆண்டுகள் வரை தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களை அப்படியே பாட ஒருவர் இருக்கிறாரா? என்று வியக்கும் வேளையில், மேலும் ஒரு வியப்பைக் கொடுத்தார் அந்தப் பாடகர் காஷ்யப் மகேஷ்!

திருச்சியில் அண்மையில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற  இன்னிசை நிகழ்ச்சியில், ஏறத்தாழ ஒரு மணி நேரம் பாகவதரின் பாடல்களை மட்டுமே பாடி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற காஷ்யப் மகேஷ் தன் பெயரில் மட்டுமல்ல... பல்வேறு வித்தியாசமான திறமைகளையும் தன்னகத்தே  கொண்டுள்ளார். பாகவதரின் பாடல்கள் மீது வந்த பற்று, பாடல்கள் பாட எடுத்துக் கொண்ட சிரமம், இதர திறமைகள், பெரியோரின் பாராட்டு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து

கொண்டார்...

""காஷ்யபன் என்பது ஒரு முனிவரின் பெயர். எனது தந்தை ரகுநாதன் பட்டயக் கணக்காளர். தாய் ரமா ரகுநாதன். குழந்தைகள் பள்ளித் தாளாளர். சிறுவயதில் இருந்தே பாடுவதில்  எனக்கு ஆர்வம்.

மூன்று வயதிலிருந்து பாடத் தொடங்கினேன். 9-வது வயதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் "மழலையும், மேதைகளும்' என்ற ஆல்பத்தில் பாட வாய்ப்புக் கிடைத்தது. அதில், மதநல்லிணக்கப் பாடல்களையும், தேசிய ஒருமைப்பாட்டு பாடல்களையும் பாடினேன். தொடர்ந்து கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கினேன். டி.வி. கோபாலகிருஷ்ணன், காரைக்குடி எம்.எஸ். மணி ஆகியோர் எனது குருநாதர்கள். திருச்சி காமகோடி வித்யாலயா பள்ளி மற்றும் இ.ஆர். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தேன். படிக்கும் போதே எனது திறமைகளைக் கண்டு பள்ளி நிர்வாகத்தினர் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் மட்டுமன்றி, மக்களை எளிதில் கவரக்கூடிய பாடகரான என்.எஸ். கிருஷ்ணனின் பாடல்களும் எனக்கு நன்றாகப் பாட வரும். அவர்கள் பாடியதைப் போலவே பாடுவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இசையை நன்கு அறிந்தவர்கள் முன்னிலையில் பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் பாடல்களைப் பாடும்போது சரியான முறையில் பாடவில்லை என்றால் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

10 வயது முதல் தியாகராஜ பாகவதரின் பாடல்களைப் பாடி வருகிறேன். நான் பாகவதரின் தீவிர ரசிகன். அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்.  பல சிரமங்களுக்கு இடையே பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்டுள்ளேன். மேடைக்கு ஏற்பவும், மக்களின் ரசனைக்கு ஏற்பவும் எனது பாடும் விதத்தை மாற்றிக் கொள்வேன். இதுவரை ஏறத்தாழ 1,500 மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளேன். தமிழகம் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பாடிய அனுபவம் உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய "வளமான நாடாக்குவோம்' என்ற கவிதைக்கு மெட்டு அமைத்து நானே பாடி அவருக்கு அனுப்பிவைத்தேன்.

கடந்த 2003-ம் ஆண்டு திருச்சிக்கு வந்த அப்துல் கலாம், ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் என்னை மட்டும் அழைத்து பாராட்டுத் தெரிவித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதேபோல, கடந்த 2008-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பாடிய அனுபவத்தையும் என்னால் மறக்க முடியாது.

திரைப்படத்தில் பாட சில வாய்ப்புகள் வந்தன. வயது இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன். இனிமேல், திரைப்படங்களில் பாட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பாடுவேன். பாகவதர் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களைப் பாடுவது மட்டுமல்லாமல் ஓவியமும் வரைவேன். முக்கிய கோயில்களின் கருவறை, அதில் உள்ள தெய்வங்களை வரைவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  பாடுவதைத் தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவேன். கோயில்கள், சுவாமிகள் பற்றியே அதிகம் வரைந்துள்ளேன்.

கடந்த 2006-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்தபோது "மைக்ரோசாப்ட்' நிறுவனம் கணினியில் அறிமுகப்படுத்திய  "பெயின்டிங்' மென்பொருளைப் பயன்படுத்தி நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்து பில்கேட்ஸ் பாராட்டுக் கடிதம் அனுப்பினார்.

"மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தின் பெங்களூர் கிளை அலுவலகத்தின் மூலம் விலை உயர்ந்த மடிக் கணினியை எனக்கு பில் கேட்ஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதன் மூலம் "சிறந்த இளைஞர்' என்ற பட்டத்துடன், ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் கருணாநிதியிடம் இருந்து பெற்றேன்.

இதேபோல, விக்டோரியா மகாராணியின் பிறந்த நாளையொட்டி ஆஸ்திரேலிய அரசு உலகில் திறமை வாய்ந்த 80 பேரைத் தேர்வு செய்து விருது வழங்கி கெüரவித்தது. அந்த  விருதைப் பெற்றவர்களில் நானும் ஒருவன்'' என்றார் பெருமிதத்துடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com