

அண்மையில் உதகையில் நடுத்தரமான ஒரு விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் மெக்கின்சனைச் சந்தித்தபோது உதகையிலுள்ள மைசூர் மகாராஜாவின் அரண்மனை தற்போது தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளதைக் குறித்துச் சொன்னார். அப்போது அவர் அந்த விடுதியில் ஒரு நாளாவது தங்கிவிட வேண்டுமென்றார். ஏனென்று கேட்டபோது, மைசூர் மகாராஜா அங்குதான் தங்கினார்.
அதனால், ஒரு நாளாவது நான் தங்கினால் மகாராஜா வாழ்நாள் முழுதும் அனுபவிக்கும் அந்த நினைவுகளை என்னால் பெற முடியும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடத் தயாராக உள்ளேன் என்றார். சொன்னபடியே தங்கியும் பார்த்தார்.
பழைய நினைவுகள் மறக்க முடியாதவை, பழைய பாடல்களிலிருந்து, பழைய நண்பர்களிலிருந்து, பழைய சம்பவங்களிலிருந்து நம்மை அவ்வளவு எளிதில் விடுவித்துக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் பழைய நினைவுகளின் மேல் நமக்கிருக்கும் அக்கறையும், ஆர்வமுமே. இந்த வகையில் பழைய கட்டடங்களையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இன்டெக் அமைப்பு ஆகியவை இணைந்து பாரம்பரிய சுற்றுலா என்ற புதிய திட்டத்தைக் கடந்த வாரம் செயல்படுத்தின.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களாலும் அதற்கு முந்தைய பல்வேறு சம்ஸ்தானங்களின் மன்னர்களாலும் கட்டப்பட்ட அரண்மனைகள், மாளிகைகள், கட்டடங்கள் போன்றவற்றின் சிறப்பையும் அதன் வரலாற்றையும் இக்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே இச்சுற்றுலாவின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சிக்குப் பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
உதகையிலுள்ள பழமை வாய்ந்த 1866}ம் ஆண்டில் கட்டப்பட்ட தபால் அலுவலக கட்டடத்திலிருந்து தொடங்கிய இந்தப் பாரம்பரிய சுற்றுலா அருகிலுள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்தைச் சென்றடைந்தது. இந்தத் தேவாலயம் கடந்த 1829}ம் ஆண்டில் அப்போதைய ஆங்கிலேய ஆளுநரான ரம்போல்டு லஷ்ஷிங்டன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1830}ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தத் தேவாலயக் கட்டடத்தைக் கட்டுவதற்கு அப்போது ஆன செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.28,000 மட்டுமே. இந்த தேவலாயத்தின் கதவுகள் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்த திப்பு சுல்தான் அரண்மனையிலிருந்து யானைகள் மூலம் உதகைக்குக் கொண்டு வரப்பட்டவை என்ற தகவல் அங்கு தெரிவிக்கப்பட்டபோது ஆச்சரியத்தால் அனைவரின் புருவங்களுமே உயர்ந்தன.
அதையடுத்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தையும் பார்வையிட்டனர். இக்கட்டடமும் 1866}ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். தொடர்ந்து நீலகிரி நூலகக் கட்டடப் பகுதிக்குச் சென்றனர். இக்கட்டடம் 1859}ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். தொடர்ந்து 1895}ம் ஆண்டில் கட்டப்பட்ட யூனியன் தேவாலயத்தையும், 1874}ம் ஆண்டில் கட்டப்பட்ட பிரீக்ஸ் நினைவு பள்ளியையும் பார்வையிட்டனர். இப்பள்ளியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது.
பின்னர் சென்னை ராஜதானியின் கவர்னராக இருந்த வில்லியம் பேட்ரிக் என்பவரால் அமைக்கப்பட்டு தற்போது சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஆடம்ஸ் நீரூற்றையும், வில்லிங்டன் சீமாட்டியால் கட்டப்பட்ட அசெம்பிளி ரூம்ஸ் அரங்கையும், சர் ஆர்தர் லாலியால் 1911}ம் ஆண்டில் கட்டப்பட்ட லாலி இன்ஸ்டிட்யூட் வளாகத்தையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
உதகை நகரைச் சுற்றிலும் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்ற இந்தப் பாரம்பரிய சுற்றுலா உதகையிலுள்ள பல்வேறு பழம்பெரும் கட்டடங்களின் பெருமைகளைக் குறித்தும் தெரிந்து கொள்ள உதவியதாக சுற்றுலாப் பயணிகளும், மாணவ, மாணவியரும் கருத்து தெரிவித்தனர்.
""சுத்தமான காற்று, தண்ணீர், உணவு இவை மூன்றும் இருந்தால் மனமும் தூய்மையாக இருக்கும். ஆனால், தற்போது நாம் மாசடைந்த காற்று, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவாக்கப்பட்ட உணவுப் பொருள் ஆகியவற்றுக்குப் பழக்கப்பட்டுள்ளதால் நமது சிந்தனைகளும் அதற்கேற்ற வகையிலேயே உள்ளது. எனவே, காட்டை அழிக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் நாம் எவ்வாறு பாரம்பரியமானவற்றைத் தேடி சென்று பார்க்கிறோமோ அதைப்போலவே நமது சந்ததியினரும் எதிர்காலத்தில் நாம் செய்த சாதனைகளை எண்ணிப் பார்ப்பார்கள்'' என்றார் இந்தப் பாரம்பரிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் துரைராஜ்.
அவர் மேலும் கூறுகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கின் முயற்சியால் நடத்தப்பட்ட இந்தப் பாரம்பரிய சுற்றுலாவைத் தொடர்ந்து கிராமிய சுற்றுலா, கல்வி சுற்றுலா, இயற்கை சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, வன உயிரின சுற்றுலா போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்து வருவதாகவும், இத்தகைய சுற்றுலாவுக்கெனத் தனி பயிற்சி பெற்ற தனி வழிகாட்டிகள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.