

"தெரு முனையில் உறுமிக்கிட்டே திரும்பிய கார் தூக்கத்தைக் கலைச்சுடுச்சு... காலையில் பேப்பரில் படிச்ச செய்தி இன்னும் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு... வடபழனி சிக்னலில் சிறுமியைக் கையில் வெச்சுக்கிட்டு ""ஐயா பசிக்குது''ன்னு நின்ற சிறுவனுக்குப் பிச்சை போட முடியாமல் போன நொடி மனசுக்குள் ரணமா இருக்கு.... எல்லா பரபரப்புகளையும் விட்டுட்டு ரெண்டு நாள் சிவகங்கையில் போய் உட்கார்ந்தா அங்கேயும் ஒரு விஷயம் சீட்டுக் கட்டு மாதிரி மனச கலைச்சு போட்டு வேடிக்கை பார்க்குது.... - சந்தித்த நேரத்தில் எல்லாம் இப்படியான மன உணர்வை நம்மோடு பகிர்ந்து கொள்ள செழியனால் மட்டுமே முடிகிறது. தமிழ் சினிமாவின் நம்பகமான ஒளிப்பதிவாளர். "கல்லூரி', "மகிழ்ச்சி', "தென்மேற்கு பருவக்காற்று' என அடுத்தடுத்த படங்களை கவனிக்க வைப்பவர்.
உங்களை மாதிரி கேமராமேன் ஆக என்ன செய்யணும்?
தெரியலைங்க. இந்த கேள்விக்குதான் நானும் பதில் தேடிக்கிட்டு இருக்கேன். என்ஜீனியரிங் படிக்க ஆசை. அதே மாதிரியே சேர்த்து விட்டாங்க. அப்பா பெயிண்டர் என்பதால் சின்ன பிள்ளையாக இருக்கும் போதே படங்கள் வரைவதில் ஆர்வம் வந்துவிட்டது. அப்படியே கேமரா வாங்கி படம் பிடிக்கத் தொடங்கி விட்டேன். சினிமா மீது நிறைய ஆசை. ஆனா அது பத்தி ஒண்ணும் தெரியாது. அப்பா நிறைய படங்கள் காட்டுவார். சின்னஞ் சிறு கேமராவில் எடுத்தப் படங்களையெல்லாம் எடுத்துக்கிட்டு சென்னைக்குப் பஸ் ஏறி பி.சி.ஸ்ரீராம் சார்க்கிட்ட வந்து நின்னேன். உங்ககிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணணும் சார்ன்னு கேட்டேன். லேசான புன்னகையுடன் ஆறு மாசம் காத்திரு. அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட்டார். சொன்ன மாதிரியே சேர்த்துக்கிட்டார். நானும் கேமராமேன் ஆகிட்டேன்.
ஒரு படத்துக்கான அளவுகோலை எப்படி தீர்மானிக்கிறீங்க?
சினிமா ஒரு கூட்டு முயற்சி. இங்கு யாரும் எதையும் தனியா சாதிக்க முடியாது. எல்லாமே கை கூடி வரணும். மனசும் உடம்பும் லயிச்சு இயங்கணும். கதைதான் ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்க அளவுகோல். ஆனா அது சுமாரா இருந்தாலும் திரைக்கதை செட் ஆகணும். இந்த விஷயம் கரெக்டா இருந்தா வேறு யோசனை இல்லாமல் படத்தில் கமிட் ஆகிடுவேன். இந்த அலைவரிசைதான் என்னையும் சீனு ராமசாமியையும் "தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இணைச்சு வெச்சது. படத்துக்கு இவ்வளவு பெரிய பாராட்டுகளை நான் எதிர்பார்த்ததுதான். தமிழ் சினிமாவின் வழக்கமான பார்வைகளை உடைச்சு நிற்குது படம். இந்தப் படத்துக்காக நானும்
சீனுவும் நிறையப் பேசினோம். பெரிய விருட்சமா இப்போ தழைச்சு நிற்பதற்கு புரிதல் மட்டுமே போதும். இந்த திருப்திதான் அடுத்த பயணங்களுக்கான எரிபொருள்.
தொடர்ந்து கிராமத்து சாயல் படங்களே பண்ணுறீங்களே?
அது அதுவாகவே அமைஞ்சிடுது. எல்லாத்துக்கும் திட்டம் இருக்கணும். சினிமா எவ்வளவு பெரிய மீடியம்? அதுல நாம சொல்ற விஷயம் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால்தான் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான கதைகளைப் பண்றேன். அது எல்லாமே கிராமத்துக் கதைகளாக இருப்பது எனக்கு இதுவும் பிடிச்சிருக்கு. இதை தாண்டிய ஒரு பயணம் இன்னும் எனக்குக் கிடைக்கலை. கிடைத்தால் அங்கும் ஒரு கை பார்க்கலாம்.
வருஷத்துக்கு 100 படங்கள் வந்தும் வெற்றிப் படங்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருக்கே?
சினிமா இந்த அளவுக்கு உயர காரணம் மக்களின் ரசனைதான். நினைத்த நேரத்தில் ஒரு உலக சினிமாவை |20-க்கு வாங்கி பார்த்துடலாம். இந்த நிலை இப்போதான் இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு வெளிநாட்டு சினிமாவைப் பார்ப்பது இயலாத காரியமாக இருந்துச்சு. உலக சினிமாக்களின் பாதிப்பு எல்லா சினிமாவிலும் இறங்கிவிட்டது. இது நல்ல விஷயம். ஆனா சினிமாவின் வெற்றி தோல்விக்கு ஒரு விஷயம் தன்னிச்சையா இயங்கிட்டே இருக்கு. டி.வி.டி.யில் பார்த்த ஒரு நல்ல சினிமாவை தியேட்டருக்கும் வந்து பார்க்க விரும்புறாங்க. அது படமாக இருந்தால் மட்டுமே. இல்லைன்னா டி.வி.டி.யிலே பாதி சினிமாதான் பார்க்குறாங்க. எந்த மொழியில் படம் எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் பண்ண முடியும் என்ற நிலை இப்போ சினிமாவில் இருக்கு. பாலிவுட்டில் மெகா ஹிட்டான படத்தைக்கூட மூணே மாசத்துல டி.வி.டி.யாக ரிலீஸ் பண்ணிருவாங்க. அது சினிமாவுக்கு வரவேண்டிய வருமானம், வேறு வழிகளில் வீணாவதை தடுக்கும். அந்த மாதிரியான மார்க்கெட்டிங் டெக்னிக்கலும் நம்ம சினிமாவில் வரணும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.