5 மணி நேரத்தில் நடந்த அசுர சாதனை!

ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும் என்றாலோ குறைந்தது 20 நாள்களாவது ஆகலாம் என்பது பொதுவான கருத்து. இதுவ
5 மணி நேரத்தில் நடந்த அசுர சாதனை!
Updated on
2 min read

ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும் என்றாலோ குறைந்தது 20 நாள்களாவது ஆகலாம் என்பது பொதுவான கருத்து. இதுவே 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு என்றால்?

ஆண்டுகள் பல ஆகலாம். அனைத்தும் முறையாகச் செயல்பட்டால் மட்டுமே இந்தக் கால அளவு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், 90 மைல் தொலைவுக்கு (ஏறத்தாழ 135 கிலோ மீட்டர்) இருந்த மீட்டர் கேஜ் பாதையை 5 மணி நேரத்தில் அகலப் பாதையாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள் அப்போதைய தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தினர்.

இந்த அற்புத சாதனை நிகழ்த்தப்பட்டது இன்றோ அல்லது நேற்றோ அல்ல, 80 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? இந்தச் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது?

ஈரோடு- திருச்சி இடையே மொத்தமுள்ள 90 மைல் தொலைவுக்கு இருந்த  மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற கடந்த 1929-ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

ரயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அகலப் பாதை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், ஒரே நாளில் மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. முதலில் பொறியாளர்கள் குழு அமர்ந்து பொறுமையாகத் திட்டங்களைத் தயார் செய்தது.

திட்டங்களைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட அபாரமான பணி இப்போது நினைத்தாலும் பிரமிப்பானது. எந்தவிதத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில்  மிகவும் சிறப்பாக முடிக்கப்பட்டது 90 மைல் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி.

பல்வேறு முதல் கட்டப் பணிகள் முடிந்த நிலையில், மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயிலுக்கும், அகலப் பாதையில் இயக்கப்பட்ட ரயிலுக்கும் இடையே 5 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதுபற்றிக் கூறுகிறார் திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சி.கே. சிவராஜ்:

""இந்தச் சாதனை அரங்கேறியது கடந்த 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி. தென்னிந்திய ரயில்வேயின் அப்போதைய தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஏ. மியூரிஹெட்டிம் அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து, தலைமைப் பொறியாளர் டபுள்யு.எச். ஃபர்ன்ஸ் உத்தரவின்பேரில், செயற்பொறியாளர் ஏ.ஆர். எடிங்டன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். இந்தப் பணிகள் நடந்த விதம் மிகவும் சுவாரசியமானது.

திருச்சி- ஈரோடு வரை உள்ள மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து இல்லாத நேரத்தில், நடுவில் இருந்த சிலிப்பர் கட்டைகளை அகற்றிய ஊழியர்கள் அவற்றுக்குப் பதிலாக அகல ரயில் பாதைக்குப் பயன்படுத்தப்படும் கட்டைகளைப் பதித்தனர்.

பின்னர், அந்தக் கட்டைகளை இணைத்து அகலப் பாதைக்குத் தேவையான தண்டவாளம் கூடுதலாக இணைக்கப்பட்டது. இதேபோல, ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் அகல ரயில்கள் இயக்குவதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த மாதிரியான முதல் கட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சாதனைக்குரிய நாளான 25-9-1929 அன்று காலை திருச்சி- ஈரோடு இடையே உள்ள 90 மைல் தொலைவுக்கும் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் ரயில்வே ஊழியர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.

தண்டவாளத்தைச் சரிசெய்யத் தேவையான அனைத்து உபகரணங்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. தற்போது உள்ள அளவுக்கு தகவல் தொடர்பு வசதி இல்லையென்றாலும் மிகச் சரியான தகவல்கள் கொடுக்கப்பட்டன.

மீட்டர் கேஜ் பாதையில் கடைசியாக இயக்கப்பட்ட ரயில், காலை 6.20 மணிக்கு ஈரோட்டில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், தண்டவாள ஆய்வாளர் ரொசாரியோ தயாராக இருந்த ஊழியர்களுக்குக் கட்டளையிடத் தொடங்கினார்.

மீட்டர் கேஜ் பாதையில் ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் ரயில் கடந்து  சென்ற பாதையில் தண்டவாளத்தின் நடுவில் இருந்த மீட்டர் கேஜ் பாதை தண்டவாளங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மீட்டர் கேஜ் ரயில் கடந்து சென்ற இடங்கள் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் அகலப் பாதைகளாக மாறிக் கொண்டிருந்தன. இந்தப் பணிகளை டிராலியில் சென்றபடி, ஆய்வாளர் ரொசாரியோ ஆய்வு செய்து, உதவிப் பொறியாளர் (சிக்னல்) எட்மன்ட்ஸýக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின்படி, ஈரோட்டில் இருந்து மீட்டர் கேஜ் பாதையில் புறப்பட்ட ரயில் நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அகலப் பாதையில் காலை 8.20 மணிக்கு அகலப் பாதை ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் இருந்தபடியே முதுநிலை ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் தண்டவாளத்தை ஆய்வு செய்தபடி சென்றனர்.

இந்த ரயில் 5 மணி நேர பயணத்துக்குப் பிறகு பிற்பகல் 1.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 5 மணி நேர இடைவெளியில் திருச்சி- ஈரோடு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை காணாமல் போனதோடு, அகலப் பாதையும் உருவானது.

இந்த அற்புத சாதனை நிகழ்த்தப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்திய ரயில்வே அரசிதழில் 1930-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அசுர சாதனை நிகழ்த்தப்பட்ட எண்பதாவது ஆண்டு வரும் வாரத்தில் கொண்டாடப்பட இருக்கிறது'' என்றார் சிவராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com