காது குத்தியாச்சா?!

நம்ப முடியாத செய்திகளை யாராவது சொல்லக் கேட்டால், "எனக்கு சின்ன வயசுலேயே காது குத்தியாச்சி அப்பு... நீ வேற இப்ப குத்தப் பார்க்காதே...' என்று சொல்வோம். இது உண்மையிலேயே காது குத்துவது பற்றிய செய்திதான்!
காது குத்தியாச்சா?!
Updated on
2 min read

நம்ப முடியாத செய்திகளை யாராவது சொல்லக் கேட்டால், "எனக்கு சின்ன வயசுலேயே காது குத்தியாச்சி அப்பு... நீ வேற இப்ப குத்தப் பார்க்காதே...' என்று சொல்வோம். இது உண்மையிலேயே காது குத்துவது பற்றிய செய்திதான்!

நீலகிரி மாவட்டம், நாட்டின் பிரதான 6 பழங்குடிகளான தோடர், கோத்தர், குரும்பர், இருளர், காட்டுநாயக்கர் மற்றும் பணியர் ஆகிய 6 இனங்களைச் சேர்ந்தோர் வசித்து வரும் முக்கிய மலைப்பகுதியாகும்.

இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் "மந்துகள்' என அழைக்கப்படும் 15 குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் தோடர் இனத்தவரின் பாரம்பரிய நிகழ்வுகள் மற்ற பழங்குடியினரைவிட வித்தியாசமானவையாகும். இவற்றில் ஒன்றுதான் "கிவ்வியா' பண்டிகை என அவர்களால் அழைக்கப்படும் பண்டிகையாகும். இது வேறொன்றுமில்லை.

நம்ம ஊர் காது குத்துதான்.

நம்ம ஊரில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் குழந்தைப்பருவத்திலேயே தாய்மாமன் மடியில் அமர்த்தி காது குத்தி விடுவோம். ஆனால், தோடர்களில் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் காது குத்தப்படுகிறது. இது கட்டாயமானதாகும். இதுதொடர்பாக தோடர் சமுதாய தலைவர்களான சத்தியராஜ் மற்றும் ஆல்வாஸ் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்...

""தோடரினத்தில் ஆண்கள் மட்டுமே பாரம்பரிய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது கோவில் பூசாரியாக பணியாற்ற வேண்டும் என்பது ஐதீகமாகும். பூசாரியாக இருப்பவர்கள் கட்டாயமாக காது குத்திக் கொள்ள வேண்டும். காது குத்திக் கொள்ளாதவர்கள் பூசாரியாக இருக்க தகுதியற்றவர்களாவர். அதனால்தான் தோடரினத்தாரில் ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் கட்டாயமாக காது குத்தப்படுகிறது.

அதேபோல காது குத்திக்கொள்ளாத ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் உடனடியாக புதைக்கப்பட மாட்டாது. அவரது தாய்மாமன் வந்து இறந்தவரின் சடலத்திற்கு காது குத்திய பின்னரே அவரது உடல் புதைக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கு அவர்களது வலது காது மட்டும் குத்தப்படும். இதற்கான செலவினை அவர்களது  தாய் மாமன்தான் ஏற்க வேண்டுமென்பதும் கட்டாயம்.

இந்த சம்பிரதாயம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது. இதற்கான நிகழ்வுகள் அந்தந்த மந்து பகுதிகளில் நடக்கவில்லையே தவிர, அவரவருக்கு விருப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று காது குத்தி வந்தனர். இதையடுத்து தோடர் சமுதாயத்தினர் எடுத்த முடிவின்படி சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்து பகுதியில் இவ்விழா நடைபெற்றது.

குழந்தைகளும், பெரியவர்களுமாக சுமார் 50 பேருக்கு ஒரே நேரத்தில் அவர்களது தாய்மாமன்மார்கள் காது குத்தினர். காது குத்தப்பட்டவுடன் அவர்களது பாரம்பரிய கோவிலான "முன்போ' என்ற பெரிய கோவிலைச் சுற்றி வழிபட்டனர். பின்னர் "அரப்போ' என்ற மற்றொரு கோவிலிலும் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே வெள்ளை வேட்டியும், பூத்துக்குளி என அழைக்கப்படும் அவர்களது பாரம்பரிய மேலாடையும் அணிந்திருந்தனர். சமுதாயத்தில் வயதானவர்கள் மட்டும் தங்களது பாரம்பரிய கைத்தடியையும் கொண்டு வந்திருந்தனர்.

தோடர் மந்து பகுதியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பதால் இதைக்காண மற்ற சமுதாயத்தினரும், பொதுமக்களும் முத்தநாடு மந்து பகுதியில் திரண்டிருந்தனர். காது குத்தும் விழாக்களிலேயே வித்தியசமானதொரு நிகழ்வு உண்டென்றால், அது இந்த நிகழ்வு மட்டும்தான்'' என்றனர் சத்தியராஜும் ஆல்வாஸýம் பூரிப்புடன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com