ஆதாம் ஏவாள் முதல் ஆர்யன் ஆராதனா வரை!

ஆதாம் ஏவாள் முதல் ஆர்யன் ஆராதனா வரை!

களவாடிய பொழுதுகள்' இந்த மாதம் ரிலீஸ் என தகவல். பேசலாம் என ஓர் அலைபேசி தட்டியதும், "நாமதான் பேசி ரொம்ப நாளாச்சே வாங்க'ன்னு அழைக்கிறார் தங்கர்பச்சான். தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளி. எல்லாவற்றுக்கு
Published on

களவாடிய பொழுதுகள்' இந்த மாதம் ரிலீஸ் என தகவல். பேசலாம் என ஓர் அலைபேசி தட்டியதும், "நாமதான் பேசி ரொம்ப நாளாச்சே வாங்க'ன்னு அழைக்கிறார் தங்கர்பச்சான். தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளி. எல்லாவற்றுக்கும் கருத்து வைத்திருப்பார். மண் பானையை உடைப்பது போல் மனம் திறக்கும் படைப்பாளி. சொன்ன நேரத்தில் காத்திருந்து மனம் திறந்தார்.

 "" "களவாடியப் பொழுதுகள்' ரிலீஸ் ஆகப் போகுது. குஞ்சுக்குச் சிறகுகள் துளிர் விட்டாதான் முட்டையை உடைச்சுக்கிட்டு வெளியே வரும். அதே மாதிரிதான் என் களவாடியப் பொழுதுகளும். இப்படி ஒரு படத்தை செய்து முடிச்சிருக்கேன்னு நினைக்கும்போதே பெருமையாக இருக்கு.

 

 களவாடிய பொழுதுகளுக்கு அப்படி என்னதான் பிரச்னை?

 நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ அது எதுக்கு? குழந்தை பத்து மாசம் கழித்தும் வெளியே வரலைன்னா எப்படியிருக்கும் அந்தத் தாய்க்கு. இந்தப் படமும் எனக்கு குழந்தை மாதிரிதான். ஒரு தாயின் வேதனை, வலி கலந்த பயம் எல்லாமே போன வாரம் வரைக்கும் இருந்துச்சு. இப்போ தயாரிப்பாளர் தரப்பில் படம் பார்த்து மெய் சிலிர்த்து ரிலீஸ் பண்ணப் போறாங்க. எப்போ வரும்ன்னு நானே ஆவலாக இருந்தேன். இப்போ மகிழ்ச்சி. யாரையும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு சூழல். எல்லாத்துக்கும் காலம் கூடி வரணும். இப்போ வந்திருக்கு.

 யார் யார் மனதையெல்லாம் களவாடப் போகிறது இந்தப் பொழுதுகள்?

 ஆதாம், ஏவாள் முதல் இதோ இப்போ இருக்கிற ஆர்யன், ஆராதனா வரை காதல் விரிஞ்சி கிடக்கு. அன்பே ஆருயிரேன்னு புறாவை தூது விட்ட கூட்டம், இன்னைக்கு மனசை ஒரு நிமிஷத்துல எஸ்.எம்.எஸ்.ஸô பறக்க விடுது. கலாசாரத்துக்கும் அறிவியல் மாற்றத்துக்கும் ஏற்ப காதல் மாறிக்கிட்டே வருது. இன்னைக்கு இருக்குற காதல் ரொம்ப அதிர்ச்சி கொடுக்குது. அப்போ நாளைக்கு? உறவுகளின் தனித்துவம் மறைந்து வரும் காலம் இது. குடும்ப உறவுகள் ஒரு பக்கம், ஆண், பெண் சம்பந்தப்பட்ட காதல் உறவு ஒரு பக்கம்ன்னு தறிக்கெட்ட வாழ்க்கையை நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். காதல் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயமாக மாறிக்கிட்டு வருது. எத்தனை அழகா, அருமையா இருந்த காதல் இப்போ எப்படி மாறியிருக்குன்னுதான் சொல்லப் போறேன். ஒரு கணம் நம்மை நாமே மறந்து விட்டால் நம் காதலும் தொலைந்துவிடும் என்ற உண்மையைச் சொல்ல போறேன். ஒரு விநாடி, நிமிடம், மணி நேரம்ன்னும் கலைந்து போன நினைவுகள்தான் இந்த களவாடிய பொழுதுகள். பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகான்னு முக்கியமான ஆள்கள் துணைக்கு இருக்காங்க.

 "அழகி', "ஒன்பது ரூபாய் நோட்டு', "தென்றல்'ன்னு மாற்று முயற்சிகளுக்கு வித்திட்டவர் நீங்கள், இப்போது உங்களின் களமும் காதலாகி விட்டதே?

 எதார்த்த படங்களுக்கு "அழகி'தான் முன் நிற்குது. ஆனால் அந்தப் படத்தைக் காதல் படமாகப் பார்ப்பதில் எனக்கு திருப்தி இல்லை. அதை ஒரு விதவைத் தாயின் காதல்ன்னு வித்தியாசப்படுத்திப் பார்க்கணும். சமூக சிக்கல்களைத்தான் எப்பவும் பேசியிருக்கேன். அதுதான் இதிலும் இருக்கு. காதல் இங்கு முக்கிய பிரச்னையாக இருக்கு. பாலியல் சிக்கல்கள் புரையோடி கிடக்கு. திருட்டுத்தனமா எதையும் செய்து கொள், வெளி உலகுக்கு நல்லவனா இருந்து கொள். இதுதான் நம் சமூகமாக இருக்கு. இங்கு எல்லா சினிமாக்களும் காதலைக் கல்யாணமாக முடித்து வைத்துத்தான் சுபம் போட்டிருக்கு. ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் ஒரு வாழ்வியலைச் சொல்லியிருக்கா? திருமணத்துக்குப் பின்தான் வாழ்க்கையே இருக்குன்னு சொல்லப் போறேன். இந்தப் படத்தை விட்டு யாரும் கடந்து செல்ல முடியாது. ஏன்னா இதுல எல்லோரின் வாழ்க்கையும் இருக்கு. திரைக்கும் ரசிகனுக்கும் இருக்கும் இடைவெளியை குறைச்சிருக்கேன். நீங்க பேசின வசனம், நீங்க வாழ்ந்த வாழ்க்கைதான் இதுல இருக்கும்.

 "அழகி' ஆரம்பித்து வைத்த எதார்த்த பாணி, இப்போ எப்படியிருக்கு?

 சமூகத்தில் லட்சம் விஷயங்கள் நித்தமும் நடக்குது. ஆனா அது எதையும் சினிமாக்களில் பார்க்க முடியலை. "சுப்ரமணியபுரம்'ன்னு ஒரு படம் வெற்றி பெற்றால் அதே மாதிரி முப்பது படங்கள் வருது. எதார்த்த சினிமாக்கள்ன்னு சொல்லிட்டு. எதை எதையோ செய்றாங்க. ஒரு பக்கம் பார்த்தா முன்னேற்றத்தின் அளவுகோலா ஐரோப்பிய, அமெரிக்க படங்களை நம் நாட்டின் கலாசாரத்துக்கு கொண்டு வர்றாங்க. இந்தப் படங்களை மீடியாக்களும் பெரிசா ஆதரிக்குது. சமகாலப் பிரச்னைகளை, உறவுகளின் சிக்கல்களை அரசியல் புரிதலோடு பிரசார நெடியின்றி கலை அழகியலோடு சொல்லுங்க. அதுதான் எதார்த்தம். அதுவே இயல்பு.

 எல்லாத்துக்கும் கருத்து வெச்சிருப்பீங்க. புதிய ஆட்சியின் நடவடிக்கைகள் எப்படி இருக்கு?

 அது இருக்கட்டும். இப்போ கடலூர் பக்கம் போயிருந்தேன். ஊரில் இளைஞர்களே இல்லை. எல்லோரும் சென்னைக்கோ, வெளிநாட்டுக்கோ பிழைக்கப் போயிருக்காங்க. வாரிசுகள் எல்லாம் விவசாயத்தை மறந்துட்டாங்க. விவசாய வேலைக்கு அங்கே ஆள் இல்லாத நிலை இருக்கு. இன்னும் கொஞ்ச காலத்துல நாம எல்லாம் விவசாயத்தை முழுசா மறந்துடுவோம் போலிருக்கு. இனிமே எதிர்கால விஞ்ஞான மாற்றத்தில் செல்போன் கூட நூறு ரூபாவுக்கு கிடைக்கலாம். ஆனா சாப்பிட அரிசி? விளை நிலங்களைத் தவிக்க விட்டால், பின் நாம தவிச்சு நிக்கும்போது, நமக்கு சோறு போட அதுக்கு இஷ்டம் இருக்குமா? அடுத்த தலைமுறை விவசாயம்னா என்ன விலைன்னு கேட்குமே? பெருந்தலைவர் காமராஜர் எப்பவும் கல்வியும், விவசாயமும்தான் நமக்கு வேணும்ன்னு திரும்ப திரும்பச் சொன்னார். அதை நாம செய்யாம விட்டுட்டோம். இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்ப எதாவது நாம செய்தாகணும். இது அரசின் கையில்தான் இருக்கு. இப்போ மக்களே எதிர்பார்க்குற ஒரு விஷயம் சமச்சீர் கல்வி. அதுதான் நம் வாரிசுகளுக்கான உண்மையான போதனையைத் தரும்ன்னு நினைக்கிறேன். இது என் கருத்து மட்டுமல்ல. நிறைய பேர் எதிர்பார்க்குற விஷயம். நம் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் கல்வி முறை வேண்டாம். அவர்கள் இங்கே இருக்கணும். நம்ம நாடும், மக்களும் செழிப்படையணும். அதுக்கான நல்ல கல்வியாக இந்த சமச்சீர் கல்வி அமையணும்.

 ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com