

தற்போதைய நவீன காலகட்டத்தில் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அதிலும் இந்த வாகனங்களுக்கு ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றுவதும் அன்றாடப் பணியாகும்.
ஆனால், நாம் பயணிக்கும் ரயிலுக்கும் இதேபோல தண்ணீர் ஊற்ற வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்றுதான் பதில் கிடைக்கும். ஆனால், நூறாண்டுக்கும் மேலாக நீலகிரியில் இயங்கிவரும் மலை ரயிலின் என்ஜினுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டியது
அவசியமேயாகும்.
மற்ற பகுதிகளில் இயங்கும் ரயில்களின் என்ஜினுக்கு தண்ணீர் ஊற்றும் காட்சியை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்தவர்கள் அனைவருமே தவறாமல் இக்காட்சியைக் கண்டு வியந்திருப்பர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் குறைந்த வேகத்தில் செல்லும் ரயில்களே இயங்கி வந்தன. என்ஜினில் உள்ள தண்ணீரை நிலக்கரி மூலம் சூடாக்கி அதன்மூலம் கிடைக்கும் நீராவியிலிருந்து அந்த என்ஜின்கள் இயக்கப்பட்டன.
இந்த நீராவி என்ஜின்களுக்குத் தேவையான தண்ணீரை வழங்குவதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தண்ணீர்த் தொட்டிகளுக்கு அருகிலுள்ள நீராதாரங்களிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்தத் தண்ணீர்த் தொட்டிகள் நிரப்பப்படும்.
காலப்போக்கில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜின்களுக்குத் தேவையான தண்ணீர் அதிகளவில் ஊற்றப்பட்டு அதிலிருந்து நீராவி உற்பத்தி செய்யப்பட்டது. நிலக்கரி மூலம் 2 மணி நேரத்திற்குப் பிறகு என்ஜின் சூடேறி என்ஜினின் இயக்கத்திற்கு உதவியது.
தற்போது நமது இந்திய ரயில் சேவையில் டீசலைக் கொண்டு இயக்கப்படும் ரயில்களும், மின்சார ரயில்களும் அதிகரித்து விட்டதால் ரயில் நிலையங்களிலுள்ள தண்ணீர்த் தொட்டிகள் பயன்பாடில்லாமல் உள்ளன.
1897ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயிலுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை (46 கி.மீ.) கல்லார், அடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு, காட்டேரி, குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. தொடக்க காலத்தில் மலை ரயில் பாதையிலிருந்த 11 ரயில் நிலையங்களிலும் நீராவி என்ஜினுக்குத் தேவையான தண்ணீரை வழங்க தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அடர்லி ரயில் நிலையத்தில் மட்டும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து அந்த நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும். இங்கு பிரச்னை என்னவென்றால் கோடைக்காலத்தில் காட்டு யானைகள் வந்து இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடித்து விட்டு சென்றுவிட்டால் ரயில் என்ஜினுக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதுதான்.
அடர்லி-ஹில்குரோவ் இடையேயும், ரன்னிமேட்டிலும் தலா 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டிகள் உள்ளன. குன்னூர் ரயில் நிலையத்தில் 7,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர்த் தொட்டிகள் உள்ளன. அருவங்காடு-கேத்தி இடையே 6,800 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியும், உதகை ரயில் நிலையத்தில் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர்த் தொட்டிகளும் உள்ளன. தற்போது உதகை-குன்னூர் இடையிலான ரயில் சேவை டீசல் மயமாக்கப்பட்டு விட்டதால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலான மலை ரயில் சேவைக்கு மட்டும் தண்ணீர் மிக அவசியமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மலை ரயில் பாரம்பரியமிக்க ரயிலாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ரயிலுக்குப் பெருமை. அதேபோல, நூறாண்டுகளைக் கடந்தும் இந்த மலை ரயிலின் என்ஜின்களுக்குத் தண்ணீர் ஊற்றும் சேவையைத் தொடர்ந்து செய்து வரும் இந்தத் தண்ணீர்த் தொட்டிகளும் பெருமைப்படத்தக்கவையே. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு இன்னமும் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தத் தண்ணீர்த் தொட்டிகள் மலை ரயிலின் இயக்கம் உள்ளவரை அதன் பெருமையை பறைசாற்றிக்கொண்டே இருக்கும் எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.