தங்கப் பாப்பா மீன்!

கடலில் வாழும் பல வகையான வண்ண மீன் வகைகளில் குழந்தைகளை அதிகம் கவரும் தங்க நிறமுடைய மீன்கள் என்பதால் இவ்வினத்திற்கு தங்கப்பாப்பா மீன் என்றும் சிலர் செண்பக மீன் என்றும் சொல்கின்றார்கள். இது குறித்து பரங்
தங்கப் பாப்பா மீன்!
Published on
Updated on
1 min read

கடலில் வாழும் பல வகையான வண்ண மீன் வகைகளில் குழந்தைகளை அதிகம் கவரும் தங்க நிறமுடைய மீன்கள் என்பதால் இவ்வினத்திற்கு தங்கப்பாப்பா மீன் என்றும் சிலர் செண்பக மீன் என்றும் சொல்கின்றார்கள். இது குறித்து பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சியாளர் டாக்டர்.ஆர்.சரவணன் கூறியது..

""ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் பவளப்பாறைகளிலும், கடல் பாசிகளுக்கு இடையிலும் வாழும் மீன்கள் தங்கப்பாப்பா மீன்கள். கடலில் வாழும் வண்ண மீன் வகைகளில் உலக அளவில் 1038 வகைகள் இருந்தாலும் இவ்வினம் உலக வணிகத்தில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

பார்ப்பதற்கு மிக அழகாகவும் ,வண்ண மீன் தொட்டிகளில் வளர்ப்பதற்கு ஏற்றதாக நல்ல சிகப்பு நிறத்திலும் ,தங்க நிறத்திலும் காணப்படுகின்றன. இவற்றை வண்ண மீன் வளர்ப்புக்குப் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர்.

சின்னஞ்சிறு புழுக்கள், இறால்கள், சிறு நண்டுகள், மீன் குஞ்சுகள் மற்றும் அதன் முட்டைகள் ஆகியன இவற்றின் விருப்ப உணவு.

இம்மீன்களின் இனப்பெருக்கம் மற்ற மீன்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானதாகவும் உள்ளது. இனப்பெருக்க காலத்தில் பெண் மீன்கள் ஆண் மீன்களைக் கவரும் வகையில் தனது உடம்பில் உள்ள நிறத்தை மாற்றிக் கொண்டு மேலும்,கீழும், பக்கவாட்டிலும் நீந்தியும், நடனமாடியும் கவருகின்றன. இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் மீன் இட்ட முட்டைகளை ஆண் மீன் தனது வாயில் கவ்விக் கொள்ளும். முட்டையை விட்டு குஞ்சுகள் வெளியேறும் வரை ஆண் மீன் அதனை தன் வாயிலேயே பத்திரமாக பாதுகாக்கும்.

சுமார் 5 முதல் 8 நாட்கள் வரை முட்டைகளை ஆண் மீன்கள் வாயிலேயே வைத்திருப்பதால் அந்த நாட்களில் மட்டும் ஆண் மீன்கள் எந்த உணவும் சாப்பிடுவதில்லை. ஆனால் தனது வாயில் உள்ள முட்டைகளில் குறைந்தது 2 முதல் 5 முட்டைகள் வரை விழுங்கி விடுகின்றன.

இனப்பெருக்க காலங்களில் ஒரு மீன் 2000 முதல் 3000 முட்டைகள் வரையிட்டாலும் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளால் மீன் பிடிக்கும்போது இவை அதிக அளவில்  பிடிபடுவதால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் கடல் வாழ் வண்ண மீன்கள் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக இவ்வினத்தின் குஞ்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அதன் வாழ்விடங்களில் கொண்டு போய் விடப்பட்டு வருகிறது.

பொதுவாக பறவைகளோ அல்லது மீன் வகைகளோ பெரும்பாலும் இரவு நேரத்தில் அதன் இருப்பிடங்களுக்கு சென்றுவிடுவது வழக்கம். ஆனால் இந்த மீனோ இரவில் மட்டும் தனது இருப்பிடத்தைவிட்டு வெளியே வந்து, பிறகு பகலில் தனது இருப்பிடத்திற்கு சென்றுவிடும்.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com