

நீலகிரி மலையில் காணப்படும் சுமார் 3,000 வகையான பூக்கும் தாவரங்களில் 1,500க்கும் மேற்பட்டவை மருத்துவ குணம் வாய்ந்த அற்புத மூலிகைகள்'' என்கிறார் உதகையை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ்.ராஜன்.
நீலகிரி மலையில் பழங்குடியினரின் மருத்துவ மூலிகைகள் என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டுள்ள இவர் தாவரவியல் ஆராய்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். தற்போது உதகையிலுள்ள மத்திய ஓமியோபதி ஆய்வு சேகரிப்பு கூடத்தில் தாவரவியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவரது புதிய புத்தகம் தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து டாக்டர் எஸ்.ராஜனை நாம் சந்தித்தபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
""பழங்கால மனிதர்கள் பல்வேறு நோய்களுடன் போராட வேண்டியிருந்த சூழலில் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டியதன் அவசியமும் உருவாக்கியது. இதன் காரணமாகவே மூலிகைகளை மருந்தாகவே பயன்படுத்தினர். இதனாலேயே தற்போது உலகில் நாம் பயன்படுத்தும் முக்கியமான மருந்துகள் உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பழங்குடியினர் பயன்படுத்திவரும் மூலிகைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவையேயாகும்.
இந்தியாவின் பழங்கால மருத்துவமுறைகள் குறித்து கி.மு. 4500-1200 வரையான கால கட்டத்தில் ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பழங்கால மருத்துவ முறை கடந்த 16-ம் நூற்றாண்டிலிருந்து போர்ச்சுக்கீசியரால் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதன் விபரங்கள் கடந்த 1563-ம் ஆண்டிலிருந்து புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டன. 1693-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கார்டஸ் மலபாரிக்கஸ் என்ற புத்தகத்தின் 12 வால்யூம்களும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போதும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் மூலிகை மருத்துவத்தையே நம்பியுள்ளதாகவும், இத்தகைய பழங்கால மருத்துவம் எத்தகைய வரைமுறையிலும் இல்லாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் 618 வகைகளில் 76 பிரிவுகளைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் தமிழகத்திலுள்ள 38 வகையான பழங்குடியினரில் 6 பிரிவினர் நீலகிரியில் வசிக்கின்றனர். இதற்கு இம்மலை மாவட்டத்தில் நிலவும் வெப்ப,மித வெப்ப மற்றும் குளிர் பிரதேசம் ஆகிய 3 வகையான காலநிலைகளே காரணமாகும்.
பழங்கால மருத்துவ முறை மந்திரம், மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் மருந்து ஆகிய மூன்று தத்துவங்களை உள்ளடக்கியதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள பழங்குடியினரின் மருத்துவ முறைகளைக் குறித்த இப்புத்தகத்தில் இருளர் மற்றும் பணியர் ஆகிய இரு பழங்குடியினரின் மருத்துவ முறைகளைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 227 மருத்துவ மூலிகைகளின் மருத்துவ குணங்களைக் குறித்து இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இருளர்கள் 168 வகையான மூலிகைகளை 216 வகையான நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். பணியர்கள் 89 வகையான மூலிகைகளை 121 வகையான நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மருத்துவ குணம் கொண்டவையாக பாம்புக்கடிக்கு விஷ முறிவாக 10 வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்துமா மற்றும் அலர்ஜி தொடர்பான நோய்களுக்கு 3 வகையான மூலிகைகளையும், மனித குலத்திற்கே உரிய சாதாரண நோய்களான சளி, இருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு 48 வகையான மூலிகைகளை பயன்படுத்துகின்றனர்.
மூலிகைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் குனைன் மற்றும் ஆர்ட்டிமிசினின் ஆகியவை மலேரியா காய்ச்சலைக் குணமாக்குவதற்கும் எபிடிரின், அட்ரோபின் போன்றவை மயக்க மருந்துகளாகவும் கொக்கைன் ஊக்க மருந்தாகவும் டிஜாக்சின் இருதய நோய் தொடர்பாகவும் ரிசர்பைன் இரத்த அழுத்த நோய்க்கும் முக்கிய மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றையெல்லாம்விட நீலகிரி மலையிலுள்ள பழங்குடியின மக்கள் தங்களது குடும்ப கட்டுப்பாட்டிற்காக தாங்களாகவே பல்வேறு வகையான மூலிகை மருந்துகளை உட்கொண்டு எவ்வகையான பக்க விளைவுகளும் இல்லாமலேயே பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்தப் பழங்கால மருத்துவ முறை மற்றும் மருத்துவ மூலிகைகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பயன்படுத்தலாம்.
அழிந்துவரும் நிலையிலுள்ள இந்தப் பழங்குடியின மருத்துவ முறைகளைப் பாதுகாத்து அவற்றைப் பயன்படுத்தி மீண்டும் உபயோகப்படுத்த வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆங்கில மருத்துவ முறையில் உட்கொள்ளும் மருந்துகளால் அதிகளவில் பக்க விளைவுகளும் ஏற்படுவதாகவும், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் மிகக்குறைவு எனவும், அதனால் மக்கள் சாதாரண நோய்களுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்தி தங்களது உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளலாம்'' என டாக்டர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.
-ஏ.பேட்ரிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.