

"சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
என்னத்த சொல்லுதம்மா?' இது திரைப்படப் பாடல்தான். ஆனால், அந்தப் பறவை சொல்வதில் பல்வேறு
செய்திகள் உள்ளன என்பதுதான் உண்மை.
பறவைகளை நாம் பார்த்திருக்கிறோம்.
பறவைகள் இனிய குரலால் ஒலியெழுப்புவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், பாடும் பறவையைப் பார்த்ததுண்டா? விசில் அடிக்கும் பறவையைக் குறித்து
கேள்விப்பட்டதுண்டா? இவையெல்லாம் நிஜம்தான். இவை இருப்பது நீலகிரி மாவட்டத்தில்தான்.
இந்தியாவில் சுமார் 1,250 வகையிலான பறவைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 263 வகைகளிலான பறவைகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அப்படியே பார்த்திருந்தாலும் அவற்றின் வண்ணங்களைக் கண்டு மகிழ்ந்திருப்போம். ஆனால், இவையெல்லாவற்றையும் குறித்து ஆய்வும் நடத்தி புத்தகமாகவும் தொகுத்திருக்கிறார் உதகையிலுள்ள அரசு மருத்துவத்துறை துணை இயக்குநர் டாக்டர் பி.ஜே.வசந்தன். இவரிடம் பேசியபோது, பறவைகளைக் குறித்து இவ்வளவு தகவல்கள் இருக்கிறதா என்ற வியப்பே மேலிட்டது.
""சென்னையை சேர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே பறவைகள் மீது ஆர்வமிருந்தது. அத்துடன் பறவைகளைக் குறித்து சலீம் அலி எழுதியிருந்த புத்தகங்களை படித்தும் அவற்றின் மீதான ஆர்வம் அதிகரித்தது. பின்னர் மருத்துவர் படிப்பு முடிந்து நீலகிரி மாவட்டத்தில் பணிக்காகச் சேர்ந்ததிலிருந்து கடந்த 19 வருடங்களாகப் பறவைகளைக் குறித்து ஆய்வு நடத்தி தற்போது அவற்றைப் புத்தகமாகத் தொகுக்குமளவுக்கு வந்துள்ளேன்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 263 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மரப்புறா, நீல வண்ண இறக்கை கிளி, மலபார் சாம்பல் நிற இருவாச்சி, நீலகிரி பிப்பெட், மஞ்சள் நிற தொண்டையுடைய கொண்டலாத்தி, மலபார் இருவாச்சி போன்றவை நீலகிரி மாவட்டத்திற்கே உரித்தானவையாகும். இவை 61 குடும்பங்களைச் சேர்ந்தவையாகும்.
167 வகையின மரபணுக்களை கொண்டவை என்பதோடு இவற்றில் 44 வகைகள் மட்டுமே இடப்பெயர்ச்சி செய்யும் இனங்களாகும். நீலகிரி மாவட்டத்தில் சோலைக்காடுகள், பரந்த இயற்கை புல்வெளிகள், நிழலும், வெப்பமும் இருக்கக்கூடிய பகுதிகள், வெயிலும், ஈரமும் மிக்க சதுப்பு நிலப்பகுதிகள் என நான்கு வகைகளில் பறவைகள் வாழ்கின்றன. அதைவிட வறண்ட பகுதிகளில் பிணந்தின்னிக் கழுகு வகைகளும் இம்மாவட்டத்தில் உள்ளன. வெள்ளை முதுகு கழுகு, செந்தலை கழுகு, நீள அலகு கழுகு மற்றும் எகிப்திய கழுகு ஆகியவையாகும். இவை சீகூர் மற்றும் மாயார் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன.
இம்மாவட்டத்திலுள்ள பறவைகளோடு மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இமயமலைப் பகுதிகளிலிருந்தும் பறவைகள் இடப் பெயர்ச்சிக்காக நீலகிரிக்கு வருகின்றன. இவை செப்டம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையே இங்கிருக்கும். பொதுவாக அவை வசிக்கும் பகுதிகளிலிருந்து உணவுக்காகவும் தட்ப வெப்ப நிலைக்காகவுமே வருகின்றன.
இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். உண்மையாக இடம் பெயர்ந்து வருபவை, உள்ளூரிலிருந்து இடம் பெயர்பவை, உயர்ந்த பகுதிகளிலிருந்து தாழ்வான பகுதிகளுக்கும், தாழ்வான பகுதிகளிலிருந்து உயரமான பகுதிகளுக்கும் இடம் பெயர்பவை என உள்ளன. பொதுவாக இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளில் பெரும்பாலானவை புதிய இடங்களில் இனப்பெருக்கம் செய்வதில்லை.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக 1,000 மீ. உயரம் குறைவான பகுதிகளிலிருந்த பறவைகள் தற்போது 1,000 மீ. உயரம் வரை கூடுதலாக இடப்பெயர்ச்சி செய்கின்றன. பருவநிலை மாற்றத்தால் நீலகிரியில் இடப்பெயர்சிச்காக வரும் பறவைகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் சதுப்பு நிலப்பரப்பு குறைந்ததும், யூகலிப்டஸ் போன்ற பயனற்ற மரங்களும், வனப்பகுதிகளில் தேவையில்லாமல் வளர்ந்துள்ள முட்செடிகள் போன்றவையும் பறவைகளுக்கு எதிரியாக உள்ளன.
விவசாயிகளுக்கும் பறவைகள் தோழர்களாகவே உள்ளன. இயற்கையாகவே இவை புழு, பூச்சிகளை அழிப்பதால் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை. இதற்காகவே கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் பறவைகளுக்காக ஆங்காங்கே கூடுகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
அதைவிட பறவைகள் மிக இனிமையாக பாடக்கூடியவை. குறிப்பாக நீலகிரி பிளாக் பேர்டு என்ற பறவை மிக இனிமையாகப் பாடும் தன்மை கொண்டது. அதேபோல சிரிக்கும் சிட்டு குழந்தைகள் சிரிப்பதைப்போலவே ஒலியெழுப்பும். பிரெய்ன் பீவர் எனப்படும் பறவை ஒலியெழுப்பினால் அந்த ஒலி பிரெய்ன் பீவர், பிரெய்ன் பீவர் என்ற வார்த்தைகளை உச்சரிப்பதைப் போலவே இருக்கும்.
ஸ்பாட்டட் பேபிள்ஸ் எனப்படும் பறவை ஒலியெழுப்புகையில் பீட்-யூ, பீட்-யூ என்பதைப்போல இருக்கும். ராபின் என்ற பறவை இனப்பெருக்க காலத்தில் மிக நீண்ட பாடலையே பாடும். இவையெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பறவைகள் வெறுமனே ஒலியெழுப்புவதில்லை. தான் இருக்குமிடத்தை தன் இனத்திற்கு அறிவிக்கவும், தங்கள் கூட்டத்தில் சிலவற்றைக் காணாவிட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்து காலங்களில் அபாயத்தை அறிவிப்பதற்கும் விதவிதமாய் ஒலியெழுப்பு
கின்றன.
பறவைகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடும்போது மனம் தெளிவாகிறது. கண் பார்வை கூர்மையாகிறது. நுட்பமான சப்தங்களையும்கூட நம்மால் கேட்க முடியும். அதையெல்லாம் விட பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள முடியும். இயற்கையை நேசிக்கும் மனப்பான்மைஏற்படும்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படும் புறா வகைகளில் எமரால்டு டவ் எனப்படும் மரகதப்புறா தமிழகத்தின் மாநில பறவை என்ற விபரம் பலருக்கும் தெரியாது. இது இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இத்தகைய பறவைகளைப் பாதுகாக்க வீட்டுக்கு அருகில் சிறிய செடிகளை வளர்க்கலாம்.
தினந்தோறும் அவற்றிற்கு தானியங்களை அளிக்கலாம். தண்ணீர் வைக்கலாம், இவையெல்லாம் நமது மனதிற்கும் ஆறுதல் அளிக்கும் விஷயங்களே'' என்றார் டாக்டர் வசந்தன்.
பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால், அவற்றைக் குறித்து நாம் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும்போது நமது மனதில் ஏற்படும் மகிழ்ச்சி தனி விதமே என்பதில்
ஐயமேயில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.