மூன்று தடவைகளுக்கு மேல் முகம் கழுவக் கூடாது!

வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே தலைகாட்டியதுமே, தலையில் தீப்பற்றி எரிவதைப் போன்ற உணர்ச்சி. முகத்திலும், காதிலும் சூடிழுத்துச் செல்லும் தீக்காற்று. பொங்கிப் பெருகி வழியும் வியர்வை.... உஸ்... என்ன வெயில்..
மூன்று தடவைகளுக்கு மேல் முகம் கழுவக் கூடாது!
Updated on
2 min read

வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே தலைகாட்டியதுமே, தலையில் தீப்பற்றி எரிவதைப் போன்ற உணர்ச்சி. முகத்திலும், காதிலும் சூடிழுத்துச் செல்லும் தீக்காற்று. பொங்கிப் பெருகி வழியும் வியர்வை.... உஸ்... என்ன வெயில்... என்ன வெயில்... என்று சலித்துக் கொள்பவர்கள் அதிகம்.

""என்னதான் சபித்தாலும் வெயிலை ஒன்றுமே செய்ய முடியாது. நாம்தான் வெயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தோல் சிகிச்சை நிபுணர் - மருத்துவர் ப்ரியா ராமனாதன். தொடர்ந்து,

""இப்போது தோல் பராமரிப்பு பற்றி நிறைய விளம்பரங்கள் வருகின்றன.

இந்த சன்ஸ்கீரினைப் பயன்படுத்துங்கள், இந்த மாய்ட்ஸரைஸரைப் பயன்படுத்துங்கள், இந்த டோனர் உங்களுக்கு நல்லது'' என்று நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் அவர்கள் சொல்லும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுடைய சருமம் என்ன வகையானது? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

 பொதுவாக மனிதர்களின் சருமத்தை வறண்ட சருமம், எண்ணெய் வழியும் சருமம், இரண்டும் கலந்து சருமம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். உங்களுக்கு என்ன வகையான சருமம் உள்ளது? என்பதைப் பொறுத்தே நீங்கள் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

 இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக வெயிலிலிருந்து உங்களை இயற்கையான வழிமுறைகளில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது உங்களுடைய முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தலையில் தொப்பி அணியலாம். குடை பிடித்துச் செல்லலாம். உடம்பை முழுவதும் மறைக்கும்விதமாக ஆடைகளை உடுத்திக் கொள்ளலாம். ஆடைகள் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இப்படிச் செய்தாலேயே வெயிலிருந்து உங்களுடைய சருமத்தை ஓரளவு பாதுகாக்க

முடியும்.

வெயில் நமது தோலில் நேரடியாகப்பட்டால் தோல் கறுத்துப் போகும். வியர்வை பெருகி அழுக்குச் சேரும். அரிப்பு உட்பட பல தோல் வியாதிகள் ஏற்படும். வெயிலால் தோல் எரிந்து போகும். முதலில் எல்லாம் வெள்ளைக்காரர்களுக்குத்தான் ஸன்பர்ன் ஏற்படும். அவர்களுடைய தோலின் தன்மை அப்படி. நாம் வெப்ப நாட்டில் வாழ்கிறோம். நமக்கு வெயிலால் தோல் எரிந்து போகக் கூடாது. ஆனால் இப்போது நம்நாட்டில்  உள்ளவர்களுக்கும் ஸன்பர்ன் ஏற்பட்டுவிடுகிறது.

சன்ஸ்கீரினை வெயில்படும் இடங்களில் தடவுவதற்கு முன்பு எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் முதலில் பேஷ் வாஷ் செய்ய வேண்டும். அந்த பேஷ் வாஷ் ஆயில் கண்ட்ரோல் பேஷ்வாஷாக இருக்க வேண்டும்.  அதற்குப் பின்பு டோனரைப் பயன்படுத்த வேண்டும். அது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துவிடும். இறுதியாக சன்ஸ்கீரினைப் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் டோனருக்குப் பதிலாக மாய்ட்ஸரைஸரைப் பயன்படுத்த வேண்டும். வறண்ட மற்றும் எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் சன்ஸ்கிரீனை மட்டும் தடவினால் போதும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வெளியே கிளம்புவதற்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்கிரீனைத் தடவ வேண்டும். அப்போதுதான் அது சருமத்தைப் பாதுகாக்கும். சன்ஸ்கிரீன் தடவியவுடன் வெளியே கிளம்பினால் உடனே வியர்த்து, சன்ஸ்கிரீன் கரைந்து வந்து விடும். சன் ஸ்கிரீன் அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தோலுக்குப் பாதுகாப்புத் தரும். அதற்குப் பின் திரும்பவும் போட வேண்டும். ஆனால் அப்படி அடிக்கடி எல்லாராலும் போட முடியாது.

வெயில் காலத்தில் சிலர் அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவுவார்கள். அப்படிக் கழுவினால் முகத்தில் உள்ள நீர்ப்பசை போய்விடும். எனவே 3 தடவைகளுக்கு மேல் முகம் கழுவக் கூடாது.

ஒவ்வொருவரும் தங்களுடைய சருமத்திற்கேற்ற சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ட்ஸரைஸ் சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

தோல் பராமரிப்புக்காக  அதிகம் செலவு செய்ய முடியாதவர்கள் விலை மலிவான சன்ஸ்கிரீன், சோப்புகளைப் பயன்படுத்தலாம்.

கோடைக்காலத்தில் இரண்டுமுறை குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிக்கக் கூடாது. குளிர்ந்த நீரில் குளிக்க முடியாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். பவுடர் பூசிக் கொண்டால் அரிப்பு ஏற்படாது.

 நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது ஒரு நாளைக்கு அருந்த வேண்டும். கூடுதலாக பழச்சாறு, மோர், இளநீர் குடிக்க வேண்டும்.

கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருநாளும் கீரை இல்லாமல் சாப்பிடக் கூடாது. வெயில், மழை, பனி, குளிர் எல்லாம் இயற்கையான நிகழ்வுகள். மனிதன் இயற்கையின் ஒருபகுதி. எனவே இவற்றைத் தாங்கும் திறன் மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கேற்ப உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வெயில்,பனி, மழை போன்றவை எல்லாம் நம் உடலில் பட வேண்டும் அல்லவா? என்று சிலர் கேட்பார்கள்.

மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்றாலும் இன்று இயற்கை, இயற்கையாக இல்லை. புவிவெப்பமடைதல் நிகழ்வு, சுற்றுச் சூழல் சீர்கேடு இயற்கையைக் கெடுத்துவிட்டிருக்கிறது. அதுபோல நாம் சாப்பிடும் உணவு வகைகள் எல்லாம் ரசாயன  உரங்களால், பூச்சிக் கொல்லி மருந்துகளால் உருவாக்கப்பட்டவை. நாம் சத்தான உணவுகளைத் தவிர்த்துவிட்டு, உடலுக்குத் தீங்கு தரக்கூடிய உணவுகளை உண்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே இக்காலத்தில் இயற்கையிலிருந்து மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது'' என்றார் ப்ரியா ராமனாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com