

ஒரு கவிஞன் Rose is a rose, is a rose, is a ros என்று வர்ணிக்கும் அளவுக்கு மலர்களிலேயே தனியிடம் ரோஜாவுக்கு உண்டு. அதனால்தான் மலர்களின் ராணியாக ரோஜா கொண்டாடப்படுகின்றது.
அக்னி நட்சத்திரத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ள உதகையில் ஆண்டுக்கு சுமார் 24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். மே மாதம் என்றாலே சுற்றுலாப் பயணிகளுக்குக் கொண்டாட்டம்தான். இதன் காரணமாகவே மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.
இதில் முதல் நிகழ்ச்சியாக கடந்த வாரம் நடைபெற்ற ரோஜா கண்காட்சியை சுமார் 40,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்துள்ளனர். இவ்வாண்டுக்கான ரோஜா கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தோடு கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கொடைக்கானல், மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களின் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மலைகளின் ராணியான உதகையில் மலர்களின் ராணியான ரோஜாவுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சி அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.
ரோஜா, "ரோசேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். மனிதன் தோன்றுவதற்கு முன்னரே உலகத்தில் சுமார் 4 கோடி வருடங்களுக்கு முன்னர் ரோஜா தோன்றி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியர்களுக்காக சீனாவில் ரோஜா பயிர் செய்யப்பட்டதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ரோமானியர்கள் தங்கள் அழகின் கடவுளாகிய வீனஸýக்கும், காதலின் கடவுளாகிய கியூபிட்டுக்கும் ரோஜா மலரை அர்ப்பணித்து மகிழ்ந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் தங்களின் விடியல் கடவுளாகிய அரோராவிற்கும், அமைதிக் கடவுளாகிய ஹார்போகிரேட்சுக்கும் அன்று மலர்ந்த ரோஜா மலர்களை அர்ப்பணித்ததாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
அரசு விருந்துகளின்போது ரோஜா இதழ்களைத் தூவி ரோமானியர்கள் மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ரோமானியர்களின் இத்தகைய செயல்களே தற்போதும் பிப்ரவரி 14ம்தேதி காதலர் தினத்தில் சிவப்பு ரோஜாக்கள் மிக அதிகளவில் விற்பனையாவதற்குக் காரணமெனவும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதன் தோன்றியதிலிருந்து ரோஜாவுடன் கொஞ்சிக் குலாவியிருந்தாலும், 19ம் நூற்றாண்டில்தான் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் திடமான ஐரோப்பிய வகைகளையும், எப்போதும் மலரும் மென்மையான ஆசிய வகைகளையும் ஒட்டு சேர்த்து புதுப்புது ரகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகைகளில் உருவான ரோஜாக்கள்தான் தற்போது புளோரிபண்டா, கிராண்டிபுளோரா, கிளைம்பர், மினியேச்சர், பாலியான்தஸ் என்ற பல வகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ரோஜாக்களின் இந்த முக்கியத்துவத்தின் காரணமாகவே உதகையில் பிரத்யேகமாக ரோஜாப் பூங்கா கடந்த 1995ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்த ரோஜாப் பூங்கா குறித்து பெங்களூருவைச் சேர்ந்த ரோஜா உற்பத்தியாளர் கே.ஸ்ரீராம் மற்றும் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஜே.ஹால்துரை ஆகியோர் தெரிவித்த தகவல்களாவன:
தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக
அளவிலான ரோஜா ரகங்களைக் கொண்ட உதகை அரசினர் ரோஜாப் பூங்காவில் தற்போது சுமார் 3,000 ரகங்களில் 25,000க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.
இவற்றில் நேராக நிமிர்ந்து வளரும் ரோஜா, பூமியில் படர்ந்து வளரும் ரோஜா, உயிர் வேலியாகவும், சுவர்களை மறைக்கும் வகையிலான ரோஜா, நிலத்திலிருந்து சில அங்குல உயரத்திற்கே வளரும் ரோஜா, 45 அடி உயரத்திற்கும் மேல் வளரும் ரோஜா, கொத்தாக மலரும் ரோஜா, பெரிய மலர்களைத் தரும் ரோஜா, மணமில்லாத ரோஜா, முள்ளில்லா ரோஜா ஆகியவற்றோடு பழங்கள், தேன் மற்றும் வாசனை திரவியங்களின் மணத்தைக் கொண்ட ரோஜா எனப் பல ரகங்களிலான ரோஜாக்கள் உள்ளன. பச்சை நிற ரோஜாகூட இந்த பூங்காவில் உள்ளது.
இவ்வளவு பெருமைகளைக் கொண்ட உதகை அரசினர் ரோஜாப் பூங்காவில் நடப்பாண்டின் ரோஜாக் காட்சியில் பல்லாயிரக்கணக்கான ரோஜா மலர்களைக் கொண்டு டயனோசர், டால்பின், மயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்றவற்றின் மாதிரிகள் அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தன.
அக்னி நட்சத்திரத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு உதகையில் தற்போது நிலவும் கால நிலையும், ஒரே இடத்தில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான ரோஜா ரகங்களைப் பார்த்து மகிழ்ந்த தெம்பும், பெருமிதமும் ஏற்பட்டுள்ளன. அதனாலேயே இப்பூங்காவையும், அதன் பராமரிப்பையும் மனதாரப் பாராட்டினார்கள் என்றால் அது மிகையாகாது. அதனால், இந்த ரோஜாப் பூங்காவைப் பாதுகாப்பது உதகை மக்களிடத்தில் மட்டுமல்ல. உலகெங்குமுள்ள சுற்றுலாப் பயணிகளின் கையிலும் உள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.