கற்பனைதந்தபரிசு!

கும்... கும்.... என்று அதிரும் ஸ்பீக்கர்கள். நடைமேடையில் தளிர் நடை போட்டு வந்த குழந்தைகள்... ஒய்யாரமாக பூனை நடை நடந்து வந்த அழகான பெண்கள். கம்பீரமான தோற்றத்துடன் வளையவந்த ஆண்கள் எனப் பலரும் பார்ப்பவர்
கற்பனைதந்தபரிசு!
Updated on
2 min read

கும்... கும்.... என்று அதிரும் ஸ்பீக்கர்கள். நடைமேடையில் தளிர் நடை போட்டு வந்த குழந்தைகள்... ஒய்யாரமாக பூனை நடை நடந்து வந்த அழகான பெண்கள். கம்பீரமான தோற்றத்துடன் வளையவந்த ஆண்கள் எனப் பலரும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தினர். அவர்களின் அழகையும் மீறி அவர்களின் கைகளிலும், தோள்களிலும், கால்களிலும், அவர்கள் அணிந்திருந்த உடைகளிலும் மாணவர்களின் கற்பனைத் திறமையும், கைவினைத் திறமையுமே பார்ப்பவர்களின் கண்களைக் கவர்ந்தன.

"நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி'யில் இந்தாண்டு "ஃபேஷன் அண்ட் லைஃப் ஸ்டைல் அக்சசரிஸ்' துறையில் பட்டம் பெற்ற 22 மாணவர்கள் பல முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி தோலினாலான ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் செருப்புகள், ஷுக்கள், பெல்ட்கள், தோள் பைகள், பர்ஸ்கள் போன்றவற்றை புதிய புதிய டிசைன்களில் வடிவமைத்திருந்தனர். இந்தப் பொருள்களை அறிமுகப்படுத்தும் விழாவில்தான் மேற்படி காட்சிகள் சென்னை, தரமணியில் இருக்கும் நிஃப்ட் வளாகத்தின் அரங்கத்தில் அரங்கேறின.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.தேவதாஸ் மாணவர்களின் திறமையை வியந்து போற்றினார். மாணவர்களில் ஸ்ரீஷ்மா ஸ்ரீதரன் சிறந்த படைப்புத் திறமைக்கான பரிசைப் பெற்றார். ""என்னுடைய கற்பனைகளை நிஜத்தில் கொண்டுவந்தேன் அதற்குத்தான் இந்தப் பரிசு கிடைத்திருக்கிறது...'' என்றார் ஸ்ரீஷ்மா!

நிஃப்ட் கல்லூரிக்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எண்ணற்ற மாடல்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தியிருக்கும் மாடல் கோரியோகிராஃபர் டாலுவிடம் இந்தத் துறைக்கு நீங்கள் வந்தீர்கள். எப்படி முன்னணி மாடல் கோரியோகிராஃபர் என்னும் நிலைக்கு உயர்ந்தீர்கள் என்று கேட்டோம்.

""டாலு என்னும் என்னுடைய பெயருக்கே "கார்னேஷன்' முடிசூட்டுதல் என்று அர்த்தம். ஆனால் நான் எந்தத் துறை சார்பாக முடிசூட்டப்படப் போகிறேன் என்ற தெளிவு இல்லாமலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தேன். சிங்கப்பூரில் ஒரு ஹோட்டலில் சிறிது காலம் பணியாற்றினேன். இரண்டு வருடங்களுக்குப் பின் இந்தியாவிற்குத் திரும்பிய நான் பெங்களூரில் ஐ.ஐ.எஃப்.டி.யில் ஃபேஷன் டெக்னாலஜி இரண்டு வருடங்கள் படித்தேன். அதன்பின் சென்னைக்கு வந்தேன். பெரிதாக எனக்கு மாடல் உலகத்தில் ஏதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தேன். அது 1999-ம் வருடம். அன்றைக்கு மாடல் கோரியோகிராபர்களாக புகழின் உச்சியில் இருந்தவர்கள் சுனில், அஸ்ரானி, அஜித் மேனன் ஆகியோர்.

இந்தச் சமயத்தில்தான் ஒரு நண்பருக்காக 1900, 1950, 2000 ஆகிய வருடங்களில் ஃபேஷன் உலகத்தை கண்முன் நிறுத்தும் ஒரு ஷோவிற்கு மாடல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினேன். இந்த ஷோ மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.

தென்னிந்திய அழகிகளைத் தேர்வு செய்யும் மிஸ்.சவுத் இந்தியா போட்டிகளை 2003-லிருந்து நான் மாடல் கோரியோகிராஃபராக இருந்து நடத்திவருகிறேன். எல்லாத் துறைக்கும் இருப்பது போன்று இந்தத் துறைக்கும் சில தனிப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. அதை மாடலாக விரும்பும் பெண்களுக்கு அறிவுறுத்துவது எங்களின் பணி.

தனிப்பட்ட ராம்ப் ஷோவிற்கும், ஒரு பொருளை அறிமுகப்படுத்துவதற்காக மாடலிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஏதோ அழகாக இருக்கும் ஒரு பெண் ஒரு பொருளை கையிலேந்தி இப்படியும் அப்படியும் நடப்பதல்ல மாடலிங்.

அழகு, கம்பீரம் போன்றவையோடு தன்னம்பிக்கை, உடல் மொழி, முக பாவனை, பலவிதமான நடைகள், எப்படி நிற்பது, எப்படி திரும்ப வேண்டும்... என்று ஏகப்பட்ட கணக்குகள் இந்தத் துறையிலும் இருக்கிறது.

படைப்பாளிகளின் கற்பனைகளை அரங்கத்தில் இருப்பவர்களின் முன் நிஜமாகப் பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல மாடலின் பணி.  இதையெல்லாம் சரியாகச் செய்வதில்தான் ஒரு மாடலின் வெற்றியும் அவரை உருவாக்கும் ஒரு கோரியோகிராபரின் வெற்றியும் அடங்கியிருக்கின்றது. இந்தவகையில் லீனா, ரீனா கலிங்கல், மைக்கேல், லஷ்மி போன்ற பல முன்னணி மாடல்களை உருவாக்கியிருக்கிறேன்.

என்னால் மாடலிங் துறைக்கு அறிமுகமான அமலா பால் போன்றோர் திரைத் துறையிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா தொழிலையும் போன்றே தனி மனித ஒழுக்கம் இந்தத் துறைக்கும் மிகவும் அவசியமான ஒன்று. முழுக்க முழுக்க தொழில்முறை மாடல்களாக இருப்பவர்களால் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.

மாடலிங் தொழிலின் பாலபாடமும் இதுதான். இதைத் தவறில்லாமல் கற்றுக் கொண்டிருப்பதால்தான் நான் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்'' என்றார் மாடலிங் துறையை முடிசூடிக் கொண்டிருக்கும் டாலு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com