

திரைப்படங்களில் அல்லது நாடகங்களில் ஆண்கள், பெண் வேடமணிந்து நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், புராண காலத்தில் இருந்தே தெய்வத்துக்காக பெண் வேடமணிந்து கூத்து நடத்தும் "கணியான் கூத்து" என்பது நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள காவல் தெய்வங்களின் திருவிழாக்களில் "கணியான் கூத்து'க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். நள்ளிரவில் தொடங்கும் இந்தக் கூத்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும். தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் கூத்து முழுவதையும் மக்கள் பயபக்தியோடு பார்த்துச் செல்வர்.
கணியான் என்ற குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த கலைக் கூத்து இப்போது அழிந்துவரும் கலையாக உள்ளது. இயல், இசை, நாடகம் என மூன்று அம்சங்களையும் தன்னகத்தே கொண்டதுதான் கணியான் கூத்து.
கணியான் ஆட்டம், மகுட ஆட்டம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கூத்தில் மொத்தம் ஏழுபேர் மட்டுமே இடம்பெறுவர். தலைமைப் பாடகர், உதவிப் பாடகர், மகுடம் அடிப்பவர்கள் மூவர், பெண் வேடதாரிகள் இருவர்.
ஏதாவது ஒரு காவல் தெய்வத்தின் கதையை தேர்வு செய்து அதனை பாட்டு, நடனம், நாடகம் என பல அம்சங்களுடன் மக்களுக்கு விருந்தளிப்பதுதான் கணியான் கூத்தின் சிறப்பம்சம்.
சுடலைமாடன் பாட்டு, அம்மன் பாட்டு, காளி கதை, மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம் எனப் பல்வேறு கதைகள் அடிக்கடி நடிக்கப்படுவது உண்டு. திருவிழாக்களில் திரைப்படப் பாடல்களுக்கு அரைகுறை ஆடை ஆடை அணிந்து ஆடப்படும் ஆட்டங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் தங்களது பாரம்பரியக் கலை அழிந்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் கணியான் சமூகத்தினர்.
இதுகுறித்து, திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட கணியான் சமுதாயச் சங்கப் பொருளாளர் பழையபேட்டை முத்துகிருஷ்ணன் நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
""கணியான் கூத்து ஒரு தெய்வீகக் கலை. பல வரைமுறைகளுக்கு உள்பட்டது. கோயில்களில் தெய்வத்தின் எதிர்புறத்தில் மட்டுமே இந்தக் கூத்து நடத்தப்படும். தட்சனின் யாகக் குண்டத்தில் தோன்றிய சுடலைமாடன் வெளியே வர மறுத்ததால், கணியானை உருவாக்கிய சிவன், பின்னர் நடனமாட கற்றுத் தந்து சுடலைமாடனை வெளியே கொண்டு வந்தார் என்பதுதான் கணியான் சமுதாயத்தின் வரலாறு.
காவல் தெய்வங்கள் திருவிழாக்களில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது கணியான் கைவெட்டு மற்றும் நாக்கு வெட்டு நிகழ்ச்சி. 21 நாள் விரதமிருக்கும் கணியான் கூத்துக் கலைஞர்கள் தங்களது கையில் ஒரு சிறிய கீறலை ஏற்படுத்தி அதிலிருந்து வெளியாகும் ரத்தத்தை சாமிக்கு படைத்திருக்கும் 21 படையல்களிலும் ஒவ்வொரு சொட்டாக விடுவர். பின்னர், ரத்தச் சோறு உருண்டையை நான்கு புறமும் எறிவது வழக்கம்.
இந்தக் கூத்தில் ஈடுபடுவோர் அனைவரும் தங்களது முன்னோர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து தானாக ஆடும் திறன் கொண்டவர்கள். யாருமே சொல்லிக் கொடுக்காமல் ஆடும் திறன் கணியான் கூத்துக் கலைஞர்களுக்கு உண்டு.
எங்களது பரம்பரைக் கலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே வருவது வேதனையான விஷயம்தான். இருப்பினும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் படித்தவர்களும் இப்போது கலையை காக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியினர் பிரிவில் வரும் எங்கள் சமூகத்துக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் சிரமம் உள்ளது. எங்களது முன்னோர்கள் பற்றிய விவரத்தை முழுமையாகக் கூறினால்தான் "கணியான்' என ஜாதிச் சான்றிதழ் கிடைக்கிறது.
போதிய படிப்பறிவு இல்லாத எங்கள் சமுதாய மக்களுக்கு இது கொஞ்சம் சிரமமாக உள்ளது. இதைச் சரி செய்தால் போதும். அரசு இசைப் பள்ளிகளில் கணியான் கூத்தை சேர்த்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தால் இந்தக் கலை ஆண்டாண்டு காலத்துக்குப் போற்றப்படும்.
கணியான் கூத்துக் கலைஞர்களுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெறும் கோயில் கொடை விழாக்களைத் தவிர மற்ற நாள்களில் வருமானத்துக்கு வழியில்லை. ஆண்கள் மட்டுமே இந்தக் கலையில் ஈடுபடுவது உண்டு. வேறு தொழில்கள் ஏதும் தெரியாது.
கணியான் சமுதாயப் பெண்கள் பனை மர ஓலைகளைக் கொண்டு சிறிய பெட்டிகளை முடைவர். மற்றும் பீடி சுற்றும் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.
நாங்கள் திருமணத்தின்போது வரதட்சிணை கொடுப்பது கிடையாது. குறைந்த அளவு உள்ள சமுதாயத்தினர் என்பதால், சொந்தத்துக்குள் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
கணியான் கூத்துக் கலைஞரான "மூன்றடைப்பு' ராமசுப்புக்கு மட்டுமே இதுவரை கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் நிறையக் கலைஞர்கள் இந்தக் கூத்துக்காக தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து கலைமாமணி விருது
வழங்கப்பட வேண்டும்.
கணியான் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பிற சமூகத்தினரும் கணியான் கூத்து மீது ஆர்வம் காட்டுகின்றனர். ஆர்வம் உள்ள இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றார் முத்துகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.