9 மாதம் முதல் 9 வயது வரை!

வீட்டுக்காவலுக்கு நாய் வளர்த்தார்கள். அழகுக்காக நாய் வளர்த்தார்கள். வாக்கிங் போகும்போது கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாயைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். இப்போது நாய் வளர்ப்பது இவற்றையெல்லாம் கடந
9 மாதம் முதல் 9 வயது வரை!
Updated on
2 min read

வீ ட்டுக்காவலுக்கு நாய் வளர்த்தார்கள். அழகுக்காக நாய் வளர்த்தார்கள். வாக்கிங் போகும்போது கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாயைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். இப்போது நாய் வளர்ப்பது இவற்றையெல்லாம் கடந்த ஒன்றாகிவிட்டது. இப்போது நாய் கண்காட்சிகளில் பங்கேற்க நாய்களை வளர்க்கிறார்கள்.

 உதகையில் மட்டுமின்றி நாடு முழுதும் நடைபெறும் நாய் கண்காட்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நாய் கண்காட்சியில் பங்கேற்பவர்களும் ஆயிரக்கணக்கில் செலவழித்துப் பங்கேற்கின்றனர்.

 யார் வேண்டுமானாலும் நாய் வளர்க்கலாம். ஆனால், இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக நாய்களைத் தயார்ப்படுத்துவது என்பது மிகக்கடினமான காரியமாகும். நாய் கண்காட்சிகளில் நாய்கள் நிற்கும் பாங்கு, நடக்கும் பாங்கு என ஒவ்வொன்றுக்கும் ஒருவித மார்க் உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நாம் சாப்பிடும் உணவிலேயே கொஞ்சம் கொடுத்தால் போதும். ஆனால், இதுபோன்ற கண்காட்சிகளில் பங்கேற்கும் நாய்களுக்கு அப்படிக் கொடுக்க முடியாது. அவற்றுக்கென சிறப்பு உணவு, மருத்துவம், தினசரிக் குளியல், முடி பராமரிப்பு, நடைப் பயிற்சி, ஓட்டப்பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.

 இவ்வாண்டில் உதகையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு பிரிவில் சிறந்த நாய் பட்டத்தை பெற்ற நாயின் உரிமையாளரான உதகையை சேர்ந்த ஆர்.தனசேகர் மற்றும் இந்தியா முழுதும் நடைபெறும் நாய் கண்காட்சிகளில் பங்கேற்று வரும் உதகையை சேர்ந்த ரவி ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

 ""உலகில் நாய்கள் சுமார் 200 ரகங்களில் உள்ளன. இவை நாய் கண்காட்சியின்போது போட்டிகளில் பங்கேற்கும் வகையில் யுடிலிடி, ஹவுண்டு, ஒர்க்கிங், டாய் மற்றும் பேஸ்டல் என 5 குழுவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாய் வளர்ப்பது வேறு, நாய் கண்காட்சிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது வேறு. நாய் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் அவற்றை உருவாக்குவது ஒரு கலையாகும். தினந்தோறும் அவற்றுடன் குறைந்தது 6 மணி நேரமாவது செலவிட வேண்டும். அவற்றுக்கு உடற்பயிற்சி அளிக்கும்போது நமது உடலுக்கும் உடற்பயிற்சி கிடைக்கிறது. போட்டியில் பங்கேற்கும் நாய்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.250 செலவாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தால் அவற்றைப் பராமரிப்பதற்கெனத் தனியாக ஆள் வைக்க வேண்டும்.

 ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைப் பொறுத்தமட்டில் ஜெர்மனியில் அந்த நாய்கள் எந்த வகையில் இருக்கிறதோ அதற்கேற்ற வகையிலேயே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் நாய்களும் இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நாய் கண்காட்சியில் பங்கேற்கும் நாய்களுக்கு அவற்றின் தலை, வால், உடற்பகுதி, அனாடமி, நிறம், பற்கள் என ஒவ்வொன்றும் பரிசோதிக்கப்படுகிறது.

 இவ்வாண்டு உதகையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த எட்டு நாய்களைவிட உதகையிலிருந்து கொண்டு சென்ற எங்களது நாய்தான் முதலிடத்தைப் பிடித்தது என்றால், ஜெர்மனி நாய்களைவிட இங்கு வளரும் நாய்களே பிரமாதமாக இருப்பதாகவே அர்த்தம். இவற்றைத் தேர்வு செய்வது உள்நாட்டு நீதிபதிகளல்ல. வெளிநாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற சிறந்த நடுநிலையாளர்களைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த பெருமைதான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு.

 பொதுவாக நாய் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் அவர்களுடைய நாய் சிறப்பிடம் பெற்றவுடன் அவற்றின் குட்டிகளை விற்று பெருமளவு சம்பாதிக்கின்றனர் என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறானது. ஜெர்மன் ஷெப்பர்டை பொறுத்த மட்டில் ஓராண்டில் நாய் குட்டிகளின் விற்பனை மூலம் ரூ.50,000 வரை வருமானம் கிடைக்கும். ஆனால், அவற்றுக்குச் செலவிடும் தொகையோ அதைப்போல இரண்டு மடங்காகும். அதனால் நாய் கண்காட்சியில் பங்கேற்க நாய்களைத் தயார்ப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது.

 நாய் கண்காட்சிகளில் பங்கேற்கும் நாய்களின் வயது ஒன்பதாவது மாதத்திலிருந்து ஒன்பது வயது வரை இருக்கலாம். சில நாய்கள் 15 வயது வரையிலும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளன. அதனால், போட்டிகளில் பங்கேற்கும் நாய்களுக்கு வயது முக்கியமல்ல. அவற்றின் உடல்வாகுதான் முக்கியம். அதற்கேற்ப அவற்றைத் தயார்ப்படுத்த வேண்டிய பொறுப்பு வருடம் முழுதும் உள்ளது.

 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களுக்காக ஆண்டில் ஒருமுறை நடத்தப்படும் இந்தியன் சீகர் ஷோ என்ற போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டுமென்பதே ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வளர்க்கும் ஒவ்வொருவரின் கனவாகும். அதேபோல, பிரீட் இன் இந்தியன் டிராபி, பெஸ்ட் பிரீட் இன் இந்தியன் டிராபி என்றெல்லாம் போட்டிகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பட்டங்களை நாங்கள் தக்க வைத்துள்ளோம்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com