
ஈரல் திசுக்களைக் காக்கும் கீழாநெல்லி மூலிகையின் பயன்பாடுகள் ஏற்கனவே நன்கு அறிமுகமானதே. ஆனால் அவற்றின் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மைகள், பல்வேறு சங்க காலக் குறிப்புகளில் காணப்பட்டாலும், அறிவியல் ஆராய்ச்சிபூர்வப் பயன்பாடுகள் பற்றி ஆராய்ச்சிக் குறிப்புகள் அதிகம் காணப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் புற்றுநோய் மருந்துகளைக் கண்டறியும் சோதனைக்கூட ஆய்வுகளில் எலும்பு மஜ்ஜையிலிருந்து பெறப்படும் குறுந்தணுக்கள் பயன்பாடு என்னும் ஆராய்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சியில் பிலான்தஸ் அமரஸ் என்னும் கீழாநெல்லியின் வகை மூலிகைச் சாற்றின் மருத்துவ மற்றும் காப்புத் திறன் மதிப்பீடு செய்யப்பட்டது.
மூலிகைச் சாறு "சாக்ஸலெட்' முறையில் பிரித்தெடுக்கப்பட்டுப் பொடியாக்கப்பட்டது. இப்பொடி வெவ்வேறு அளவுகளில் ஆய்வுகள் மாற்றமடைந்த குறுந்தணுக்களில் (ஸ்டெம் செல்) பயன்படுத்தப்பட்டுப் புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்பட்டது.
மூலிகைச் சாறு, கோழியின் சினைக்கரு, குட்டி ஆட்டின் ஈரல் மற்றும் எலும்பு மஜ்ஜையிலிருந்து பெறப்பட்ட அணுக்களைக் காக்கும் திறன் கொண்டுள்ளவை என்பதும் கண்டறியப்பட்டது.
எனவே நாம் நன்கறிந்த ஈரல் நோய்க்கு மட்டுமின்றிப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தாகவும் கீழாநெல்லி செயல்படும் தன்மையுடையது என்பது ஆராய்ச்சி முடிவுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி: கால்நடைக் கதிர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.